பரியேறும் பெருமாள் கருப்பி நாய் மறைவு.. இறங்கல் தெரிவித்த நடிகர் கதிர்!
சென்னை: இயக்குநர் மாரி செல்வராஜ் இயக்கத்தில் வெளியான முதல் படம் பரியேறும் பெருமாள். இந்தப் படத்தில் நடிகர் கதிர், கயல் ஆனந்தி, யோகிபாபு, மறைந்த நடிகர் மாரிமுத்து உள்ளிட்டோர் நடித்திருந்தனர். இந்தப் படத்தின் மூலம் இயக்குநர் பா. ரஞ்சித் தயாரிப்பாளராக உருவெடுத்தார். அதேபோல் இந்தப் படத்திற்கு சந்தோஷ் நாரயணன் இசை அமைத்தார். படத்தின் முதல் காட்சியில் இருந்து க்ளைமேக்ஸ் காட்சி வரை அனைவரும் இந்தப் படத்தினைப் பாராட்டினார்கள். இந்தப் படத்தின் முதல் 10 நிமிடங்களுக்குள் கதாநாயகன் வளர்த்த நாய், கொடூரமாக, கொலை செய்யப்படும். அந்த நாய்க்கு கருப்பி என பெயர் சூட்டியிருந்தார்கள். இந்நிலையில் படத்தில் இடம் பெற்றிருந்த கருப்பி நாய் உயிரிழ்ந்தது. இதன் காரணமான படப்பிடிப்புத் தளத்தில் கருப்பியுடன் தான் எடுத்துக் கொண்ட புகைப்படத்தினை நடிகர், கதிர் பகிர்ந்து இரங்கல் தெரிவித்துள்ளார்.
இயக்குநர் மாரி செல்வராஜ் இயக்கத்தில் ஒரு படம் வெளியாகினறது என்றாலே, அந்தப் படத்தில் இடம் பெறும் வளர்ப்பு பிராணிகளும் ரசிகர்களின் மனதிற்கு மிகவும் நெருக்கமானதாக மாறிவிடுகின்றது. தனது முதல் படமான பரியேறும் பெருமாள் படத்தில் கருப்பி நாய், கர்ணன் படத்தில் குதிரை, மாமன்னன் படத்தில் பன்றி மற்றும் வாழை படத்தில் மாடு என தனது படங்கள் அனைத்திலும் வளர்ப்புப் பிராணிகளையோ அல்லது கால்நடைகளையோ ரசிகர்களுக்கு நெருக்கமானதாக மாற்றிவிடுகின்றார்.

மாரி செல்வராஜ்: இவரது இயக்கத்தில் கடந்த 2018ஆம் ஆண்டு வெளியான படம் பரியேறும் பெருமாள். இயக்குநராக உருவெடுப்பதற்கு முன்னர், இயக்குநர் ராமிடம் உதவி இயக்குநராக மாறினார். இந்தப் படம் ரசிகர்களைக் கடந்து, அன்றைய தமிழ்நாட்டின் எதிர்க் கட்சித் தலைவர் மு.க. ஸ்டாலின், மக்களவை உறுப்பினர் திருமாவளவன், படுகொலை செய்யப்பட்ட பகுஜன் சமாஜ் கட்சித் தலைவர் ஆம்ஸ்ட்ராங் என பலரும் மாரி செல்வராஜைப் பாராட்டினார்கள்.

கருப்பி: சென்னை சர்வதேச திரைப்படத் திருவிழா, கோவா சர்வதேச திரைப்படத் திருவிழா என திரைப்படத் திருவிழாக்களில் இப்படம் திரையிடப்பட்டது. இயக்குநர் மாரி செல்வராஜிடம் படம் தொடங்கி 10 நிமிடங்களில் கருப்பி நாயை ஏன் படுகொலை செய்யும் படியான காட்சியை வைத்தீர்கள் என செய்தியாளர்கள் கேள்வி எழுப்பியதற்கு, நான் சொல்லப்போகும் கதையினை ரசிகர்கள் உள்வாங்கிக் கொள்ள, அவர்களின் மனம் மிகவும் இளகிய தன்மையுடன் இருக்கவேண்டும் என நினைத்தேன். அதனால்தான் அப்படியான காட்சியை வைத்தேன் எனக் கூறினார்.

மறைவு: கருப்பியின் படுகொலை உண்மையாலும் இயக்குநர் மாரி செல்வராஜ் கூறியதைப்போல் ரசிகர்களின் மனதை இளகியதாக மாற்றிவிட்டது. இந்நிலையில் படத்தில் இடம் பெற்றிருந்த கருப்பி நாய் இன்று இயற்கை எய்தியது. இது தொடர்பாக பரியேறும் பெருமாள் படத்தில் நடித்த நடிகர் கதிர் இன்று அதாவது நவம்பர் 3ஆம் தேதி தனது எக்ஸ் பக்கத்தில் பதிவு ஒன்றைப் பகிர்ந்துள்ளார். அதில், "கருப்பி 💙 நீ இல்லாத காட்டில் நான் எப்படி தான் திரிவேனோ Hope you found peace #Karuppi #RIP" என பதிவிட்டுள்ளார். இவரது இந்தப் பதிவு பலரையும் கலங்கடித்துள்ளது. இந்தப் பதிவுடன் பரியேறும் பெருமாள் படப்பிடிப்பின்போது கருப்பி நாயுடன் தான் எடுத்துக் கொண்ட புகைப்படங்களையும் பகிர்ந்துள்ளார்.


Click it and Unblock the Notifications











