Mark Antony: மார்க் ஆண்டனி சென்சார் விவகாரம்... விஷால் கொடுத்த லஞ்ச புகாரில் 3 பேர் மீது வழக்கு!
சென்னை: விஷால் நடிப்பில் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கிய மார்க் ஆண்டனி, கடந்த மாதம் வெளியானது.
விஷாலுடன் எஸ்ஜே சூர்யா உள்ளிட்ட பலர் நடித்த இந்தப் படம், ரசிகர்களிடம் மிகப் பெரிய வரவேற்பைப் பெற்றது.
இதனிடையே மார்க் ஆண்டனி இந்தி வெர்ஷன் சென்சார் சர்டிபிகேட் வாங்க லஞ்சம் கொடுத்ததாக விஷால் வீடியோ வெளியிட்டிருந்தார்.
இந்த புகாரின் பேரில் 2 பெண்கள் உட்பட 3 தரகர்கள், பெயர் குறிப்பிடாத சென்சார் போர்டு அதிகாரிகள் மீது சிபிஐ வழக்குப் பதிவு செய்துள்ளது.

விஷால் புகாரின் பேரில் 3 பேர் மீது வழக்கு: விஷால் நடித்த மார்க் ஆண்டனி திரைப்படம் கடந்த மாதம் 15ம் தேதி திரையரங்குகளில் வெளியானது. ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் சயின்ஸ் பிக்ஷன் படமாக வெளியான மார்க் ஆண்டனி, சூப்பர் ஹிட் அடித்தது. விஷாலுடன் எஸ்ஜே சூர்யா, ரித்து வர்மா, ரெடின் கிங்ஸ்லி, சுனில், செல்வராகவன் உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர்.
டைம் ட்ராவலை பின்னணியாக வைத்து, ஆக்ஷன் ப்ளஸ் காமெடியில் பக்கா கமர்சியல் ட்ரீட் கொடுத்திருந்தார் ஆதிக் ரவிச்சந்திரன். தமிழ், தெலுங்கில் நேரடியாக வெளியான மார்க் ஆண்டனி, இதுவரை 100 கோடி ரூபாய் வசூலித்துள்ளது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் மார்க் ஆண்டனி படத்தின் சென்சார் சர்டிஃபிகேட் வாங்க லஞ்சம் கொடுத்ததாக விஷால் ஆதாரத்துடன் வீடியோ வெளியிட்டிருந்தார்.
அதாவது மார்க் ஆண்டனி படத்தின் இந்தி வெர்ஷன் சென்சாருக்காக, மும்பை CBFC அலுவலகத்தில் 6.5 லட்சம் ரூபாய் லஞ்சம் கொடுத்ததாக அவர் கூறியிருந்தார். சென்சார் வாங்க மீடியேட்டராக இருந்த மேனகா என்பவருக்கு பணம் கொடுப்பதைத் தவிர அப்போது வேறு வழியில்லை எனவும் அவர் அந்த வீடியோவில் பேசியிருந்தார். மேலும், இந்த விவகாரத்தில் மகாராஷ்ட்ரா முதலமைச்சரும் பிரதமர் மோடியும் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் விஷால் வேண்டுகோள் விடுத்திருந்தார்.
விஷாலின் இந்த வீடியோ திரையுலகில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதுபற்றி விரைவில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என திரையுலகினர் பலரும் குரல் கொடுத்தனர். மேலும், இதுபோல இதற்கு முன்பும் சில சம்பவங்கள் நடந்துள்ளதாக சிலர் புகார் தெரிவித்திருந்தனர். இதனையடுத்து விஷால் புகார் குறித்து விசாரணையை தொடங்கிய சிபிஐ, தற்போது 3 பேர் மீது வழக்குப் பதிந்துள்ளது.
அதன்படி, மெர்லின் மேனகா, ஜீஜா ராமதாஸ், ராஜன் ஆகியோர் மீதும், தணிக்கைச் சான்று அமைப்பு ஊழியர்கள் சிலர் மீதும் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளனர். அதுமட்டும் இல்லாமல் வழக்குப் பதிவு செய்யப்பட்டவர்களின் வீடுகள், அலுவலகங்களிலும் சோதனை செய்யப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. முன்னதாக விஷால் தனது புகாரில் லஞ்ச பணம் யாருடைய வங்கிக் கணக்கில் செலுத்தப்பட்டது என்ற விவரங்களையும் வெளியிட்டு இருந்தது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications