பொங்கலுக்கு ரிலீஸ் ஆகிறது விஜய்யின் பிரம்மாண்ட 'மாஸ்டர்..' திருப்பூர் சுப்ரமணியம் உறுதி!
சென்னை: விஜய்யின் மாஸ்டர் படம் பொங்கலுக்கு வருவது உறுதி என்று திரையரங்க உரிமையாளர்கள் சங்க தலைவர் கூறியுள்ளார்.
விஜய், மாளவிகா மோகனன் நடித்துள்ள படம், மாஸ்டர். இதில் விஜய் சேதுபதி வில்லனாக நடித்துள்ளார்.
ஆண்ட்ரியா, சாந்தனு, அர்ஜுன் தாஸ் உட்பட பலர் நடித்துள்ளனர். கைதி படத்தை அடுத்து லோகேஷ் கனகராஜ் இயக்கி இருக்கிறார்.

கொரோனா தீவிரம்
இதில் விஜய், கல்லூரி பேராசிரியர் கேரக்டரில் நடித்துள்ளார். இந்தப் படம் கடந்த ஏப்ரல் மாதம் 9 ஆம் தேதி ரிலீஸ் ஆக இருந்தது. கொரோனா பரவல் தீவிரம் அடைந்ததால், லாக்டவுன் பிறப்பிக்கப்பட்டதன் காரணமாக ரிலீஸ் ஒத்தி வைக்கப்பட்டது. இந்தப் படம் தமிழ், தெலுங்கு, இந்தி, மலையாளம், கன்னட மொழிகளில் வெளியாக இருக்கிறது.

ஓடிடி வெளியீடு
இந்நிலையில் பல படங்கள் ஓடிடியில் வெளியாகி வருகின்றன. சூர்யாவின் சூரரைப் போற்று, நயன் தாரா நடித்த மூக்குத்தி அம்மன் உட்பட பல படங்கள் வெளியாகி வரவேற்பை பெற்றதால், மாஸ்டர் படமும் ஓடிடியில் வெளியாகும் என்று கூறப்பட்டது. ஆனால், அதை படக்குழு மறுத்தது.

பொங்கல் ரிலீஸ்
லாக்டவுனில் தளர்வுகள் அறிவிக்கப்பட்ட பிறகு சமீபத்தில் தியேட்டர்களை திறக்க அரசு அனுமதி வழங்கியது. அதைத் தொடர்ந்து, படங்கள் ரிலீஸ் ஆகி வருகின்றன. மாஸ்டர் படம் பொங்கல் பண்டிகைக்கு ரிலீஸ் ஆக இருக்கிறது. ஜனவரி 13 ஆம் தேதி வெளியாகும் என்று கூறப்பட்டது.

முதலமைச்சருடன் சந்திப்பு
இதற்கிடையே இந்த படம் தொடர்பாக தமிழக முதல்வரை நடிகர் விஜய் நேற்று சந்தித்ததாகக் கூறப்படுகிறது. தற்போது தியேட்டரில் 50 சதவிகித பார்வையாளர்கள் மட்டுமே அனுமதிக்கப்பட்டுள்ளனர். நூறு சதவிகித பார்வையாளர்களுக்கு அனுமதி அளிக்குமாறு அவர் கோரிக்கை வைத்ததாகக் கூறப்படுகிறது.

திருப்பூர் சுப்பிரமணியம்
இந்நிலையில், மாஸ்டர் படம் பொங்கலுக்கு ரிலீஸ் ஆவது உறுதி என்று திரையரங்க உரிமையாளர்கள் சங்க தலைவர் திருப்பூர் சுப்பிரமணியம் கூறியுள்ளார். அவர் கூறும்போது, 'தயாரிப்பாளர் லலித்குமார் படத்தின் ரிலீஸ் பற்றி அதிகாரபூர்வமாக எங்களிடம் கூறிவிட்டார். கொரோனாவுக்கு பிறகு வெளியாகும் பெரிய படம் இது. அதற்கு காரணம் நடிகர் விஜய்தான்.

விஜய்க்கு நன்றி
போன மார்ச் மாசமே சென்சார் முடிஞ்சு ரெடியான படம், மாஸ்டர். இந்தப் படத்தை 10 மாதமாக தியேட்டரில்தான் வெளியிட வேண்டும் என்று காத்திருந்து எங்களுக்கு பெரிய ஆதரவை வழங்கி இருக்கிறார். அவருக்கு நன்றி. அவர் நினைத்திருந்தால் ஒடிடியில் வெளியிட்டிருக்க முடியும். ஆனால் எங்களுக்காக இந்த படத்தை வைத்திருந்தார். அதோடு தயாரிப்பாளருக்கும் நன்றி என தெரிவித்துள்ளார்.


Click it and Unblock the Notifications











