Mari Selvaraj Salary - மாமன்னன் மாரி செல்வராஜுக்கு சம்பளம் என்ன தெரியுமா?
சென்னை: Mari selvaraj Salary (மாரி செல்வராஜ் சம்பளம்) மாமன்னன் படத்துக்காக இயக்குநர் மாரி செல்வராஜ் பெற்ற சம்பளம் குறித்த தகவல் வெளியாகியிருக்கிறது.
பரியேறும் பெருமாள், கர்ணன் ஆகிய படங்களைத் தொடர்ந்து மாரி செல்வராஜ் மாமன்னன் படத்தை இயக்கியிருக்கிறார். படத்தில் உதயநிதி ஸ்டாலின், வடிவேலு, ஃபகத் பாசில், கீர்த்தி சுரேஷ் உள்ளிட்டோர் நடித்திருக்கின்றனர். ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்திருக்கிறார். மிகப்பெரிய எதிர்பார்ப்போடு இந்தப் படம் கடந்த ஜூன் 29ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது.

எப்படி இருக்கு படம்?: உதயநிதியின் கடைசி படம் என்பதாலும், மாரி செல்வராஜின் இயக்கம் என்பதாலும் ரசிகர்கள் ஆர்வத்துடன் திரையரங்குக்கு சென்றனர். எதிர்பார்த்தபடியே படம் மிகச்சிறப்பாக இருக்கிறது என்றும்; வழக்கம்போல் மாரி செல்வராஜ் இந்தப் படத்திலும் சமத்துவத்தை பேசியிருக்கிறார் என்றும் ரசிகர்கள் புகழாரம் சூட்டிவருகின்றனர்.
வடிவேலு, ஃபகத்: குறிப்பாக படத்தில் வடிவேலுவின் கதாபாத்திரம் மிக அருமையாக வந்திருக்கிறது. இனி தொடர்ந்து மாரி செல்வராஜ் இயக்கத்தில் வடிவேலு நடிக்கும் அளவுக்கு அவரது கதாபாத்திரத்தை மாரி வடிவமைத்திருக்கிறார். நிச்சயம் வடிவேலு ஒரு பிறவி கலைஞன். அதுமட்டுமின்றி இயக்குநர் பட ரிலீஸுக்கு முன்னர் சொன்னது போலவே இதில் வழக்கமான வடிவேலு இல்லை என்றும் சிலாகித்துவருகின்றனர். அதேபோல் ஃபகத் பாசிலின் நடிப்பும் மிரட்டலாக அமைந்திருக்கிறது.
மெகா ஹிட் மாமன்னன்: படத்தின் கதைக்களமும், மாரியின் மேக்கிங்கும் அட்டகாசமாக இருந்ததன் காரணமாக திரையரங்குகளில் கூட்டம் கூடியபடியே இருக்கிறது. எனவே படம் வெளியாகி நான்கு நாட்கள் முடிந்த சூழலில் இதுவரை 20 கோடி ரூபாய்க்கும் வசூலித்திருப்பதாக கூறப்படுகிறது. மாமன்னன் வெற்றியைத் தொடர்ந்து இயக்குநர் மாரி செல்வராஜுக்கு ரெட் ஜெயண்ட் மூவிஸ் சார்பில் மினி கூப்பர் கார் ஒன்று பரிசாக வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

சம்பளம் எவ்வளவு: இந்நிலையில் மாமன்னன் படத்தை இயக்கியதற்காக இயக்குநர் மாரி செல்வராஜுக்கு கொடுக்கப்பட்டிருக்கும் சம்பளம் குறித்த தகவல் வெளியாகியிருக்கிறது. அதன்படி, அவர் இப்படத்தை இயக்குவதற்காக ஐந்து கோடி ரூபாய் சம்பளமாக பெற்றிருக்கிறாராம். தற்போது மாமன்னன் ஹிட்டாகியிருப்பதால் அடுத்தடுத்து அவர் இயக்கும் படங்களுக்கு சம்பளம் உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
பாராட்டிய ரஞ்சித்: இதற்கிடையே மாரி செல்வராஜின் முதல் படமான பரியேறும் பெருமாளை தயாரித்த பா.இரஞ்சித் மாமன்னன் படத்தை ஏகத்துக்கும் புகழ்ந்திருக்கிறார். அதுகுறித்து தனது ட்விட்டர் பக்கத்தில், "மாமன்னன் திரைப்படம், பட்டியலின மக்களின் சட்டமன்ற உறுப்பினர்கள், சமூக நீதியை கொள்கையாக கொண்டுள்ள அரசியல் கட்சியாக இருந்தாலும், கட்சியில் உள்ள மற்ற உயர் வகுப்பினர் சாதி அடிப்படையில் ஏற்றத்தாழ்வுகளை அவர்களுக்கு எப்படி நிகழ்த்துகிறார்கள் என்பதை அப்பட்டமாக காட்சிப்படுத்தி இருக்கிறது.
உண்மையாகவே தனித்தொகுதி MLAக்களுக்கு அதிகாரம் என்னவாக இருக்கிறது? ஏன் பட்டியலின மக்களின் பிரச்சனைகளுக்கு குரல் கொடுக்க பயப்படுகிறார்கள்? சமூக நீதி பேசுகிற கட்சிகளில் இருந்தும் ஊமைகளாக இருப்பதற்கான காரணம் என்ன?அவர்களுக்கான அங்கீகாரமும், அதிகாரமும், பிரதிநிதித்துவமும் சரியாக தரப்படுகிறதா? என்பதற்கான சான்று மாமன்னன்.
உண்மையாகவே பெரும் பாராட்டுக்குரியவர் நடிகர், தயாரிப்பாளர், அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் திமுக கட்சியில் இன்றுவரை பெரும் சவாலாக இருக்கும் சாதி பாகுபாட்டை அவரும் அறிந்தே இருப்பார், அதை களைவதற்கான வேலையை இத்திரைப்படத்தின் வாயிலாக ஆரம்பிப்பார் என்று நம்பிக்கை கொள்வோம். பொட்டி பகடை, வீராயி, ஒன்டிவீரன் என அருந்ததிய மக்களின் வாழ்க்கையின் ஊடாக மாமன்னனை உருவாக்கி பெரும் வெற்றியை பெற்ற மாரி செல்வராஜ், வடிவேலு மற்றும் குழுவினர் அனைவருக்கும் வாழ்த்துகள்" என குறிப்பிட்டிருந்தார்.


Click it and Unblock the Notifications











