நடிகவேள் செல்வி பட்டத்திற்கு ராதிகா தகுதியானவர் - நாசர் பாராட்டு
நடிகவேள் செல்வி என்ற பட்டத்திற்கு நடிகை ராதிகா தகுதியானவர் என்று நடிகர் நாசர், நடிகை ரோகிணி உள்ளிட்ட பிரபலங்கள் பேசியுள்ளனர். இனி அவர் பெயர் சொல்லும்போது அவரது தந்தை நடிகவேள் எப்போதும் நினைவு கூறப்பட
சென்னை: ராதிகாவிற்கு நடிகவேள் செல்வி என்ற பட்டம் கொடுக்கப்பட்டது தகுதியானது என்று என்று நடிகர் நாசர் கூறியுள்ளார். இனி அவர் பெயர் சொல்லும்போது அவரது தந்தை நடிகவேள் எப்போதும் நினைவு கூறப்படுவார் என்று இயக்குநர் ஆர்.கே. செல்வமணி பாராட்டியுள்ளார்.
சரணின் வித்தியாசமான திரைக்கதை அமைப்பில் அவரது வழக்கமான பாணியில் காமெடி திரில்லர் என அனைத்தும் அடங்கிய ஆக்ஷன் படமாக உருவாகியுள்ளது மார்க்கெட் ராஜா எம்.பி.பி.எஸ். மிக விரைவில் வெளிவரவுள்ள இப்படத்தின் இசை வெளியீடு மற்றும் பத்திரிகையாளர் சந்திப்பும் இன்று நடைபெற்றது. இந்த விழாவில் ராதிகா சரத்குமாருக்கு நடிகவேள் செல்வி எனும் பட்டம் வழங்கி கவுரவிக்கப்பட்டது.
நாசர் பேசும்பொழுது, இந்த விழாவில் கலந்து கொண்டது எனக்கு மிகுந்த மகிழ்ச்சி. நடிகவேள் செல்வி எனும் பட்டத்திற்கு ராதிகா தகுதியானவர். சரத்குமார் சொன்னது போல் அவர் இன்னும் பல உயரங்களுக்கு தகுதியானவர். ஒரு படத்தில் சிலையாக நடிக்கச் சொன்னாலும் அந்தப்படத்தில் சிலை நன்றாக நடித்திருக்கிறது என்கிற பெயரைப் பெற்றுத் தருவார் ராதிகா. அவருக்கு வாழ்த்துகள் என்றார்.

மார்க்கெட் ராஜா எம்பிபிஎஸ்
இந்தப்படத்தில் இளைஞர்களுக்கு இணையான ஒரு உருவாக்கத்தை தந்திருக்கிறார் இயக்குநர் சரண். இயல்பிலேயே அவர் பல திறமைகள் வாய்ந்தவர். நாயகன் ஆரவ்வுடன் தொடர்ந்து இரு படங்களில் நடித்தேன் இரண்டிலும் வேறு வேறு ஆளாக இருந்தார் பின்னணியில் தன் கதாப்பாத்திரத்திற்கு அத்தனை உழைத்திருக்கிறார். படத்தில் இதுவரை நான் நடித்த மாதிரி இருக்கக் கூடாது என கேட்டு வேறு மாதிரியான நடிப்பை வாங்கியிருக்கிறார் சரண். இப்படம் வெற்றி பெற வாழ்த்துகள் என்றார்.

ஆர்.கே. செல்வமணி
இயக்குநர் ஆர் . கே செல்வமணி பேசும்பொழுது, இயக்குநர் சரணை ஆரம்பம் முதல் அனைத்து காலகட்டத்திலும் எனக்கு தெரியும். வெற்றி தோல்வி என எல்லா நேரத்திலும் சம நிலையில் இருப்பவர். இப்படத்தில் அவர் காதல் மன்னன், வசூல் ராஜா சரண் போல் வெற்றி ராஜாவாக திரும்ப வரவேண்டும். ராதிகாவுக்கு இன்று இந்தப்பட்டம் அளிக்கப்பட்டது மிகுந்த பெருமை வாய்ந்தது. இனி அவர் பெயர் சொல்லும்போது அவரது தந்தை நடிகவேள் எப்போதும் நினைவு கூறப்படுவார் என்றார்.

நடிகை ரோகிணி
நடிகை ரோகிணி பேசும்பொழுது, இந்த விழாவில் ராதிகாவுக்கு பட்டம் அளிக்கப்பட்டது எனக்கு இன்ப அதிர்ச்சி. அவரது தைரியம், அவரது ஆற்றல் மூலம் பல பெண்களுக்கு முன்மாதிரியாக திகழ்பவர். இந்தப்படத்தில் அவரது கதாபாத்திரம் அவரது தந்தையின் சாயலில் மிக வித்தியாசமான ஒன்று. கண்டிப்பாக பெரிதாக பேசப்படும். அந்தக் கேரக்டர்களை எல்லாம் உருவாக்கிய இயக்குநர் சரணுக்கு நன்றி. முன் தயாரிப்புகள் அதிகம் தேவைப்பட்ட ஒரு படமாக இந்ததிரைப்படம் இருந்தது. ஆரவ் காவ்யா, விஹான் அனைவருக்கும் எனது வாழ்த்துகள். படத்தில் உழைத்த அனைவருக்கும் என் மனமார்ந்த வாழ்த்துக்கள் நன்றி என்றார்.

வெற்றிப்படங்கள்
ஒளிப்பதிவாளர் கே.வி.குகன் பேசும்பொழுது, இந்தப்படம் ஒரு குடும்பத்தோடு பயணித்தது போல் இருந்தது. இன்று நான் ஒளிப்பதிவாளராக இருக்க மிக முக்கிய காரணம் என் அண்ணன் சரண். பல கஷ்டங்களுக்கு பிறகு வந்திருக்கிறார். அவருக்கு இந்தப்படம் பெரு வெற்றி பெற வேண்டும். இன்னும் நிறைய வெற்றி படங்கள் அவர் இயக்க வேண்டும் என்றார்.

காவ்யா தப்பார்
நாயகி காவ்யா தப்பார் பேசும்பொழுது, என்னை இந்தப்படத்தில் அறிமுகப்படுத்தியதற்கு இயக்குநர் சரணுக்கு மிக்க நன்றி. இப்படத்தில் நடித்த பிரபலங்கள் அனைவரிடம் இருந்தும் நான் நிறைய கற்றுக்கொண்டேன். இந்தப்படத்தில் நாங்கள் நிறைய உழைத்திருக்கிறோம். படத்தை பார்த்து எங்களுக்கு ஆதரவு தாருங்கள் என்றார்.

இளமையான இசை
இசையமைப்பாளர் சைமன்.கே.கிங் பேசும்பொழுது, 555 படத்திலிருந்தே தயாரிப்பாளர் மோகன் சாரைத் தெரியும். சரண் சாருடன் படம் பண்ணப் போகிறோம் என்றபோது முதலில் பயந்தேன். அவரது எல்லாப்படத்திலும் பாடல்கள் பெரிய ஹிட். அதற்கு காரணம் அவர் எப்போதும் இளமையாக இருக்கிறார். புதுமைகளை ரசிப்பவர். அவருடன் வேலை செய்தது என்னை நிறைய மாற்றியது. இந்தப்படத்தின் பாடல்களுக்கு கிடைத்த வரவேற்புக்கு பின் நிறைய பேரின் உழைப்பு இருக்கிறது. இப்படத்தில் உழைத்த எல்லோருக்கும், வாழ்த்திய அனைவருக்கும் நன்றி என்றார்.

நடிகர் ஆரவ்
நாயகன் ஆரவ் பேசும்பொழுது, இது என்னுடைய முதல் படம். பிக்பாஸுக்கு பிறகு எனக்கு தொடர்ந்து இரண்டு படங்களில் நாயகனாக வாய்ப்பு தந்தார் மோகன் சார் அவருக்கு நன்றி. நான் புதுமுகம். எனக்கு கதை சொல்லி என்னை சம்மதிக்க வைக்க வேண்டிய அவசியம் இல்லை ஆனால் சரண் சார் அதைச் செய்தார் அவருக்கு நன்றி.

ராதிகா அம்மா
ராதிகா மேடமுடன் நடிக்க ஆசைப்பட்டேன். ஆனால் இந்தப்படத்தில் அவர் நடித்திருக்கும் அம்மா ரோல் எல்லோருக்கும் சர்ப்ரைஸாக இருக்கும். காவ்யா தப்பார் அழகான திறமையான பெண். மார்க்கெட் ராஜா பக்காவான கமர்ஷியல் படம் எல்லோருக்கும் பிடிக்கும் படி இருக்கும், பாருங்கள் ஆதரவு தாருங்கள் என்றார்.


Click it and Unblock the Notifications











