பரியேறும் பெருமாள், கர்ணன், மாமன்னன்.. திருமாவளவனின் பங்கு அதிகம்.. மாரி செல்வராஜ் ஷேரிங்ஸ்
சென்னை: விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பாக எழுச்சித் தமிழர் இலக்கிய விருதுகள் வழங்கும் விழா நேற்று சென்னையில் நடைபெற்றது. இதில் மாமன்னன் படத்தை இயக்கியதற்காக இயக்குநர் மாரி செல்வராஜுக்கு எழுச்சித் தமிழர் விருது வழங்கப்பட்டது. அதனையடுத்து விழாவில் பேசிய மாரி செல்வராஜ் திருமாவளவன் பற்றி ஏகப்பட்ட விஷயங்களை பேசினார். அது ரசிகர்களிடையே சமூக வலைதளங்களில் கவனத்தை ஈர்த்திருக்கிறது.
பரியேறும் பெருமாள் படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானவர் மாரி செல்வராஜ். அந்தப் படத்தை பார்த்த ரசிகர்கள் முதல் படத்திலேயே மாரி செல்வராஜ் தான் எவ்வளவு தேர்ந்த படைப்பாளி என்பதை நிரூபித்துவிட்டார் என்றும், சென்சிட்டிவ் விஷயத்தை தொட்டு அதை மிக நேர்த்தியாக படைத்திருக்கிறார் என்றும் பாராட்டு தெரிவித்தனர். குறிப்பாக அந்தப் படம் முடியும்போது அவர் வைத்த க்ளைமேக்ஸ் ஷாட் படம் வெளியானபோது மிகப்பெரிய வரவேற்பைப் பெற்று மாரி செல்வராஜ் மீது பலரது கவனத்தை திருப்பியது. பாரதிராஜாவே அந்த ஷாட்டை பாராட்டியிருந்தது நினைவுகூரத்தக்கது.

கர்ணன் மாரி: முதல் படத்தின் மெகா ஹிட்டுக்கு பிறகு தனுஷை வைத்து கர்ணன் படத்தை இயக்கினார். கொடியங்குளத்தில் எளிய மக்கள் மீது அதிகாரவர்க்கத்தினர் நடத்திய அராஜகத்தை மையமாக வைத்து உருவாகியிருந்த அந்தப் படம் ஹிட்டானாலும் பரியேறும் பெருமாளில் இருந்த அடர்த்தி இந்தப் படத்தில் இல்லை என்ற விமர்சனத்தையும் சந்தித்தது. அப்படத்தை கலைப்புலி தாணு தயாரித்திருந்தார். இருப்பினும் இரண்டு படங்களிலேயே மாரி செல்வராஜ் முன்னணி இயக்குநராகிவிட்டார்.
மாமன்னன்: இப்படிப்பட்ட சூழலில் உதயநிதி ஸ்டாலினை வைத்து மாமன்னன் படத்தை இயக்கியிருந்தார். வடிவேலு, ஃபகத் பாசில், கீர்த்தி சுரேஷ் உள்ளிட்டோர் நடித்திருந்தனர். கடந்த வருடம் ஜூன் மாதம் படம் ரிலீஸானது. படத்துக்கு விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் மிகப்பெரிய வரவேற்பு கிடைத்தது. அடுத்ததாக மாரி செல்வராஜ் இயக்கத்தில் வாழை படம் ரிலீஸாகவிருக்கிறது. அப்படம் முழுக்க முழுக்க சிறுவர்களை வைத்து உருவாக்கப்பட்டிருப்பது. முதலில் ஹாட் ஸ்டாரில் ரிலீஸாகும் என்று தெரிவிக்கப்பட்ட சூழலில்; பிறகு தியேட்டரில் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டிருக்கிறது.
மாரி செல்வராஜுக்கு விருது: இந்தச் சூழலில் விடுதலைச் சிறுத்தைகள் சார்பில் நடத்தப்படும் எழுச்சித் தமிழர் இலக்கிய விருதுகள் விழாவில் மாமன்னன் படத்தை இயக்கிய மாரி செல்வராஜுக்கு எழுச்சித் தமிழர் விருது வழங்கப்பட்டது. அதனையடுத்து பேசிய மாரி செல்வராஜ், "நான் ரொம்ப எமோஷனலான நபர். அதிகம் பேசினால் எந்த ரூட்டில் செல்வேன் என்று எனக்கு தெரியாது. நான் ஒரு திரைக்கதை எழுதும்போது எந்தெந்த காட்சியில் ஆத்திரப்படுகிறேன், எதில் உணர்ச்சிவசப்படுகிறேன் என்று எனக்கே தெரியும்.
கேள்வி எழும்: இதை எப்படி படமாக்குவது என்ற கேள்வி எனக்குள் எழும். மற்றவர்கள் மனம் போகும் போக்கில் எழுதிய திரைக்கதையை ஒருநாளும் நான் அப்படி எழுதியதே கிடையாது. அதை எழுதுவதற்கான சாத்தியக்கூறுகள் தமிழ் சினிமாவிலோ, சமூகத்திலோ இல்லை. ஏனெனில் இங்கு எதிரிகளை மனதில் வைத்துதான் ஒவ்வொரு திரைக்கதையும் உருவாக்கப்படுகிறது என்பது எனது கருத்து.
திருமா வீடியோக்களை பார்ப்பேன்: பரியேறும் பெருமாள் திரைப்படத்தில் அப்பா ஓடி வரும் காட்சி, கர்ணனில் பேருந்தை உடைக்கும் காட்சி, மாமன்னனின் இடைவேளை காட்சி ஆகியவைகளை எழுதிவிட்டு; இந்தக் காட்சியை நம்மால் படமாக்கிவிட முடியுமா? இந்தக் காட்சிக்கு சென்சார் அனுமதி கொடுக்குமா? இதை பார்த்து ரசிகர்கள் என்னை என்ன மாதிரி பார்ப்பார்கள் என்று கேள்விகள் எழும். அந்த நேரத்தில் எல்லாம் திருமாவளவனின் வீடியோக்களைத்தான் நான் பார்ப்பேன்.
நிதானம் இருக்கும்: திருமாவளவனின் பேச்சில் என்னிடம் இருக்கும் கோபத்தைவிடவும் அதிக கோபம் இருக்கும். ஆவேசம், பாய்ச்சல் ஆகியவற்றைவிடவும் ஒரு நிதானம்; விஷயத்தை அடுத்த தலைமுறைக்கு கடத்த வேண்டும் என்ற எண்ணம் இருக்கும். நான் அதனை பார்த்து நிறைய நாள் ஆச்சரியப்பட்டிருக்கிறேன். ஒன்றரை மணி நேரம் பேசினாலும் நிதானம் தவறாது. அதனை கற்றுக்கொள்வதற்கு முயற்சி செய்துகொண்டிருக்கிறேன்" என்றார்.


Click it and Unblock the Notifications











