Marimuthu: “அடிச்சு கூட கேப்பாங்க..” வடிவேலுவுக்கு சூப்பர் ஹிட் காமெடி கொடுத்தது மாரிமுத்து தானா?
சென்னை: எதிர் நீச்சல் சீரியல் மூலம் பிரபலமான மாரிமுத்து, இரு தினங்களுக்கு முன்னர் உயிரிழந்தார்.
சீரியலுக்காக டப்பிங் பேசிக்கொண்டிருந்த போது, மாரடைப்பு ஏற்பட்டு அவர் மரணமடைந்தது ரசிகர்களை சோகத்தில் ஆழ்த்தியது.
சென்னையில் உயிரிழந்த மாரிமுத்துவின் உடல், அவரது சொந்த ஊரான தேனி அருகே தகனம் செய்யப்பட்டது.
இந்நிலையில், வடிவேலுவின் சூப்பர் ஹிட் காமெடிகளுக்கு ஸ்க்ரிப்ட் எழுதியது மாரிமுத்து தான் என்ற தகவல், ரசிகர்களை கலங்க வைத்துள்ளது.

வடிவேலுவின் சக்சஸ்க்கு காரணமான மாரிமுத்து: உதவி இயக்குநராக அடியெடுத்து வைத்து, பலகட்ட போராட்டங்களுக்குப் பின்னர் சினிமாவில் வென்று காட்டியவர் மாரிமுத்து. இயக்குநர், நடிகர் என்றளவில் மட்டுமே மாரிமுத்துவை ரசிகர்களுக்கு தெரியும் என்பது குறிப்பிடத்தக்கது. ஆனால், அவர் மிகச் சிறந்த காமெடி ஸ்கிரிப்ட் ரைட்டர் என்பது பலரும் அறியாதது.
முக்கியமாக வைகைப்புயல் வடிவேலுவின் சூப்பர் ஹிட் காமெடிகள் பலவும், மாரிமுத்துவின் ஸ்கிரிப்ட் தான் என்பது குறிப்பிடத்தக்கது. ராஜ்கிரண் படங்களில் உதவி இயக்குநர் என சினிமா பயணத்தைத் தொடங்கிய மாரிமுத்து, இயக்குநர்கள் வசந்த், எஸ்ஜே சூர்யா, மணிரத்னம், ராஜீவ் மேனன் ஆகியோரிடமும் உதவியாளராக வேலை பார்த்துள்ளார். கண்ணும் கண்ணும், புலிவால் என இரண்டு படங்களை இயக்கிய மாரிமுத்துவுக்கு, அதன்பின்னர் படம் இயக்கும் வாய்ப்புகள் கிடைக்கவில்லை.
அப்போது இயக்குநர் மிஷ்கின் தான் அவரது யுத்தம் செய் படத்தில் நடிக்க வைத்துள்ளார். இன்னொருபக்கம் இயல்பாகவே மதுரை தமிழில் காமெடியாக பேசக் கூடிய மாரிமுத்து, ஸ்கிரிப்ட் எழுதுவதிலும் ஆர்வம் காட்டியுள்ளார். இவரது ஸ்கிரிப்ட்களில் தான் வடிவேலுவுக்கு சூப்பர் ஹிட் காமெடிகள் அமைந்துள்ளதாம். ராஜ்கிரணிடம் உதவியாளராக இருந்த போதே, வடிவேலுவும் மாரிமுத்துவும் நெருங்கி பழகியுள்ளனர்.
வடிவேலு பாப்புலரான பின்னர், அவரை ஹீரோவாக நடிக்க வைத்து படமும் இயக்கவிருந்தாராம் மாரிமுத்து. ஆனால், அந்தப் படம் டேக் ஆஃப் ஆகவில்லை என்பதால், வடிவேலுவின் காமெடிகளுக்கு ஸ்கிரிப்ட் எழுதும் வேலைகளை பார்த்துள்ளார். 'அடிச்சுக் கூட கேப்பாய்ங்க' போன்ற பல சூப்பர் காமெடிகளை வடிவேலுக்காக எழுதியது மாரிமுத்து தானாம். இருவருமே மதுரைகாரர்கள் என்பதால், வட்டார வழக்கு காமெடியிலும் கலந்துகட்டி அடித்துள்ளனர்.
இந்நிலையில், மாரிமுத்துவின் மறைவை கேட்டு வடிவேலு ரொம்பவே அதிர்ச்சியடைந்துள்ளார். அதுமட்டும் இல்லாமல் "மாரிமுத்து இறந்துட்டார்ன்னு சொன்னத நான் நாம்பவே இல்லை. ஏன் இப்படிலாம் நடக்குதுன்னு ஒன்னுமே புரியல. அவரை இழந்துவாடும் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்கிறேன்" எனக் கூறியிருந்தார். சினிமாவில் பல கஷ்டங்களை அனுபவித்து நல்ல நிலையில் வரும் போது, மாரிமுத்து உயிரிழந்தது திரையுலகினரை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.


Click it and Unblock the Notifications











