இருட்டு அறையில் தனியாக.. அவ்வளவு பயமாக இருந்தது.. பாலா பற்றி மாரி செல்வராஜ் ஓபன் டாக்
சென்னை: பாலா இயக்கத்தில் வணங்கான் திரைப்படம் ஜனவரி 10ஆம் தேதி ரிலீஸாகவிருக்கிறது. இதில் அருண் விஜய், ரோஷினி பிரகாஷ், மிஷ்கின், சமுத்திரகனி உள்ளிட்டோர் நடித்திருக்கின்றனர். பாடல்களுக்கு ஜிவி பிரகாஷும், பின்னணி இசையை சாம். சி.எஸ்ஸும் உருவாக்கியிருக்கிறார்கள். நீண்ட நாட்கள் கழித்து பாலாவின் படம் வருவதால் படத்தை பார்ப்பதற்கு ரசிகர்கள் ஆர்வத்துடன் இருக்கிறார்கள். இந்தச் சூழலில் பாலா குறித்து இயக்குநர் மாரி செல்வராஜ் பேசியிருக்கிறது.
பாலா என்றால் இந்தியா முழுவதும் அனைவருமே அறிவார்கள். சேது, நந்தா, பிதாமகன், நான் கடவுள், பரதேசி என அவர் இயக்கிய படங்கள் கல்ட் க்ளாசிக்காக நிற்பவை. விளிம்பு நிலை மனிதர்களின் வாழ்க்கையை அப்பட்டமாக கூறும் இயக்குநர்களில் முக்கியமானவர் பாலா. பிதாமகன், நான் கடவுள் ஆகிய படங்களுக்காக அவர் தேசிய விருதையும் வென்றிருக்கிறார். அதேபோல் பரதேசி திரைப்படத்தால் அந்தப் படத்தின் ஆடை வடிவமைப்பாளரும் தேசிய விருதினை வென்றார்.

அடையாளம் தந்த பாலா: இப்படி பாலாவின் படத்தில் யார் பணியாற்றினாலும் அவர்களுக்கு தேசிய அளவில் அடையாளம் கிடைத்துவிடும். சூர்யா, விக்ரம், ஆர்யா, அதர்வா ஆகியோருக்கெல்லாம் பாலா இயக்கிய படங்கள் இல்லை என்றால் இவ்வளவு பெரிய வெளிச்சம் கிடைத்திருக்காது. அதை சூர்யா உள்ளிட்டோர் எல்லாம் ஓபனாகவே பல மேடைகளில் சொல்லியிருக்கிறார்கள் என்பது எதார்த்தமான உண்மை. ஆனால் பாலாவோ அதெல்லாம் குறித்து அலட்டிக்கொள்ளாதவர்.
வணங்கான்: இப்படி ஃபுல் ஃபார்மில் இருந்த பாலாவுக்கு சமீப காலமாக சறுக்கல் ஏற்பட்டது. பெர்சனல் வாழ்க்கை என்று எடுத்துக்கொண்டால் அவர் தனது மனைவி மலரை விவாகரத்து செய்தார். அவர்களுக்கு பிரார்த்தனா என்ற மகள் இருக்கிறார். கரியரை எடுத்துக்கொண்டால் விக்ரமுடன் ஏற்பட்ட பிணக்கு பெரும் சங்கடத்தை பாலாவுக்கு ஏற்படுத்தியது. அடுத்ததாக சூர்யாவை வைத்து வணங்கான் படத்தை இயக்கினார். ஆனால் அந்தப் படத்தில் இரண்டு பேரும் சேர்ந்து பணியாற்ற முடியவில்லை.
ஜனவரியில் ரிலீஸ்: அதனையடுத்து அருண் விஜய்யை வைத்து வணங்கான் படத்தை முடித்திருக்கிறார். இதனை சுரேஷ் காமாட்சியுடன் சேர்ந்து பாலாவும் தயாரித்திருக்கிறார். படமானது ஜனவரி 10ஆம் தேதி ரிலீஸ் ஆகவிருக்கிறது. சூழல் இப்படி இருக்க சில வாரங்களுக்கு முன்பு வணங்கான் படத்தின் இசை வெளியீட்டு விழாவும், பாலா 25 நிகழ்ச்சியும் கொண்டாடப்பட்டது. அதில் பலர் சிறப்பு விருந்தினர்களாக கலந்துகொண்டு பாலா குறித்து உணர்வுப்பூர்வமாக பேசினார்கள்.
மாரி செல்வராஜ் பேச்சு: அந்தவகையில் மாரி செல்வராஜ் பேசுகையில், “பரியேறும் பெருமாள் படத்தை பார்த்துவிட்டு பாலா சார் உங்களை பார்க்க விரும்புகிறார் என்று ஃபோன் வந்தது. அதனையடுத்து அவரது ஆஃபிஸுக்கு போனேன். ஒரு பெரிய இருட்டு அறையில் பாலா மட்டும் அமர்ந்திருந்தார். அது எனக்கு பயத்தை கொடுத்தது. பிறகு உள்ளே போன என்னிடம் தம் அடிப்பியா, தண்ணி அடிப்பியா என்று கேட்டார். இல்லை சார் என்றேன். நல்லது அப்படியே இரு என்று சொல்லிவிட்டு ஒரு தங்க செயினை எனது கழுத்தில் போட்டுவிட்டார். பிறகு படம் பற்றி நிறைய பேசினார். அது எனக்கு அவ்வளவு பெருமையாக இருந்தது” என்றார்.


Click it and Unblock the Notifications











