Mari Selvaraj - சாதி பார்த்து வாய்ப்பளிக்கிறாரா மாரி செல்வராஜ்.. அவரே கொடுத்த விளக்கம் இதோ
சென்னை: Mari Selvaraj (மாரி செல்வராஜ்) மாரி செல்வராஜ் சாதி பார்த்துதான் வாய்ப்பளிக்கிறார் என சர்ச்சை எழுந்த சூழலில் அதற்கு அவர் விளக்கம் அளித்திருக்கிறார்.
பரியேறும் பெருமாள், கர்ணன் ஆகிய இரண்டு படங்களிலேயே மிகப்பெரிய கவனத்தை பெற்றுவிட்டார் மாரி செல்வராஜ். ராமிடம் அலுவலக உதவியாளராக இணைந்து பின்னர் கலையை கற்று இயக்குநராக அறிமுகமானார். அடிப்படையில் எழுத்தாளரான இவர் தனது கதைகளில் காத்திரமான அரசியலையும், சமத்துவத்தையும் பேசக்கூடியவர். இதனாலேயே அவரை சுற்றி புகழ்ச்சிகளும், சர்ச்சைகளும் வட்டமடித்துக்கொண்டிருக்கின்றன.

மாமன்னன்: இவர் கடைசியாக இயக்கிய படம் மாமன்னன். இந்தப் படமும் இதுவரை யாரும் பேசாத அரசியலையும், சமத்துவத்தையும் பொட்டில் அடித்தாற்போல் பேசியிருக்கிறது. உதயநிதி ஸ்டாலின், வடிவேலு, ஃபகத் பாசில் உள்ளிட்டோர் நடித்திருக்கின்றனர். படம் விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் மெகா ஹிட்டாகியிருக்கிறது. தனது கடைசி படம் இவ்வளவு பெரிய ஹிட்டாகியிருப்பது உதயநிதியை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
சர்ச்சை மாரி: இதற்கிடையே மாமன்னன் படத்தின் ஆடியோ வெளியீட்டு விழாவிலிருந்து மாரி செல்வராஜை சுற்றி சர்ச்சைகள் எழுந்த வண்ணம் இருந்தன. தேவர் மகன் படம் பற்றி கமல் ஹாசனுக்கு 13 வருடங்கள் முன்பு எழுதிய கடிதம், ஆடியோ வெளியீட்டு விழாவில் அவர் கமல் ஹாசனை வைத்துக்கொண்டே பேசிய பேச்சு என மாரிக்கு கண்டனும், பாராட்டும் ஒருசேர வந்தது. ஆனால் அந்தப் பேச்சு தவறாக புரிந்துகொள்ளப்பட்டதாக மாரி செல்வராஜ் விளக்கமும் அளித்துவிட்டார்.
அடுத்த சர்ச்சை: சூழல் இப்படி இருக்க பேட்டி ஒன்றில் பேசிய உதயநிதி ஸ்டாலின், உதவி இயக்குநர்களுக்கெல்லாம் அடிதான் என சொன்ன ஒரு வார்த்தை; மாரி செல்வராஜ் உதவி இயக்குநர்களை அடிப்பாரா?; சமத்துவம் பேசும் ஒருவர் ஏன் மற்றொருவரை தாக்க வேண்டும் என அடுத்த கேள்வி முன்வைக்கப்பட்டது. அதோடு மட்டுமின்றி அவர் சாதி பார்த்துதான் நடிப்பதற்கோ இல்லை தன்னிடம் உதவி இயக்குநராக சேர்வதற்கோ வாய்ப்பு கொடுப்பார் என்ற தகவலும் பரவியது. ஆனால் அதனை அவரது உதவி இயக்குநர்களும், நெருங்கியவர்களும் மறுத்தனர்.
மாரியின் விளக்கம்: இந்நிலையில் சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில் இதுகுறித்து பேசியிருந்த மாரி செல்வராஜ், "நான் 15 வருடங்கள் சினிமாவுல கஷ்டப்பட்டு வந்திருக்கிறேன். எனவே நான் இருக்கேன் என்கிற நம்பிக்கையில் சில பேர் வரத்தான் செய்வார்கள். அதுமாதிரி ஒன்னு ரெண்டு நடக்கத்தான் செய்யும். நான் வரும்போது எனக்கு யாருமே இல்ல. நான் கஷ்டப்பட்ட மாதிரியே எல்லாரும் கஷ்டப்படனும்னு அவசியமும் இல்லை.
இரஞ்சித்தும், ராமும்: எனக்கு பா.இரஞ்சித் அண்ணன் பெரிய வெளி ஒன்றை உருவாக்கிக்கொடுத்தார். அவர் மட்டும் இல்லை என்றால் இவ்வளவு வீரியமான படங்கள் செய்திருப்பேனா என எனக்கு தெரியாது. சக மனிதர்களோட உதவி இல்லாமல் இங்க யாருமே ஜெயிக்க முடியாது. ராம் சார் மட்டும் இல்லயென்றால் நான் என்ன ஆகிருப்பேன் என தெரியாது. என்கூட வேலை செய்யும் எல்லாருக்கும் தெரியும், நான் சாதி பார்த்து வாய்ப்பளிப்பதில்லை என்று. எல்லாரும் வேற வேற வாழ்வியலில் இருந்து வந்தவர்கள்" என்றார்.


Click it and Unblock the Notifications











