Marimuthu: ”கருப்பு கலர் கார் வாங்காதீங்கன்னு சொன்னேன்..” மாரிமுத்து மறைவு... உடைந்து அழுத ரவிமரியா
சென்னை: இயக்குநரும் நடிகருமான மாரிமுத்து மாரடைப்பு காரணமாக உயிரிழந்தார்.
எதிர்நீச்சல் சீரியல் மூலம் பிரபலமான மாரிமுத்து, சினிமாவில் வளர்ந்து வரும் நேரத்தில் உயிரிழந்தது ரசிகர்களிடம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
மாரிமுத்துவின் நெருங்கிய நண்பரும் நடிகருமான ரவி மரியா அவரது உடலுக்கு நேரில் சென்று அஞ்சலி செலுத்தினார்.
அப்போது மாரிமுத்துவிடம் "கருப்பு கலர் கார் வாங்க வேண்டாம்" என சொன்னது குறித்து வேதனையாக பேசியது வைரலாகி வருகிறது.

கருப்பு கார் வேண்டாம்: சன் டிவியில் ஒளிபரப்பாகும் எதிர் நீச்சல் சீரியல் மூலம் பிரபலமானவர் மாரிமுத்து. இயக்குநர், நடிகர் என பன்முக கலைஞனாக வலம் வந்த மாரிமுத்து, கண்ணும் கண்ணும், புலிவால் ஆகிய படங்களை இயக்கியுள்ளார். பரியேறும் பெருமாள் திரைப்படத்தில் நடித்ததன் மூலம் அதிக கவனம் ஈர்த்த மாரிமுத்துவுக்கு அடுத்தடுத்து வாய்ப்புகள் தேடிச் சென்றன.
ராஜ்கிரண், வசந்த், எஸ்ஜே சூர்யா உட்பட பல இயக்குநர்களிடம் உதவியாளராக இருந்து டைரக்டரான மாரிமுத்து, நீண்ட நெடிய போராட்டங்களுக்குப் பின்னரே நல்ல நிலைக்கு வந்துள்ளார். முக்கியமாக எதிர் நீச்சல் சீரியலில் நடித்த பின்னரே, சென்னையில் சொந்தமாக வீடு கட்டி வந்துள்ளார். ஆனாலும், வீடு கட்டி முடிக்கும் முன்னரே மாரிமுத்து உயிரிழந்தது பலரையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.
இந்நிலையில், மாரிமுத்துவின் உடலுக்கு இயக்குநரும் நடிகருமான ரவி மரியா அஞ்சலி செலுத்தினார். மாரிமுத்து, ரவி மரியா இருவருமே எஸ்ஜே சூர்யாவிடம் உதவி இயக்குநர்களாக வேலை பார்த்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. அப்போது முதலே இருவரும் நல்ல நண்பர்களாக இருந்ததாகவும், படம் இயக்க வாய்ப்புகள் கிடைக்காததால் நடிக்க வந்ததாகவும் கூறினார்.

மேலும், மாரிமுத்து எப்போதுமே பாசிட்டிவாக இருப்பார், ஷூட்டிங் ஸ்பாட்டில் அவர் இருக்கும் போது அவ்வளவு ஜாலியாக இருக்கும். தொடர்ச்சியாக படங்கள் இயக்க முடியவில்லை என்றாலும், தொடர்ந்து நடித்துக்கொண்டே இருக்க வேண்டும் என அறிவுரை செய்ததாக ரவி மரியா கூறியுள்ளார். முக்கியமாக இருவருமே ஒரே நேரத்தில் தான் கார் வாங்கினோம். அப்போது "கருப்பு கலர் கார் வேண்டாம் சார்" என சொன்னேன்.
ஆனால், அவரோ கருப்பு தான் எனக்கு பிடிக்கும் என பிடிவாதமாக வாங்கினார். எல்லாவற்றையும் பாசிட்டிவாக எடுத்துக்கொள்ளும் மாரிமுத்துவுக்கு இப்படி நடந்திருக்கக் கூடாது என ரவிமரியா வேதனையுடன் பேசினார். மாரிமுத்து குறித்து ரவி மரியா பேசியது, ரசிகர்கள் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.


Click it and Unblock the Notifications











