அவதார் 2 வசூலுக்கும் ஆப்பு வைக்க ஸ்கெட்ச் போட்ட மார்வெல்.. ஒரே வருஷத்துல 2 அவெஞ்சர்ஸ் படம் வருதா?
லாஸ் ஏஞ்சல்ஸ்: மல்டிவெர்ஸ் கான்செப்ட்டை லோகி, ஸ்பைடர்மேன், டாக்டர் ஸ்ட்ரேஞ்ச் என ஆரம்பித்து கல்லா கட்டி வரும் மார்வெல் ஸ்டூடியோஸ் அடுத்ததாக 2 அவெஞ்சர்ஸ் படங்களை ரிலீஸ் செய்ய போவதாக இப்பவே ரிலீஸ் தேதியையும் அறிவித்து ரசிகர்களை இன்பதிர்ச்சியில் ஆழ்த்தி உள்ளனர்.
2009ல் வெளியான அவதார் படத்தின் வசூலை அவெஞ்சர்ஸ் எண்ட்கேம் முறியடித்த நிலையில், இந்த ஆண்டு வெளியாக உள்ள அவதார் 2 படத்தின் வசூலை உடனடியாக முறியடிக்க இப்படியொரு திட்டமா? என்கிற கேள்வியும் எழுந்துள்ளது.
அதே நேரத்தில் ஒரே வருஷத்தில் இரண்டு அவெஞ்சர்ஸ் படங்களை வெளியிடுவது பெரிதல்ல, இரண்டு படத்திலும் பிரம்மாண்டத்தோடு சேர்த்து கன்டென்ட் வெயிட்டாக இருக்க வேண்டும் என ரசிகர்கள் விமர்சித்து வருகின்றனர்.

அவெஞ்சர்ஸ் படங்கள்
மார்வெலின் தந்தையான ஸ்டான் லீ எழுதிய சூப்பர் ஹீரோ காமிக்ஸ் கதைகளை மையமாக வைத்து அயன்மேன், கேப்டன் அமெரிக்கா, தோர், ஹல்க் உள்ளிட்ட சூப்பர் ஹீரோ படங்கள் வெளியாகின. அதன் பின்னர், சூப்பர் ஹீரோக்களை ஒன்றிணைத்து 2012ம் ஆண்டு தி அவெஞ்சர்ஸ் படத்தை இயக்குநர் ஜாஸ் வீடன் இயக்கினார். அந்த படம் மிகப்பெரிய வசூல் வேட்டையை நடத்தியது. அதன் பிறகு அவெஞ்சர்ஸ் ஏஜ் ஆஃப் அல்ட்ரான் படத்தையும் ஜாஸ் வீடனே இயக்கினார்.

அவெஞ்சர்ஸ் எண்ட்கேம்
அவெஞ்சர்ஸ் இன்ஃபினிட்டி வார் மற்றும் அவெஞ்சர்ஸ் எண்ட்கேம் படங்களை இயக்குநர் ரூசோ சகோதரர்கள் இயக்கி உலகளவில் பிரம்மாண்ட வசூல் வேட்டையை நடத்தினர். பல ஆண்டுகளாக எந்தவொரு ஹாலிவுட் படங்களாலும் முறியடிக்க முடியாத அவதார் பட வசூலை அவெஞ்சர்ஸ் எண்ட்கேம் ரீரிலிஸ் செய்யப்பட்டதன் மூலம் முறியடித்தது.

அவ்வளவுதான்னு நினைச்சா
அவெஞ்சர்ஸ் எண்ட்கேமில் அயன்மேன் இறந்து விட்ட நிலையில், கேப்டன் அமெரிக்கா ரிட்டயர் ஆகி விட்டார். இனி அவ்வளவு தான் அவெஞ்சர்ஸ் என்கிற பெயரில் மார்வெலில் இருந்து படங்கள் வராது என ரசிகர்கள் முடிவு கட்டினர். எட்டர்னல்ஸ் உள்ளிட்ட பெயரிலும் படங்கள் வெளியாகின. ஸ்பைடர்மேன், டாக்டர் ஸ்ட்ரேஞ்ச் என மல்டிவெர்ஸ் கதவை திறந்து விட மீண்டும் அவெஞ்சர்ஸ் படங்கள் வரப் போகிறது என்கிற பிரம்மாண்ட அறிவிப்பு தற்போது வெளியாகி உள்ளது.

ஒரே ஆண்டில் இரண்டா
அவெஞ்சர்ஸ் தி கேங் டைனாஸ்டி மற்றும் அவெஞ்சர்ஸ் சீக்ரெட் வார்ஸ் என அடுத்தடுத்து 2025ம் ஆண்டு மே மாதம் காங் டைனாஸ்டி மற்றும் நவம்பரில் சீக்ரெட் வார்ஸ் என இரண்டு படங்களை வெளியிடப் போகிறோம் என மார்வெல் ரசிகர்களுக்கு ஹார்ட் அட்டாக் ஏற்படுத்தும் விதத்தில் அதிரடியான அப்டேட்களை மார்வெல் அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ளது. இந்த ஆண்டு வெளியாக உள்ள அவதார் 2 உலகளவில் புதிய வசூல் சாதனையை படைத்தாலும், அதனை 3 ஆண்டுகளிலேயே அவெஞ்சர்ஸ் படங்கள் முறியடித்து விடும் என்று மார்வெல் ரசிகர்கள் நம்பிக்கையுடன் காத்திருக்கின்றனர்.


Click it and Unblock the Notifications











