இலங்கை தமிழர் பிரச்னை.. பத்மஸ்ரீ விருதை திருப்பிக் கொடுத்த பாரதிராஜாவுக்கு புகழ் வணக்கம் செலுத்திய மே 17
சென்னை: இயக்குநர் பாரதிராஜாவின் மறைவுக்கு பலரும் இரங்கல் தெரிவித்து வருகிறார்கள். அவரது உடல் நாளை அதாவது ஜூன் 11ஆம் தேதி தேனி மாவட்டத்தில் நல்லடக்கம் செய்யப்படவுள்ளது. இந்நிலையில் மே 17 இயக்கத்தின் சார்பில் பாரதிராஜாவுக்கு புகழ் வணக்கம் செலுத்தப்பட்டுள்ளது. இது தொடர்பாக அவர்கள் வெளியிட்ட பதிவில், " இயக்குனர் இமயம் அருந்திறல் தமிழர் ஐயா பாரதிராஜா மறைந்தார். தமிழ்க் கலை உலகின் தனிப்பெரும் ஆளுமையாய் விளங்கயவர். படித்த, நகரத்தன்மையான கதைகள், புராண இதிகாச கதைகள், மேற்குலக கதைகளின் தாக்கத்தில் உருவான கதைகள் என மூழ்கி இருந்த தமிழ்த்திரையுலகை சாமானிய- தமிழர்களின் வாழ்வியலை கதை மாந்தர்களாக, கதை களனாக மாற்றிய மாபெரும் ஆளுமை அவர்.
'என் இனிய தமிழ் மக்களே!' எனும் அவரது கரகரத்த குரல் தமிழ் மக்கள் மீதான பேரன்பில் அவரிடமிருந்து ஒவ்வொரு படைப்பின் போதும் நம்மை அரவணைக்கும். கிராமப்புற கதைகள் மட்டுமல்லாமல், நவீன, நகரமயமான கட்டமைப்புகளுக்குள் நிலவும் முரண்களையும் அவர் படைப்புகள் பேசின. அவர் அனைத்துவிதமான கதைகளையும் கையாளும் தனித்திறமை கொண்ட படைப்பாளியாக மிளிர்ந்தார். அவரைப் பின்பற்றி அவரது மொழிநடையில் தமிழ்நாட்டின் பன்முகத்தன்மையான பண்பாட்டு அடுக்குகளை தமது படைப்புகளில் அவரது வழியில் பலர் வெளிக்கொணர்ந்தார்கள்.

கிராமப்புற, பண்ணையார் காலத்து பிற்போக்கு சடங்குகள், நம்பிக்கைகள், அடக்குமுறைகள் மீது அவரது கதாபாத்திரங்கள் தாக்குதலை நடத்தின. மக்களின் சிந்தனையில் மதம், சாதி குறித்த பிடிப்புகள் மீது அவர் கடுமையான விமர்சனங்களை தமது படைப்பின் மூலமாக வெளிப்படுத்தினார். பலர் தொடத்தயங்கிய கதைக்களங்களையும், கதை மாந்தர்களையும் படைத்து வெற்றிகரமான படைப்புகளை உருவாக்கினார்.
திரையுலகிற்கு வெளியே, தமிழர்களுக்கான தனித்துவமான சங்கங்களை உருவாக்க பெருமுயற்சி எடுத்தார். காவிரியில் தமிழர்களின் உரிமையை நிலைநாட்ட பலவேறு புரட்சிகர போராட்டங்கள் அவரால் முன்னெடுக்கப்பட்டன. தமிழ்த் திரையுலக கலைஞர்களை தமிழினப் போராட்டங்களுக்கு அழைத்து வந்த பெருமை அவருக்குண்டு. தமிழீ*ழ விடுதலைப் போராட்டத்திற்கும், புலிகளுக்கும் வெளிப்படையான ஆதரவை வழங்கியவர். 2009 இனப்படுகொ**லை போரின் பொழுது தனக்களிக்கப்பட்ட இந்திய அரசின் உயரிய விருதான 'பத்மஸ்ரீ' விருதினை திருப்பியளித்தவர். இலங்கையோடு கைகோர்த்து போரை நடத்திய இந்திய அரசிற்கு ஐயா.பாரதிராஜாவின் போர்க்குரல் கடும் நெருக்கடியை கொடுத்தது. போர் குறித்த செய்திகளை தணிக்கை செய்த இந்திய அரசின் சதிகளை இவரது அறிவிப்பு அம்பலப்படுத்தியது.
தமிழ்த் திரையுலகின் இயக்குனர்கள், ஆளுமைகள், நடிகர்கள் ஆகியோரை அழைத்துக்கொண்டு இராமேஸ்வரத்தில் அவர் தலைமையில் நடந்த கண்டனப்போராட்டம் பெரும் அதிர்வலைகளை உருவாக்கியது. அன்றைய காங்கிரஸ் அரசின் தலைமையாக இருந்த சோனியா காந்தி அம்மையார் தமிழ்நாட்டிற்கு வருகை தந்த போது அவருக்குக் கருப்புகொடி காட்டினார்.

எதிர்பரப்புரை: இதனால் அவர் முன்னனி இயக்குனர்களோடு புழல் சிறையில் அடைக்கப்பட்டார். தமிழ் இனப்படுகொ**லைக்கு துணை நின்ற காங்கிரஸ் கட்சியை கடுமையாக அவர் எதிர்த்த காரணத்தினால் அவரது அலுவலகம் காங்கிரஸ் குண்டர்களால் கடுமையாக தாக்கி சேதப்படுத்தப்பட்டது. 2009 பாராளுமன்ற தேர்தலில் காங்கிரஸ் கட்சியை தோற்கடிப்பதற்காக அக்கட்சி போட்டியிட்ட தொகுதிகளில் எதிர்ப்பரப்புரையை மேற்கொண்டார். பல இடங்களில் காங்கிரஸ் தோல்வியை எதிர்கொண்டதற்கு அவரது போராட்டம் மிகமுக்கிய காரணியாக அமைந்தது.
போராட்ட குணம்: 2011ம் ஆண்டில் காங்கிரஸ் கட்சியால் திணிக்கப்பட்ட ராஜீவ்கொலையில் குற்றசட்டப்பட்ட அப்பாவி 3 தமிழர்களுக்கு நிறைவேற்றப்பட இருந்த தூக்குத் தண்டனையை ரத்து செய்ய குரல்கொடுத்தார். 2011ல் முல்லைப்பெரியாறு அணை உரிமையை பாதுகாக்க மே17 இயக்கம் சென்னையில் நடத்திய பேரணியில் பங்கெடுத்தார். பல்லாயிரக்கணக்கான தமிழர்கள் அலைகடலென திரண்டு நின்ற அப்பேரணி, முழக்கப்போராட்டத்தை முன்னின்று நடத்தினார். ஐயா வைகோ, தோழர் வேல்முருகன் உள்ளிட்ட தலைவர்கள், ஓவியர் வீரசந்தானம் போன்ற கலைஞர்களோடு அவரும் அப்பேரணியில் எழுச்சியுரையை பதிவு செய்தார்.
இலங்கைத் தமிழர்: 2017ம் ஆண்டில் ஈழத்தமிழர் படுகொ**லைக்கு நினைவேந்தல் நடத்தியதற்காக குண்டர் சட்டத்தில் அடைக்கப்பட்ட மே17 ஒருங்கிணைப்பாளர் தோழர் திருமுருகன் காந்தி உள்ளிட்ட தோழர்கள் விடுதலைக்காக துணிந்து குரல் கொடுத்தவர் ஐயா பாரதிராஜா. தனது இறுதிக்காலம் முழுவதும் தமிழ் கலையுலகிற்காகவும், தமிழின உரிமைக்காகவும் அயராது குரல் எழுப்பியவர் இயக்குனர் இமையம் ஐயா பாரதிராஜா. தமிழினத்தின் உயர்விற்கு பங்களித்த அவரது வாழ்வை போற்றும் விதமாக 2026 மார்ச் மாதத்தில் மே17 இயக்கம், வாழ்நாள் சாதனையாளர் விருதான 'அருந்திறல் தமிழர்' பட்டத்தை வழங்கி பெருமை கொண்டது.
வீர வணக்கம்: தமிழினத்தின் அழகியலை தனது திரைக்காவியங்கள் வழியே படைத்து, தமிழினத்தின் உரிமைக்காக அயராது போராடி ஒடுக்குமுறை எதிர்கொண்ட மாபெரும் கலைஞன், தமிழினத்தின் ஒப்பற்ற படைப்பாளி ஐயா பாரதிராஜா அவர்களுக்கு எமது இறுதி மரியாதையையும், வீரவணக்கத்தையும் செலுத்துகிறோம். -திருமுருகன் காந்தி, ஒருங்கிணைப்பாளர், மே பதினேழு இயக்கம்" என்று குறிப்பிடப்பட்டுள்ளது.


Click it and Unblock the Notifications