விஜய் அப்படி செய்வார்னு நான் எதிர்பார்க்கவே இல்லை.. மாரி செல்வராஜ் ஓபன் டாக்
சென்னை: ராமிடம் உதவி இயக்குநராக இருந்தவர் மாரி செல்வராஜ். இதுவரை அவர் இயக்கத்தில் மூன்று படங்கள் வெளியாகியிருக்கின்றன. அந்த மூன்று படங்களுமே தரமான படைப்புக்களாக உருவாகி அவரை முன்னணி இயக்குநர் வரிசையில் கொண்டு போய் நிறுத்தியிருக்கின்றன. தற்போது அவர் வாழை படத்தை இயக்கி முடித்திருக்கிறார். இதற்கிடையே துருவ் விக்ரமுடன் மாரி செல்வராஜ் இணையும் படத்தின் பணிகள் சூடு பிடிக்க ஆரம்பித்திருக்கின்றன.
ராமிடம் அலுவலக உதவியாளராக இருந்து பிறகு உதவி இயக்குநராக இணைந்தவர் மாரி செல்வராஜ். பல வருடங்கள் உதவி இயக்குநராக இருந்துவிட்டு பரியேறும் பெருமாள் படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானார். கடந்த 2018ஆம் ஆண்டு வெளியான அந்தப் படம் மெகா ப்ளாக் பஸ்டர் ஆனது. முதல் படத்திலேயே சாதிய அட்டூழியங்களை தோலுரித்து காட்டும் தைரியமிக்க இயக்குநராக ஜொலித்தார் மாரி. இதன் காரணமாக அவருக்கு பாராட்டுக்கள் குவிந்தன.

கர்ணன்: அந்தப் படத்தை தொடர்ந்து அவர் இயக்கிய கர்ணன் திரைப்படம் சுமாரான வரவேற்பை பெற்றாலும் தூத்துக்குடி மாவட்டம் கொடியங்குளத்தில் காவல் துறையினர் நடத்திய அராஜக தாக்குதலை மையமாக வைத்து உருவாக்கியிருந்தார் மாரி செல்வராஜ். அந்தப் படமும் மாரி செல்வராஜுக்கு நல்ல பெயரை பெற்றுக்கொடுத்தது. அதேசமயம் வரலாறை திரித்து கூறிவிட்டார் என்ற விமர்சனமும் அவர் மீது ஒருபக்கம் எழுந்தது குறிப்பிடத்தக்கது.
மாமன்னன் மாரி: முதல் இரண்டு படங்களின் மூலம் சமூகத்தில் அதிர்வலைகளை ஏற்படுத்திய மாரி செல்வராஜ் கடைசியாக மாமன்னன் படத்தை இயக்கினார். உதயநிதி ஸ்டாலினின் கடைசி படமாக அது அமைந்தது. இந்தப் படமும் இதுவரை யாரும் தொடாத கதைக்களத்தில் இருந்தது. முக்கியமாக எம்.எல்.ஏவாகவே இருந்தாலும் அவரை சாதிய வக்கிரவாதிகள் என்ன பாடுபடுத்துகிறார்கள் என்பதை பொட்டில் அடித்து சொல்லியிருந்தார் இயக்குநர். படம் மெகா ப்ளாக் பஸ்டர் ஆனது. மேலும் வடிவேலுவுக்கும் இன்னொரு பரிமாணத்தை கொடுத்தது மாமன்னன்.
அடுத்த படங்கள்: முதல் இரண்டு படங்கள் பெற்ற வெற்றியைவிடவும் மாமன்னன் படம் பெற்ற வெற்றி பெரிது. எனவே மாரி செல்வராஜ் மீதான பலரது கவனம் பன்மடங்கு அதிகரித்திருக்கிறது. அடுத்தடுத்து அவர் என்ன மாதிரியான விஷயங்களை தன்னுடைய படைப்புகளில் பேசப்போகிறார் என்ற ஆவலும் பிறந்திருக்கிறது. அவர் இப்போது வாழை படத்தை இயக்கி முடித்திருக்கிறார். அந்தப் படம் முழுக்க முழுக்க சிறுவர்களை மையமாக வைத்து உருவாக்கப்பட்டிருக்கும் படம். எனவே இதிலும் வேறு ஒரு கதைக்களத்தை எதிர்பார்க்கலாம்.
துருவ் விக்ரம்: இதற்கிடையே துருவ் விக்ரமை வைத்து அவர் ஒரு படம் இயக்க கமிட்டானார். ஆனால் இடையில் சில காரணங்களால் அந்தப் படத்தின் பணிகள் தள்ளிப்போயின. இந்தப் படமானது கபடி வீரரின் வாழ்க்கை வரலாற்றை மையமாக வைத்து உருவாக்கப்படுகிறது. இதற்காக துருவ் விக்ரம் கடந்த சில காலமாகவே தீவிர கபடி பயிற்சியில் இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. படத்துக்கு பைசன் - காளமாடன் என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது.
மாரி செல்வராஜ் பேட்டி: இந்நிலையில் தனியார் ஊடகம் ஒன்றுக்கு மாரி செல்வராஜ் அளித்த பேட்டியில் விஜய் குறித்து பேசியிருக்கிறார். அந்தப் பேட்டியில் பேசிய அவர், "சிறு வயதிலிருந்தே நான் விஜய்யின் தீவிரமான ரசிகர். மன்றமெல்லாம் வைத்திருக்கிறேன். அவர் இப்போது நடிப்பிலிருந்து விலகுகிறேன் என்று அறிவித்திருப்பதை நான் எதிர்பார்க்கவே இல்லை. அதை என்னால் ஏற்றுக்கொள்ளவும் முடியவில்லை" என்றார்.


Click it and Unblock the Notifications











