திரையுலகில் சோகம்.. பிரபல இயக்குநர் மரணம்.. ரசிகர்கள் பெரும் அதிர்ச்சி
சென்னை: சரத்குமார், வடிவேலு உள்ளிட்டோர் நடித்த படம் மாயி. கடந்த 2000ஆம் ஆண்டு வெளியான படம் சுமாரான வரவேற்பை பெற்றாலும் அதில் இடம்பெற்ற வாம்மா மின்னலு என்ற காமெடி காட்சி இன்றுவரை பலரது ஃபேவரைட். அந்தப் படத்தை இயக்கியவர் சூர்ய பிரகாஷ். மாயி மட்டுமின்றி சரத்குமார் நடிப்பில் வெளியான திவான் படத்தையும் சூர்யபிரகாஷ் இயக்கியிருக்கிறார். இந்தச் சூழலில் அவர் இன்று காலை உயிரிழந்தார். அவரது உயிரிழப்பு ரசிகர்களிடையேயும், திரையுலகினரிடையேயும் சோகத்தை ஏற்படுத்தியிருக்கிறது.
தமிழ் சினிமாவில் விநியோகஸ்தர், தயாரிப்பாளர், இயக்குநர், நடிகர் என்று பல முகங்களை கொண்டவர் ராஜ்கிரண். இவர் கடந்த 1996ஆம் ஆண்டு மாணிக்கம் என்ற படத்தில் நடித்தார். அதில் விஜயகுமாரின் மகள் வனிதா விஜயகுமாரும் நடித்திருந்தார். அந்தப் படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானவர் சூர்ய பிரகாஷ். படம் சொல்லிக்கொள்ளும்படி ஹிட்டடிக்கவில்லை. அதனையடுத்து சில வருடங்கள் படங்கள் எதுவும் இயக்காமல் இருந்தார் சூர்ய பிரகாஷ்.

மாயி: சூழல் இப்படி இருக்க கடந்த 2000ஆம் ஆண்டு சரத்குமார், மீனா, வடிவேலு உள்ளிட்டோரை வைத்து மாயி படத்தை இயக்கினார். மாணிக்கம் படத்தைவிடவும் மாயி படம் நல்ல வரவேற்பை பெற்றது. முக்கியமாக படத்தின் மேக்கிங்கிலும் ஒரு பக்குவம் இருந்தது. அதேபோல் அந்தப் படத்தில் இடம்பெற்ற வாம்மா மின்னலு என்ற காமெடி காட்சியும் இன்னும் சில காமெடி காட்சிகளும் ரசிகர்களை இன்றுவரை வயிறு வலிக்க சிரிக்க வைப்பவை என்பது குறிப்பிடத்தக்கது.
திவான்: மாயி படம் ஓரளவு நல்ல வரவேற்பை பெற்றதாலும், சூர்ய பிரகாஷின் ஒர்க்கிங் ஸ்டைல் பிடித்ததாலும் மீண்டும் அவரது இயக்கத்தில் திவான் என்ற படத்தில் நடித்தார் சரத்குமார். இந்தப் படம் போதிய வரவேற்பை பெறாவிட்டாலும்; இதிலும் வடிவேலுவின் காமெடி காட்சிகள் அல்ட்டிமேட்டாக இருந்தன. இதில் கதாநாயகியாக கிரண் நடித்திருந்தார்.
பிற படங்கள். மாயி, திவான் படங்களின் மூலம் ஓரளவு அடையாளம் பெற்ற சூர்ய பிரகாஷ் அடுத்ததாக ஜீவனை வைத்து அதிபர் என்ற படத்தை இயக்கினார். ஆனால் அந்தப் படம் படுதோல்வியை சந்தித்தது.பிறகு சில காலம் அமைதியாக இருந்த அவர் கடைசியாக வருசநாடு என்ற படத்தை இயக்கினார். அந்தப் படம் இன்னும் ரிலீஸாகவில்லை. சூழல் இப்படி இருக்க அவர் இன்று காலை தனது வீட்டில் உயிரிழந்தார். உயிரிழப்புக்கான காரணம் குறித்து தெரியவரவில்லை.
சரத்குமார் இரங்கல்: அவரது திடீர் மரணம் திரையுலகினரை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. சூர்ய பிரகாஷின் மறைவுக்கு சரத்குமார் தனது எக்ஸ் தள பக்கத்தில், "எனது நடிப்பில் வெளியான மாயி, திவான் ஆகிய வெற்றி படங்களை இயக்கிய எனது அருமை நண்பர் சூர்ய பிரகாஷ் இன்று இறைவனடி சேர்ந்தார் என்ற செய்தி அதிர்ச்சியும், வேதனையும் அளிக்கிறது.
நேற்றுக்கூட பேசினேன்: நேற்றைய தினம்கூட அவருடன் பேசிக்கொண்டிருந்த நிலையில் நிலையற்ற வாழ்வில் அவரது எதிர்பாராத மறைவு என்னை பெருந்துயரில் ஆழ்த்தியுள்ளது. அவரை பிரிந்து வேதனையில் வாடும் அவரது குடும்பத்தாருக்கும், நண்பர்களுக்கும் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்கிறேன். அவரது ஆன்மா சாந்தியடைய இறைவனை பிரார்த்திக்கிறேன்" என குறிப்பிட்டிருக்கிறார்.


Click it and Unblock the Notifications











