Marimuthu: “இனி டைரக்ஷன் பக்கமே போகமாட்டேன்..” மாரிமுத்து வாழ்வில் இப்படியும் ஒரு சோகமா..?
சென்னை: எதிர் நீச்சல் சீரியல் மூலம் பிரபலமான மாரிமுத்து, சினிமாவிலும் பிஸியாக நடித்து வந்தார்.
இயக்குநர், நடிகர் என வலம் வந்த மாரிமுத்து, மாரடைப்பால் உயிரிழந்தது ரசிகர்களிடம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
பாரதிராஜாவின் படங்களை பார்த்து இயக்குநர் கனவுடன் சினிமாவில் அறிமுகமானவர் மாரிமுத்து.
ஆனால், அவர் நடிகரான பின்னர் இனி டைரக்ஷன் பக்கமே போகக் கூடாது என முடிவு எடுத்ததன் காரணம் என்னவென்று தெரியவந்துள்ளது.

இனி டைரக்ஷன் பக்கம் போகமாட்டேன்: இயக்குநர் கனவில் திரையுலகில் அறிமுகமாகி, பின்னர் நடிகரானவர்களில் மாரிமுத்துவும் குறிப்பிடத்தக்கவர். வைரமுத்துவின் உதவியாளர், ராஜ்கிரண் படங்களில் உதவி இயக்குநர் என சினிமா பயணத்தைத் தொடங்கினார். அதனைத் தொடர்ந்து இயக்குநர்கள் வசந்த், எஸ்ஜே சூர்யா, மணிரத்னம், ராஜீவ் மேனன் ஆகியோரிடம் உதவியாளராக வேலை பார்த்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
கண்ணும் கண்ணும், புலிவால் என இரண்டு படங்களை இயக்கிய மாரிமுத்துவுக்கு, அதன்பின்னர் படம் இயக்கும் வாய்ப்புகள் கிடைக்கவில்லை. அப்போது இயக்குநர் மிஷ்கின் தான் அவரது யுத்தம் செய் படத்தில் போலீஸ் கேரக்டரில் நடிக்க வைத்துள்ளார். மாரிமுத்து பலமுறை மறுத்தும், மிஷ்கின் விடாப்பிடியாக அவரை நடிக்க வைத்துள்ளார். இப்படியாக தான் நடிகராக அறிமுகமாகியுள்ளார் மாரிமுத்து.
அதன்பிறகு அடுத்தடுத்து கொம்பன், கடைக்குட்டி சிங்கம், பரியேறும் பெருமாள் படங்களில் நடித்த மாரிமுத்துவுக்கு, நடிப்பதற்கே அதிகம் வாய்ப்புகள் கிடைத்துள்ளன. இதுகுறித்து அவரே ஒரு பேட்டியில் வெளிப்படையாக பேசியிருந்தது குறிப்பிடத்தக்கது. "குஷி படத்தில் கோ டைரக்டராக இருந்தபோது, பிரபுதேவாவை நடிப்பில் 'யாரடா நீ மன்மதா'னு ஒரு படம் ஆரம்பிச்சேன். 10 நாட்கள் ஷூட்டும் போச்சு. அப்புறம் சில சூழல்களால படம் டேக் ஆஃப் ஆகல''
''அதன்பின்னர் கதை சொல்ல போன போதெல்லாம் பிரபுதேவா படம் ஏன் டிராப் ஆச்சுன்னு கேட்பாங்க. இதையெல்லாம் மீறி 2007ல 'கண்ணும் கண்ணும்'னு ஒரு படம் இயக்கினேன். பத்திரிகைகள்ல அதுக்கு நல்ல பெயர் கிடைச்சது. ஆனா, ஹீரோ வேல்யூ இல்லாம போனதால படம் சரியா போகல. அதேபோல், ராஜ்கிரண் சார்கிட்ட அசிஸ்டென்ட்டா இருந்தப்ப வடிவேலு அறிமுகமாகி நல்ல நண்பரானார். அவர் முன்னணி நடிகரானதும் அவரை வச்சு ஒரு படம் இயக்க கமிட்டானேன். அவரும் அதுக்காக பெரிய பேமென்ட் வாங்கினார். ஆனா, சில காரணங்களால அந்தப் படமும் டேக் ஆஃப் ஆகல" எனக் கூறியுள்ளார்.
பாரதிராஜாவை பார்த்து இயக்குநர் கனவில் சென்னை வந்த மாரிமுத்துவுக்கு, ஒருகட்டத்தில் நடிப்பு தான் கை கொடுத்துள்ளது. அதன் பின்னர் தொடர்ந்து நடிக்கும் வாய்ப்புக் கிடைத்ததால் இயக்குநர் ஆசையை விட்டுவிட்டேன் என்றுள்ளார். அதாவது, "இனிமே டைரக்ஷன் பக்கமே போகக் கூடாதுனு உள்மனசு சொல்லிட்டே இருக்கு. உள் மனசு சொன்னா அது சரியாதான் இருக்கும்!'' என மாரிமுத்து ஒரு பேட்டியில் சொல்லியிருந்ததை, இப்போது ரசிகர்கள் ட்ரெண்ட் செய்து வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











