உங்கள் படத்தில் கர்ணன் பெயரா?.. ஏத்துக்க முடியல.. மாரி செல்வராஜிடம் சாதி பார்த்ததா சென்சார் போர்டு
சென்னை: Mari Selvaraj (மாரி செல்வராஜ்) இயக்குநர் மாரி செல்வராஜ் தணிக்கை குழுவினர் பற்றி பேசியிருக்கும் விஷயம் அதிர்ச்சியை உண்டாக்கியிருக்கிறது.
இயக்குநர் ராமிடம் உதவி இயக்குநராக இருந்து பரியேறும் பெருமாள் படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானவர் மாரி செல்வராஜ். முதல் படமே மெகா ஹிட்டாகி முக்கியத்துவம் வாய்ந்த இயக்குநர்கள் என்ற லிஸ்ட்டில் அவர் இணைந்தார். அதிலும் அப்படத்தின் ஒவ்வொரு காட்சியையும் பார்த்து பார்த்து செதுக்கியிருந்தார் மாரி.

முன்னணி இயக்குநர்: இரண்டாவதாக கர்ணன் படத்தை இயக்கினார். பரியேறும் பெருமாள் அளவுக்கு பெரும் வரவேற்பு கிடைக்கவில்லை என்றாலும் டீசண்ட்டான வரவேற்பு கிடைத்தது. கடைசியாக அவர் மாமன்னன் படத்தை இயக்கினார். அந்தப் படம் மெகா ஹிட்டானது. அடுத்ததாக வாழை படம் அவரது இயக்கத்தில் நேரடியாக ஹாட் ஸ்டார் ஓடிடி தளத்தில் வெளியாகவிருக்கிறது.
உண்மை சம்பவம்: மாரி செல்வராஜ் கர்ணன் படத்தை கொடியங்குளம் கலவரத்தை அடிப்படையாக வைத்து உருவாக்கினார். இந்த சூழலில் சமீபத்தில் அவர் ஒரு பேட்டியில் கலந்துகொண்டார். அப்போது தணிக்கை குழு பற்றி அவர் கூறிய விஷயங்கள் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளன. அவர் அளித்த பேட்டியில், "கர்ணன் படத்தை சென்சாருக்காக எடுத்துச்சென்றேன். அப்போது காவல் நிலையத்தை தாக்கும் காட்சியை நீக்க சொன்னார்கள்.
ஒத்துக்கொள்ளவில்லை: ஆனால் அதற்கு நான் ஒத்துக்கொள்ளவில்லை. மேலும் இதற்கு முன்னர் வந்த படங்களில் காவல் நிலையங்களில் குண்டு வெடித்திருக்கிறது. முதலமைச்சரின் பாதுகாப்பு வாகனம் வெடித்திருக்கிறது. இதற்கெல்லாம் அனுமதி வழங்கினீர்களே என்று கேட்டேன். அதற்கு அவர்களோ, அந்தக் காட்சிகளால் எந்த ஒரு தாக்கமும் ஏற்படாது. அதனை ஒரு வீடியோ கேம் போல் மக்கள் நினைத்துக்கொள்வார்கள். ஆனால் இதில் அப்படி இல்லை என்றார்கள்.
சண்டை செய்தேன்: இருந்தாலும் என்னுடைய முடிவிலிருந்து நான் பின்வாங்கவில்லை. அந்தக் காட்சி எனக்கு வேண்டுமென்று அவர்களிடம் சண்டை செய்தேன். கர்ணனில் எல்லாமே எளிமையாகவும் அதன் உண்மைத்தன்மை கெடாத அளவுக்கு கையாளப்பட்டும் பிரச்னை ஏற்பட்டது. என்னுடைய அனைத்து படங்களுக்கும் சென்சாரில் பிரச்னைதான். ஒரு கம்பெடுத்து காவல் நிலையத்தை அடிப்போது போன்று நான் எடுத்த விஷயம் கதைப்படி தார்மீகமான கோபம்.
உங்கள் படத்தில் கர்ணனா?: கர்ணன் படத்தின் தணிக்கையின்போது எந்த அதிகாரியும் சொல்லக்கூடாது பதிலை என்னிடம் அவர்கள் சொன்னார்கள். ஒரு அதிகாரி என்னிடம், 'இதை சொன்னால் நீங்கள் வருத்தப்படுவீர்கள். ஆனால் நீங்கள் எங்களிடம் சண்டையிட்டதால் நான் இதை சொல்கிறேன். கர்ணன் என்ற பெயர் மற்ற திரைப்படங்களில் வரலாம். ஆனால் மாரி செல்வராஜ் படத்தில் வருவதை எங்களால் அனுமதிக்க முடியாது என்றார்கள். பிறகு அனுமதித்தார்கள். மாமன்னன் திரைப்பட கதையை எழுதும்போது அந்த வார்த்தை என்னை முழுவதுமாக ஆக்கிரமித்துவிட்டது" என்றார்.
இந்தப் பேட்டியை பார்த்த நெட்டிசன்கள் ஏன் மாரி செல்வராஜின் படத்தில் கர்ணன் பெயர் வரக்கூடாதா. தணிக்கை குழுவிலும் இப்படி சாதி பார்க்கிறார்களா என கேள்வி எழுப்பிவருகின்றனர். இதற்கிடையே கர்ணன் படத்திலும் காவல் துறை அதிகாரியாக வரும் கண்ணபிரான் கதாபாத்திரம், கர்ணன் என்ற பெயரை ஏன் வைத்தீர்கள் என அடிக்கும் காட்சி இடம்பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











