கார்த்திக் நேத்தாவை பார்த்தால் பயம்.. அவர் வாழ்க்கையை படமாக எடுப்பேன்.. மாரி செல்வராஜ் ஓபன் டாக்
சென்னை: மாரி செல்வராஜ் தமிழ் சினிமாவின் முக்கியமான இயக்குநர்களில் ஒருவராக இருக்கிறார். அவரது இயக்கத்தில் கடைசியாக வெளியான வாழை திரைப்படம் பெரிய வெற்றியை பெற்றது. இப்போது அவர் விக்ரமின் மகன் துருவ்வை வைத்து பைசன் - காளமாடன் திரைப்படத்தை இயக்கிவருகிறார். இந்நிலையில் அதர்வா நடித்திருக்கும் DNA படத்தின் ஆடியோ வெளியீட்டு விழாவில் அவர் பேசிய விஷயம் சமூக வலைதளங்களில் ட்ரெண்டாகியிருக்கிறது.
ராமிடம் உதவி இயக்குநராக பணியாற்றியவர் மாரி செல்வராஜ். கற்றது தமிழ், தங்க மீன்கள் உள்ளிட்ட படங்களில் உதவி இயக்குநராக இருந்த அவர் பரியேறும் பெருமாள் படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானார். முதல் படத்தையே தரமாக கொடுத்து ஒட்டுமொத்த தமிழ் சினிமாவையும் தன்னை பார்க்க வைத்தார். அந்தப் படத்தில் வந்த வசனங்கள், க்ளைமேக்ஸ் ஷாட் என அனைத்துமே பக்காவாக இருந்ததன் காரணமாக படம் மிகப்பெரிய வெற்றியை பெற்றது. அந்தப் படத்தை முடித்துவிட்டு உண்மை சம்பவத்தை வைத்து அந்தப் படம் உருவாக்கப்பட்டிருந்தாலும் வரலாற்றை மாரி செல்வராஜ் திரித்து படத்தில் காட்டிவிட்டார் என்று விமர்சனங்களும் எழுந்தன.
மாமன்னன் மாரி செல்வராஜ்: இரண்டு படங்களின் வெற்றிக்கு பிறகு உதயநிதி ஸ்டாலினை வைத்து மாமன்னன் படத்தை இயக்கினார் அவர். இந்தப் படமும் யாரும் பேசாத அரசியலை பேசியது. உதயநிதிக்கு இது கடைசி படம் என்பதும் குறிப்பிடத்தக்கது. முக்கியமாக வடிவேலு பல வருடங்களுக்கு பிறகு இந்தப் படத்தில் தரமான கம்பேக் கொடுத்தார். அவரை இன்னொரு பரிணாமத்தில் மாரி செல்வராஜ் காட்டியிருந்தது ரசிகர்களிடையே ஆச்சரியத்தை ஏற்படுத்தி அப்ளாஸை அள்ளிக்கொடுத்தது.
கொண்டாடப்பட்ட வாழை: இப்படி மூன்று படங்கள் இயக்கிய அவர் நான்காவது படமான வாழையில் தன்னுடைய வாழ்க்கையில் நடந்த துயர சம்பவங்களை பேசினார். அதுவும் பெரும்பாலானோரால் கொண்டாடப்பட்டது. ஆனால் எழுத்தாளர் சாரு நிவேதிதா உள்ளிட்டோரால் விமர்சனம் செய்யப்பட்டது. அடுத்ததாக அவர் விக்ரமின் மகன் துருவ் விக்ரமை வைத்து பைசன் - காளமாடன் என்ற படத்தை இயக்கிவருகிறார். இதனை முடித்துவிட்டு தனுஷை வைத்து ஒரு படம் இயக்கப்போகிறார்.

மாரி செல்வராஜின் பேச்சு: இந்நிலையில் நெல்சன் வெங்கடேசன் இயக்கத்தில் அதர்வா, நிமிஷா சஜயன் உள்ளிட்டோர் நடித்திருக்கும் DNA திரைப்படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா நேற்று சென்னையில் நடந்தது. அதில் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்ட மாரி செல்வராஜ் பிரபல பாடலாசிரியர் கார்த்திக் நேத்தா குறித்து பேசினார். விழாவில் பேசிய அவர், "கார்த்திக் நேத்தாவும் நானும் இதுவரை சேர்ந்து பணியாற்றியதில்லை. இரண்டு பேரும் சேர்ந்து பணியாற்ற முடியுமா என்றும் தெரியவில்லை.
அவ்வளவு வாழ்வியல்: ஏனெனில் எங்கள் இரண்டு பேருக்கும் அவ்வளவு பெரிய வாழ்க்கை இருக்கிறது. உண்மையாகவே நான் ஒரு கவிஞனின் வாழ்க்கை வரலாற்றை படமாக எடுக்க வேண்டும் என்று ஆசைப்பட்டால் கார்த்திக் நேத்தாவின் வாழ்க்கையை படமாக எடுப்பேன். தமிழ் வாழ்வோடு கொந்தளிப்பு, அவமானம், ஏக்கம், நிதானமற்ற தன்மை, வெறி, யாரும் எனக்கு வேண்டாம் என்று இருந்த ஒருவர்; இன்று எல்லோரும் எனக்கு வேண்டும் என்ற விருப்பம் இப்படி எல்லாமே நிரம்ப பெற்ற கவிஞன் கார்த்திக் நேத்தா. நாங்கள் இரண்டு பேரும் அண்ணன் தம்பியாக வாழ்ந்திருக்கிறோம். சண்டை போட்டிருக்கிறோம். நான் அவரை பார்த்து பயந்திருக்கிறேன். இந்த மேடையில் கம்பீரமாக பார்த்தது அவரை மட்டும்தான். அவரை பார்க்கும்போது வாழ்க்கை இவ்வளவு பெரிய மாற்றத்துக்கு உட்பட்டது என்பதை உணர்ந்துகொள்கிறேன்.
காட்டாற்று வெள்ளம்: கார்த்திக் நேத்தா காட்டாற்று வெள்ளம் போன்ற ஒரு ஆள். இப்போது நிதானமாக தெளிவாக அருமையான பாடல்களை கொடுத்துக்கொண்டிருக்கிறார். கார்த்திக் நேத்தா மாதிரி நிறைய பேர் இருக்கிறார்கள். அவர்கள் எல்லாம் வந்தால் தமிழ் இலக்கியமும், சினிமாவும் வேறு மாதிரி மாறும்" என்றார். முன்னதாக தொட்டி ஜெயா படத்தில் பாடல்கள் எழுத ஆரம்பித்த கார்த்திக் நேத்தா இப்போது தமிழின் டாப் பாடலாசிரியர்களில் ஒருவராக இருக்கிறார். சமீபத்தில் வெளியான தக் லைஃப் திரைப்படத்தில் விண்வெளி நாயகா, அஞ்சு வண்ண பூவே ஆகிய இரண்டு பாடல்களை எழுதியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











