Mari Selvaraj -ஒருவழியாக துருவ் விக்ரமை கண்டுகொண்ட மாரி செல்வராஜ்.. ஷூட்டிங் ஸ்டார்ட்
சென்னை: Mari Selvaraj (மாரி செல்வராஜ்) துருவ் விக்ரமை வைத்து மாரி செல்வராஜ் இயக்கப்போகும் படம் குறித்த தகவல் வெளியாகியிருக்கிறது.
தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குநராக திகழ்ந்துகொண்டிருக்கிறார் மாரி செல்வராஜ். அவர் இயக்கிய பரியேறும் பெருமாள் திரைப்படம் பெரும் வரவேற்பை பெற்று ஆகச்சிறந்த படமாக ரசிகர்களால் கருதப்படுகிறது. இதனையடுத்து கர்ணன் படத்தை இயக்கினார். இரண்டு படங்கள் மூலம் தன்னுடைய படைப்பு யாரும் பேசாத கதைக்களத்தை பேசும் என்ற அடையாளத்தை உருவாக்கியிருக்கிறார்.

துருவ் விக்ரம்: கர்ணன் படத்தை முடித்துவிட்டு விக்ரமின் மகனான துருவ் விக்ரமை வைத்து படம் இயக்க கமிட்டானார். துருவ்வின் முதல் படமான ஆதித்ய வர்மா படுதோல்வியை சந்தித்ததால் நிச்சயம் மாரி செல்வராஜின் படம் பெரும் வெற்றியை தரும் என்ற நம்பிக்கை துருவ்வுக்கும் அவரது தந்தையான விக்ரமுக்கும் இருந்தது. ஆனால் உதயநிதி அழைத்ததால் மாமன்னன் படத்தை இயக்க சென்றுவிட்டார் மாரி.
என்ன கதை: துருவ் விக்ரமை வைத்து கபடி வீரரின் வாழ்க்கை வரலாறை படமாக்க திட்டமிட்டிருந்தார். தூத்துக்குடி அருகே ஒரு கிராமத்தில் பிறந்து அர்ஜுனா விருது வென்ற மானத்தி கணேஷின் வாழ்க்கைதான் படமாக இருக்கிறது. இதற்காக துருவ் விக்ரம் தீவிரமாக கபடி பயிற்சியிலும் ஈடுபட்டிருந்தார். ஆனால் மாரி செல்வராஜோ மாமன்னனில் பிஸியாக இருந்தார்.
வாழை: அதேபோல் மாமன்னனை முடித்த மாரி செல்வராஜ் கையோடு தானே தயாரித்து வாழை படத்தை இயக்கியும் முடித்துவிட்டார். அந்தக் கதை முழுக்க முழுக்க சிறுவர்களை மையப்படுத்தி எடுக்கப்பட்டிருக்கிறது. இப்படி மாமன்னன், வாழை ஆகிய படங்களில் கவனம் செலுத்திய மாரி துருவ் விக்ரமை கண்டுகொள்ளவில்லை என்ற பேச்சு அண்மைக்காலமாக ஓடிகொண்டிருந்தது.
ஷூட்டிங் ஸ்டார்ட்: இந்நிலையில் வாழை படத்தை முடித்துவிட்ட மாரி செல்வராஜ் துருவ் விக்ரமின் படத்தை கையில் எடுத்திருக்கிறார். அதன்படி இந்த மாதத்துக்குள் தூத்துக்குடியில் படத்தின் ஷூட்டிங் தொடங்கவிருக்கிறது. 90கள் காலகட்டத்தில் படம் உருவாகவிருப்பது குறிப்பிடத்தக்கது. தனக்கு பெரும் திருப்புமுனையை கொடுத்த பாலா தன்னுடைய மகனுக்கும் பிரேக் கொடுப்பார் என விக்ரம் எதிர்பார்த்திருந்தார். ஆனால் அர்ஜுன் ரெட்டி ரீமேக்கான வர்மா விக்ரமுக்கு திருப்தியை கொடுக்கவில்லை. அதனால் அந்தப் படம் ஆதித்ய வர்மா என்ற பெயரில் மீண்டும் ஷூட் செய்யப்பட்டு ரிலீஸ் ஆனது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











