ரஜினியுடன் படம்.. எமோஷனல் பாலா.. வாழை ரிலீஸ் நாளில் மனம் திறந்த மாரி செல்வராஜ்
சென்னை: மாரி செல்வராஜ் இயக்கத்தில் உருவாகியிருக்கும் வாழை திரைப்படம் இன்று வெளியாகியிருக்கிறது. தனது சிறு வயதில் நடந்த சம்பவங்களை அடிப்படையாக வைத்து உருவாகியிருக்கும் அந்தப் படம் மிகப்பெரிய வரவேற்பை பெற்றிருக்கிறது. முக்கியமாக இயக்குநர் பாலா படத்தை பார்த்துவிட்டு உச்சக்கட்ட சோகத்தில் மாரி செல்வராஜை கட்டியணைத்து முத்தம் கொடுத்தார். ரசிகர்களிடமும் பெரும் வரவேற்பை படம் பெற்றிருக்கிறது. இந்தச் சூழலில் இன்று மாரி செல்வராஜ் செய்தியாளர்களை சந்தித்தார்.
இயக்குநர் ராமிடம் அலுவலக உதவியாளராக இருந்தவர் மாரி செல்வராஜ். ராம் இயக்கிய முதல் படமான கற்றது தமிழ் படத்தில் உதவி இயக்குநராக மாறிய மாரி செல்வராஜ் அந்தப் படத்தில் ஒரு காட்சியில் நடிக்கவும் செய்திருப்பார். அதனையடுத்து ராம் இயக்கிய அனைத்து படங்களிலும் உதவி இயக்குநராக இருந்து பரியேறும் பெருமாள் படத்தில் இயக்குநராக அறிமுகமானார். அந்தப் படம் சூப்பர் டூப்பர் ஹிட்டடித்தது. முக்கியமாக மாரியின் காட்சியமைப்பும், வசனமும் பெரும் பாராட்டை அவருக்கு பெற்றுக்கொடுத்தது.

கர்ணன், மாமன்னன்: தான் இயக்கிய முதல் படத்திலேயே நல்ல பெயரை பெற்ற மாரி செல்வராஜ் அடுத்தடுத்த எதிர்பார்ப்பை ரசிகர்களிடம் சந்தித்தார். இரண்டாவது படமாக தனுஷை வைத்து கர்ணன் படத்தை இயக்கினார். அந்தப் படத்தையும் சிறப்பாக இயக்கி சூப்பர் பெயரை பெற்ற மாரி; அடுத்து மாமன்னன் படத்தை இயக்கினார். அப்படமும் இதுவரை யாரும் பேசாத அரசியலை வெள்ளித்திரையில் பேசியது. இதன் காரணமாக அவர் இயக்கிய முதல் மூன்று படங்களுமே முக்கியமான படங்கள் என்ற பெயரை தமிழ் சினிமாவில் பெற்றது.
பேச துணியாத அரசியல்: பா.இரஞ்சித் ஒடுக்கப்பட்டவர்களின் குரலை முழுதாக சினிமாவில் பேச ஆரம்பித்தார். அவர் செல்லும் பாதையில் பயணிக்கும் மாரி செல்வராஜும் ஒடுக்கப்பட்டவர்களின் வலியோடு சேர்ந்து; தன்னுடைய வாழ்க்கையில் நடந்த சம்பவத்தையும் சத்தமாக பேசிவருகிறார். அவர் தனது சிறு வயது மற்றும் கல்லூரி காலத்தில் மிகப்பெரிய வலியை அனுபவித்திருக்கிறார் என்பது அவரது படைப்புக்களை பார்க்கும்போது புரிகிறது.
வாழை: அந்தவகையில் தன்னுடைய சிறுவயதில் ஒரு வருடத்தில் நடந்த சம்பவங்களை அடிப்படையாக வைத்து வாழை படத்தை இயக்கியிருக்கிறார் மாரி. தனது ஊர்க்காரர்கள் மற்றும் நிகிலா விமல், திவ்யா துரைசாமி உள்ளிட்டோரை வைத்து இந்தப் படத்தை இயக்கியிருக்கிறார். படத்தை பார்த்த இயக்குநர்கள் கொண்டாடி தீர்த்துவிட்டார்கள். எப்போதும் தனது படைப்புகளால் மக்களின் மனதை கனக்க செய்யும் இயக்குநர் பாலாவே வாழை படத்தை பார்த்துவிட்டு மனம் கனத்து மாரி செல்வராஜை கட்டியணைத்து முத்தம் கொடுத்தார். இன்று ரிலீஸான படத்துக்கு ரசிகரக்ளும் மிகப்பெரிய வரவேற்பை கொடுத்துவருகிறார்கள்.
மாரி செல்வராஜ் பேச்சி: மாரி செல்வராஜ் வாழை படத்தின் முதல் நாள் முதல் காட்சியை திருநெல்வேலியில் பார்த்தார். பிறகு செய்தியாளர்களிடம் பேசிய அவர், 'வாழை படம் எனது வாழ்க்கையில் நடந்த சம்பவத்தை வைத்து எடுத்திருக்கிறேன். இது அனைவரையும் மனம் கனத்துப்போக செய்யும். மக்களிடமும் நல்ல வரவேற்பை பெற்றிருக்கிறது. இந்த மாதிரியான இடத்திலிருந்துதான் மாரி செல்வராஜ் என்பவன் கிளம்பி வந்தான் என்பதை இந்தப் படம் உணர்த்தும். இந்தக் காலத்திலும் பிரச்னைகள் இருக்கத்தான் செய்கின்றன. துருவ் விக்ரமை வைத்து இப்போது பைசன் இயக்குகிறேன். அடுத்து தனுஷை வைத்து இயக்குகிறேன். ரஜினியுடனான படம் குறித்து பேச்சுவார்த்தை நடந்துவருகிறது. வாழை படத்தை பார்த்து பாலா சார் ரொம்பவே எமோஷனல் ஆனார். ஒருவார்த்தைகூட இருவரும் பேசவில்லை" என்றார்.


Click it and Unblock the Notifications











