தனுஷ் படம் தாமதம்: 'வாழை' இரண்டாம் பாகத்தைத் தொடங்குகிறார் மாரி செல்வராஜ்!
சென்னை: தமிழ் திரையுலகின் முன்னணி இயக்குநர்களில் ஒருவரான மாரி செல்வராஜ், நடிகர் தனுஷுடன் இணையவிருந்த 'தனுஷ் 56' திரைப்படம் தற்காலிகமாக ஒத்தி வைக்கப்பட்டுள்ள சூழலில், தனது வெற்றிப்படமான 'வாழை' படத்தின் இரண்டாம் பாகத்திற்கான பணிகளை தீவிரப்படுத்தியுள்ளார் என்ற தகவல் வெளியாகி உள்ளது.
மாரி செல்வராஜ் இயக்கத்தில் கடந்த 2025-ஆம் ஆண்டு தீபாவளிக்கு வெளியான 'பைசன்' திரைப்படம், துருவ் விக்ரம், அமீர், லால் ஆகியோரின் நடிப்பில் விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் மாபெரும் வெற்றி பெற்றது. ஓடிடி தளங்களிலும் உலகளாவிய வரவேற்பைப் பெற்ற இப்படம், தேசிய விருதுப் பட்டியலிலும் இடம்பெறும் என்று பெரிதும் எதிர்பார்க்கப்படுகிறது.

இதைத் தொடர்ந்து, மாரி செல்வராஜ் நடிகர் தனுஷ்ஷை வைத்து தனுஷ் 56 என்ற படத்தை இயக்கத் திட்டமிட்டிருந்தார். ஆனால், தனுஷ் தற்போது ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் தனது 55-வது படத்தில் பிஸியாக நடித்து வருகிறார். இந்தப் படத்தை தனுஷ்ஷே தயாரித்து வருவதால், திட்டமிட்ட காலத்தைவிட படப்பிடிப்பு கூடுதல் நாட்களை எடுத்துக் கொள்கிறது. மேலும், தனுஷ் அடுத்ததாக மீண்டும் ஒரு படத்தை இயக்கவும் திட்டமிட்டுள்ளார். இதன் காரணமாக 'தனுஷ் 56' படத்தின் படப்பிடிப்பு இன்னும் சில மாதங்கள் தாமதமாகும் எனத் தெரிகிறது.
வாழை: இந்த இடைப்பட்ட காலத்தை சரியாக பயன்படுத்திக் கொள்ள விரும்பும் மாரி செல்வராஜ், தனது இயக்கம் மற்றும் தயாரிப்பில் மிகப்பெரிய வெற்றியைப் பெற்ற படைப்பான 'வாழை' படத்தின் இரண்டாம் பாகத்தை இயக்கத் தயாராகிவிட்டார். இப்படத்தில் 'பரியேறும் பெருமாள்' படத்திற்குப் பிறகு நடிகர் கதிர் கதாநாயகனாக நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். இவருடன் முதலாம் பாகத்தில் நடித்த நிகிலா விமல் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார் என்றும் கூறப்படுகிறது. இவர்களுடன் பிரியங்கா மோகன் மற்றும் காயடு லோகர் என இரண்டு கதாநாயகிகள் இப்படத்தில் இணைய உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

நெட்ஃபிளிக்ஸ்: நெட்ஃபிளிக்ஸ் நிறுவனத்துடன் இணைந்து தயாரிக்கப்படவுள்ள இப்படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைக்கவுள்ளார். இந்தப் படத்தின் படப்பிடிப்பை விரைந்து முடித்து, 2026 இறுதி அல்லது 2027 தொடக்கத்தில் வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளது. மாரி செல்வராஜின் இந்த அடுத்தடுத்த அதிரடி முடிவுகள் சினிமா வட்டாரத்தில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.


Click it and Unblock the Notifications