தியேட்டரில் ரிலீசாகி எட்டே நாள்... ஓடிடி.,யில் ரிலீசாகும் டாப் ஸ்டார் படம்
பெங்களூரு : லாக்டவுன் சமயத்தில் தியேட்டர்கள் மூடப்பட்டதால் வேறு வழியில்லாமல் பல படங்கள் ஓடிடி தளத்தில் நேரடியாக ரிலீஸ் செய்யப்பட்டன. ஆனால் தளர்வுகள் அறிவிக்கப்பட்டு, தியேட்டர்கள் திறக்கப்பட்ட பிறகும் படங்களை தியேட்டரில் ரிலீஸ் செய்ய தயாரிப்பாளர்கள் தயக்கம் காட்டி வருகின்றனர்.
ஆனால் தியேட்டரில் 50 சதவீதம் இருக்கைகளுக்கு மட்டும் அரசு அனுமதி கொடுத்த நிலையிலும், துணிச்சலாக தியேட்டரில் ரிலீஸ் செய்யப்பட்ட பெரிய பட்ஜெட் படம் விஜய் நடித்த மாஸ்டர். கொரோனாவை கடந்து மக்களை மீண்டும் தியேட்டருக்கு வந்து படம் என்பதுடன், கொரோனாவால் முடங்கிக் கிடந்த தியேட்டர் உரிமையாளர்களுக்கு மீண்டும் நம்பிக்கை அளித்த படம் மாஸ்டர்.

தியேட்டரில் மிகப் பெரிய வரவேற்பை பெற்ற போதிலும், தியேட்டரில் ரிலீஸ் செய்யப்பட்ட 15 நாட்களிலேயே இந்த படம் ஓடிடி தளமான அமேசான் பிரைமில் ரிலீஸ் செய்யப்பட்டது. இருந்தும் தியேட்டர், ஓடிடி இரண்டிலும் மாஸ்டர் படம் வெற்றி படமாக மாறி உள்ளது. ஆனால் தியேட்டரில் வெற்றிகரமாக ஓடியும், ரிலீஸ் செய்யப்பட்ட 15 நாட்களிலேயே ஓடிடி.,யில் வெளியிட என்ன காரணம் என இதுவரை தெரியவில்லை.
இந்நிலையில் மாஸ்டர் படத்தை தொடர்ந்து மற்றொரு டாப் ஸ்டார் படமும் தியேட்டரில் ரிலீஸ் செய்யப்பட்ட 8 நாட்களிலேயே ஓடிடி வந்துள்ளது. கன்னட சூப்பர் ஸ்டாரான புனீத் ராஜ்குமார் நடித்த யுவரத்னா படம் தான் தியேட்டரில் ரிலீஸ் செய்யப்பட்ட எட்டே நாட்களில் ஓடிடி.,க்கு வந்துள்ளது.
இது பற்றி தயாரிப்பு நிறுவனம் வெளியிட்டுள்ள தகவலில், யுவரத்னா படம் அமேசான் பிரைம் வீடியோவில் வெளியிடப்பட உள்ளது. கொரோனா பரவல் மீண்டும் அதிகரித்து வருவதை மனதில் கொண்டு இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. இந்த படத்தில் ரசிகர்களிடம் பெருத்த ஆதரவு கிடைத்துள்ளது. குறிப்பாக குடும்பங்கள் மற்றும் வயதானவர்களிடம் ஆதரவு கிடைத்துள்ளது. ஓடிடி.,யில் தங்களின் ஆதரவை வழங்க வேண்டும் என கேட்க் கொள்கிறோம் என தெரிவித்துள்ளனர்.


Click it and Unblock the Notifications











