Mari Selvaraj: மரியாதை இல்லாத விருதுகள் மன கசப்பானது.. யாரையோ ஊமைக்குத்தா குத்துறாரு மாரி செல்வராஜ்
சென்னை: தமிழ் சினிமா உலகில் பல திறமைசாலிகள் தொடர்ந்து காலடி எடுத்து வைத்துக் கொண்டிருக்கிறார்கள். அதுவும் சினிமாவின் டெக்னிக்கல் அறிவோடு சமூகத்தின் மீதான அக்கறையுடனும் செயல்பட வேண்டும், பொறுப்புள்ள படங்களைக் கொடுக்க வேண்டும் என்ற எண்ணத்திலும் படைப்பாளிகளும் கலைஞர்களும் கெரியரை தொடங்கிக் கொண்டு இருக்கிறார்கள். அதே நேரத்தில் ஆபத்தான மற்றும் விஷமத்தனமான கருத்துக்களை படமாக்குகிற பிற்போக்கு எண்ணம் கொண்டவர்களும் கணிசமான அளவில் இருக்கத்தான் செய்கிறார்கள். இதில் இயக்குநர் மாரி செல்வராஜ் முதல் ரகம்.
இவர் அண்மையில் தான் கலந்து கொண்ட திரைப்பட விருது நிகழ்ச்சியில் தான் ஏன் அந்த விருது நிகழ்ச்சியில் கலந்து கொண்டேன் என்பது குறித்தும், அந்த விருது நிகழ்ச்சிக்கும் மற்ற சில விருது நிகழ்ச்சிக்கும் இருக்கும் வித்தியாசம் என்ன என்பது குறித்து பேசினார்.
அவரது பைசன் படத்திற்காக நடிகர் மற்றும் இயக்குநரான சித்ரா லக்ஷ்மணனின் டூரிங் டாக்கீஸ் யூடியூப் சேனல் சார்பாக நடத்தப்பட்ட விருது விழாவில் அவருக்கு விருது வழங்கப்பட்டது. விருதை பெற்றுக் கொண்ட மாரி செல்வராஜ் பேசுகையில், " சினிமா விமர்சனங்களில் சித்ரா லக்ஷ்மணன் சாரி விமர்சனம் மிகவும் நன்றாகவும் நேர்த்தியாகவும் இருக்கும். சினிமா குறித்த தெளிவான அறிவு கொண்டவர் என்பதால் அவர் விமர்சனத்திற்கு பயன்படுத்தும் வார்த்தைகள் மிகவும் சிறப்பாக இருக்கும்.

நம்பிக்கை: இந்த விருது விழாவுக்கு அழைத்தபோது, எனக்கு நம்பிக்கையாக இருந்தது. காரணம் இன்றைக்கு விருதுகள் வாங்குவது எப்படி ஆகிவிட்டது என்றால், சில படங்கள் வரக்கூடாது, அவை வெற்றி பெறக் கூடாது என்று நினைப்போம். வெற்றி பெறக் கூடாது என்றால், சினிமா இன்னும் செலிப்பாக மாற வேண்டும் என்றும் முன்னோக்கி போக வேண்டும் என்றும் நாம் ஆசைப்படுவோம் அல்லவா, அதற்காக நாம் விடாப்பிடியாக முயற்சி எடுத்து காத்திரமாக படங்கள் எடுப்போம். ஆனால் எல்லா படங்களுக்கும் விருது என்று கொடுக்கும் போது, அப்படியான விருது நிகழ்ச்சிகளுக்கு நாம் போக வேண்டுமா? அந்த விருதை வாங்க வேண்டுமா என்று எல்லாம் நான் யோசித்துள்ளேன்.
மன கசப்பு: ஏன் என்றால், அந்த படங்களுக்கு கொடுக்கிறார்கள், அதேபோல் நமது படத்திற்கும் கொடுக்கிறார்கள் என்று இல்லை. மாறாக இந்த பிரச்னையை எப்படி கையாள்வது என்பது தான். இந்த விருதுக்கு சித்ரா லக்ஷ்மணன் சார் என்னை அழைத்தபோது, இவர்களுக்குத்தான் என்று இல்லாமல், எது சிறந்ததோ, எது சரியானதோ அதற்குத்தான் விருது என்று கூறினார். இந்த நம்பிக்கை எனக்கு மிகவும் பிடித்திருந்தது. விருது என்றால் அது இதுதான் என்று சொல்லக் கூடிய வகையில் இருக்க வேண்டும். நமக்கு அந்த விருது கிடைக்கவில்லை என்றாலும், அந்த விருது மீது நமக்கு மரியாதை இருக்க வேண்டும். விருது கிடைத்தும் மரியாதை இல்லாத விருதுகள் என்பது மிகவும் மன கசப்பானது. மனக்கசப்பை உண்டாக்கும் விருதாக சித்ரா லக்ஷ்மணன் சார் வழங்கும் விருது இருக்காது என்று நான் நம்புகிறேன்" என்று தெரிவித்துள்ளார். இவரது பேச்சு தற்போது திரை உலகிலும் திரை உலகத்தினருக்குத் விருது வழங்குபவர்கள் மத்தியிலும் கவனத்தை மற்றும் பரபரப்பை உருவாக்கி உள்ளது.


Click it and Unblock the Notifications