மாஸ் அப்டேட்: 100 கோடி ரூபாயில் உருவான மோகன்லாலின் மெகா பட்ஜெட் திரைப்படம்.. எப்போ ரிலீஸ் தெரியுமா?
சென்னை: மலையாள திரையுலகின் முன்னணி நடிகர் மோகன்லாலின் மெகா பட்ஜெட் திரைப்படம் மரைக்காயர் - அரபிக் கடலின் சிங்கம் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.
இயக்குநர் பிரியதர்ஷன் இயக்கத்தில் மோகன்லால், கீர்த்தி சுரேஷ், மஞ்சு வாரியர் நடிப்பில் இந்த படம் உருவாகி உள்ளது.
கடந்த ஆண்டே வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்ட இந்த படம் கொரோனா பரவல் காரணமாக ரிலீஸ் ஆகவில்லை.

நடிப்பு அசுரர்கள்
மோகன்லாலின் மகன் பிரணவ் மோகன்லால், கீர்த்தி சுரேஷ், மஞ்சு வாரியர், அர்ஜுன், சுனில் ஷெட்டி, பிரபு, கல்யாணி பிரியதர்ஷன், நெடுமுடி வேணு, அசோக் செல்வன், ஃபாசில் என நடிப்பு அசுரர்கள் ஒட்டுமொத்தமாக களமிறங்கியுள்ள பிரம்மாண்ட படம் தான் மரைக்காயர்: அரபிக் கடலின் சிங்கம்.

100 கோடி பட்ஜெட்
மலையாள திரைப்படங்கள் பொதுவாக லோ பட்ஜெட்டில் தரமான படங்களை உருவாக்குவதில் பெயர் பெற்றவை. ஹாலிவுட் தரத்தில் படங்களை உருவாக்க அதிக செலவு செய்ய வேண்டிய நிலையில், புலி முருகன் படத்தை தொடர்ந்து அதிக பொருட்செலவில் நடிகர் மோகன்லாலின் மரைக்காயர் படம் உருவாகி உள்ளது. சுமார் 100 கோடிக்கும் அதிகமாக இந்த படத்தின் பட்ஜெட் சென்றுவிட்டது குறிப்பிடத்தக்கது.

3 தேசிய விருதுகள்
தியேட்டர்கள் திறப்புக்காக காத்திருக்கும் இந்த படம் ரிலீசுக்கு முன்பே 3 தேசிய விருதுகளை தட்டித் தூக்கி இருக்கிறது. சமீபத்தில் அறிவிக்கப்பட்ட 67வது தேசிய விருதுகள் அறிவிப்பில் சிறந்த படம், சிறந்த சிஜி மற்றும் சிறந்த ஆடை வடிவமைப்பு என மூன்று பிரிவுகளில் இந்த படம் தேசிய விருதுகளை வென்றுள்ளது.

ஓணம் ரிலீஸ்
தேசிய விருதை வென்றுள்ள இந்த படம் எப்போதான் ரிலீசாகும் என காத்திருந்த ரசிகர்களை உற்சாகப்படுத்தும் விதமாக நடிகர் மோகன்லால் இந்த படத்தின் பிரம்மாண்ட ரிலீஸ் தேதியை அறிவித்துள்ளார். வரும் ஆகஸ்ட் 12ம் தேதி ஓணம் பண்டிகையை முன்னிட்டு உலகம் முழுவதும் அரபிக் கடலின் சிங்க கர்ஜனை ஒலிக்கப் போகிறது.

டபுள் ட்ரீட்
இந்த ஆண்டு ஜனவரி மாதம் மோகன்லால் நடித்த த்ரிஷ்யம் 2 அமேசான் பிரைமில் வெளியாகி மிகப்பெரிய ஹிட் அடித்தது. இந்நிலையில், இந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் மரைக்காயர் - அரபிக் கடலின் சிங்கம் படம் வெளியாக காத்திருக்கிறது. இதன்மூலம் தனது ரசிகர்களுக்கு இந்த ஆண்டு டபுள் ட்ரீட் கொடுக்க உள்ளார் மோகன்லால்.


Click it and Unblock the Notifications











