Vijay - அவருடன் விஜய் கூட்டணி அமைக்க வேண்டும்.. ஆசையை சொன்ன மாரி செல்வராஜ்.. நிறைவேற்றுவாரா தளபதி
சென்னை: Vijay(விஜய்) நடிகர் விஜய் யாருடைய இயக்கத்தில் நடிக்க வேண்டும் என்று இயக்குநர் மாரி செல்வராஜ் தனது ஆசையை தெரிவித்திருக்கிறார்.
விஜய் நடிப்பில் கடைசியாக லியோ திரைப்படம் வெளியானது. லோகேஷ் கனகராஜ் அந்தப் படத்தை இயக்கியிருந்தார். த்ரிஷா, அர்ஜுன், சஞ்சய் தத் உள்ளிட்ட பலர் நடித்திருந்த அந்தப் படம் சூப்பர் ஹிட்டானது. இருந்தாலும் விமர்சன ரீதியாக முழு வரவேற்பை படம் பெறவில்லை. அதேசமயம் வசூல் ரீதியாக சக்கைப்போடு போட்டிருக்கிறது. இதுவரை 600 கோடி ரூபாய்க்கும் மேல் படம் வசூலித்திருப்பதாக கூறப்படுகிறது.

தளபதி 68: லியோ படத்தில் நடித்துக்கொண்டிருந்தபோதே விஜய்யின் 68ஆவது படம் குறித்த அறிவிப்பு வெளியானது. யாரும் எதிர்பாராத வகையில் அந்தப் படத்தை வெங்கட் பிரபு இயக்குகிறார். ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிக்க யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்கிறார். இதில் பிரபுதேவா, பிரசாந்த், லைலா, சினேகா, மீனாட்சி சௌதரி, மைக் மோகன், ஜெயராம் என பலர் நடிக்கிறார்கள்.
ஷூட்டிங்: படத்தின் பூஜை பிரசாத் ஸ்டூடியோவில் போடப்பட்டு அங்கு வைத்து ஒரு பாடல் ஷூட் செய்யப்பட்டது. அதனைத் தொடர்ந்து பாங்காக் பறந்த படக்குழு அங்கு வைத்து ஆக்ஷன் காட்சிகளையும், இன்னும் சில காட்சிகளையும் எடுத்தது. அதுதொடர்பாக தயாரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தியே அதிகாரப்பூர்வமாக ட்வீட் செய்திருந்தது குறிப்பிடத்தக்கது.
அடுத்த பட இயக்குநர்: தளபதி 68 ஷூட்டிங்கே இன்னும் முடியாத சூழலில் விஜய்யின் அடுத்த பட இயக்குநர் குறித்த தகவல்கள் வெளியாகிவருகின்றன. அதன்படி விஜய்யின் ஃபேவரடைட்டான இயக்குநர் அட்லீதான் அந்தப் படத்தை இயக்கவிருக்கிறார் என்று கூறப்படுகிறது. அதேசமயம் கடந்த சில காலமாகவே வெற்றிமாறனும், விஜய்யும் இணைய வேண்டும் என்பது ரசிகர்களின் விருப்பமாக இருக்கிறது.
ரெடியான வெற்றிமாறன்: இதுதொடர்பாக பேசிய வெற்றிமாறன் விஜய்யுடன் இணைய நான் தயார் என்றும் கூறியிருந்தார். அதேபோல் விஜய்யும் வெற்றிமாறனும் சில மாதங்களுக்கு முன்பு சந்தித்தனர் என்றும் அப்போது வெற்றி சொன்ன கதை விஜய்க்கு பிடித்துவிட்டதால் இருவரும் இணைவதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகலாம் என்றும் திரைத்துறையில் பேச்சு ஓடிக்கொண்டிருக்கிறது.
மாரியின் ஆசை: இந்நிலையில் இயக்குநர்கள் மணிரத்னம், வெற்றிமாறன், சுதா கொங்கரா, மாரி செல்வராஜ், மடோன் அஸ்வின், பி.எஸ்.வினோத்ராஜ் ஆகியோர் சமீபத்தில் ஒரு பேட்டியில் கலந்துகொண்டனர். அப்போது பேசிய மாரி செல்வராஜ், "வெற்றிமாறனுடன் விஜய் இணைய வேண்டும். அப்படி அவர்கள் இரண்டு பேரும் இணைந்தால் கண்டிப்பாக அந்தப் படம் மிகப்பெரிய வசூல் சாதனையை படைக்கும்" என்றார். மாரி செல்வராஜ் விஜய்யின் தீவிர ரசிகர் என்பது குறிப்பிடத்தக்கது. அவரது ஆசையை நிறைவேற்றுவாரா விஜய்?.. பொறுத்திருந்து பார்ப்போம்.


Click it and Unblock the Notifications











