வாழை கொடுத்த வெற்றி.. தனுஷ் படத்துக்கு பிறகு யார் படம் தெரியுமா?.. செம ஃபார்மில் மாரி செல்வராஜ்
சென்னை: தமிழ் சினிமாவின் முக்கியமான இயக்குநர்கள் லிஸ்ட்டில் இடம்பிடித்திருக்கிறார் மாரி செல்வராஜ். அவர் இதுவரை இயக்கிய பரியெறும் பெருமாள், கர்ணன், மாமன்னன், வாழை ஆகிய நான்கு படங்களுமே விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்றிருக்கின்றன. முக்கியமாக அவரது இயக்கத்தில் கடைசியாக வெளியான வாழை திரைப்படம் அனைவரையும் கலங்கடிக்க செய்திருக்கிறது. இந்தச் சூழலில் அடுத்ததாக அவர் பைசன் படத்தை இயக்கிவருகிறார். இந்நிலையில் அவரது லைன் அப் குறித்த தகவல் கசிந்திருக்கிறது.
பரியேறும் பெருமாள் படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானவர் மாரி செல்வராஜ். அந்தப் படத்தை பார்த்த ரசிகர்கள் முதல் படத்திலேயே மாரி செல்வராஜ் தான் எவ்வளவு தேர்ந்த படைப்பாளி என்பதை நிரூபித்துவிட்டார் என்றும், சென்சிட்டிவ் விஷயத்தை தொட்டு அதை மிக நேர்த்தியாக படைத்திருக்கிறார் என்றும் பாராட்டு தெரிவித்தனர். குறிப்பாக அந்தப் படம் முடியும்போது அவர் வைத்த க்ளைமேக்ஸ் ஷாட் படம் வெளியானபோது மிகப்பெரிய வரவேற்பைப் பெற்று மாரி செல்வராஜ் மீது பலரது கவனத்தை திருப்பியது. பாரதிராஜாவே அந்த ஷாட்டை பாராட்டியிருந்தது நினைவுகூரத்தக்கது.

கர்ணன் மாரி: முதல் படத்தின் மெகா ஹிட்டுக்கு பிறகு தனுஷை வைத்து கர்ணன் படத்தை இயக்கினார். கொடியங்குளத்தில் எளிய மக்கள் மீது அதிகாரவர்க்கத்தினர் நடத்திய அராஜகத்தை மையமாக வைத்து உருவாகியிருந்த அந்தப் படம் ஹிட்டானாலும் பரியேறும் பெருமாளில் இருந்த அடர்த்தி இந்தப் படத்தில் இல்லை என்ற விமர்சனத்தையும் சந்தித்தது. அப்படத்தை கலைப்புலி தாணு தயாரித்திருந்தார். இருப்பினும் இரண்டு படங்களிலேயே மாரி செல்வராஜ் முன்னணி இயக்குநராகிவிட்டார்.
மாமன்னன்: இப்படிப்பட்ட சூழலில் உதயநிதி ஸ்டாலினை வைத்து மாமன்னன் படத்தை இயக்கியிருந்தார். வடிவேலு, ஃபகத் பாசில், கீர்த்தி சுரேஷ் உள்ளிட்டோர் நடித்திருந்தனர். கடந்த வருடம் ஜூன் மாதம் படம் ரிலீஸானது. படத்துக்கு விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் மிகப்பெரிய வரவேற்பு கிடைத்தது. அந்தப் படத்திலும் யாரும் பேச துணியாத அல்லது மறந்துபோன அரசியலை பேசியிருந்தார் மாரி செல்வராஜ்.
வாழை: மாமன்னன் படத்துக்கு பிறகு வாழை படத்தை இயக்கினார். தனது சிறு வயது வாழ்க்கையில் நடந்த அவலங்களை திரைக்கதையாக்கி வலியோடு கொடுத்திருக்கிறார். படம் பார்த்த செலிபிரிட்டிகள் முதல் சாமானியர்கள்வரை தங்களது பெரும் ஆதரவை படத்துக்கு கொடுத்திருக்கிறார்கள். விமர்சன ரீதியாக மட்டுமின்றி வசூல் ரீதியாகவும் படம் சூப்பர் டூப்பர் ஹிட்டடித்திருக்கிறது. அவர் இதுவரை இயக்கிய நான்கு படங்களுமே வெற்றியடைந்திருப்பதால் தமிழ் சினிமாவின் முக்கியமான இயக்குநர்கள் லிஸ்ட்டில் இடம்பெற்றிருக்கிறார் மாரி.
மாரியின் லைன் அப்: வாழை படத்தை முடித்திருக்கும் மாரி செல்வராஜ் அடுத்ததாக துருவ் விக்ரமை வைத்து பைசன் - காளமாடன் படத்தை இயக்கிவருகிறார். அந்தப் படத்தை முடித்த கையோடு தனுஷ் படத்தை இயக்குகிறார். இந்நிலையில் தனுஷை வைத்து இயக்கிய பிறகு அவர் யாரை இயக்கப்போகிறார் என்ற தகவல் கிடைத்திருக்கிறது. அதன்படி அவர் நடிகர் கார்த்தியை இயக்கப்போவதாகவும்; சமீபத்தில் அவரை சந்தித்து கதை சொன்னதாகவும்; அது கார்த்திக்கு பிடித்துவிட்டதாகவும் கூறப்படுகிறது. இதற்கிடையே ரஜினிகாந்த்தை வைத்து மாரி செல்வராஜ் ஒரு படத்தை இயக்க வாய்ப்புகள் அதிகம் இருப்பதாகவும் ஒரு பேச்சு ஓடிக்கொண்டிருப்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











