உதவி செய்வதற்காக நகைகளை அடகு வைத்த மயில்சாமி.. உருக வைக்கும் நினைவுகள்
சென்னை: நடிகர் மயில்சாமி உதவி செய்வதற்காக நகைகளை அடகு வைத்தது தொடர்பாக தகவல்கள் வெளியாகி ரசிகர்களை உருக வைத்துள்ளன.
நகைச்சுவை நடிகரும், பல குரல் கலைஞருமான மயில்சாமி தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத நகைச்சுவை ஆளுமையாக வலம் வந்தவர். விவேக், வடிவேலு உள்ளிட்ட பலருடன் அவர் நடித்த நகைச்சுவை காட்சிகள் காலம் கடந்து பேசப்படுபவை. நடிகராக மட்டுமின்றி மிகச்சிறந்த மனிதராகவும் இருந்தவர் மயில்சாமி.

மாபெரும் சிவபக்தர் மயில்சாமி
மயில்சாமி திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் மற்றும் சிவனின் தீவிர பக்தர் ஆவார். வருடாவருடம் திருவண்ணாமலை மகா தீபத்திற்காக திருவண்ணாமலை செல்வதை வழக்கமாக வைத்திருப்பவர். அதேபோல், சிவராத்திரிக்கும் இரவு முழுவதும் கண் விழிக்கும் அளவுக்கு பக்தராக இருந்தவர். இந்த வருடமும் சிவராத்திரிக்காக கடந்த சனிக்கிழமை இரவு முழுவதும் விழித்திருந்தார்.

மாரடைப்பால் உயிரிழந்த மயில்சாமி
இரவு முழுவதும் கண் விழித்திருந்த மயில்சாமி நேற்று அதிகாலை வீட்டுக்கு சென்றார். அப்போது மாரடைப்பு ஏற்பட்டதால் அவர் உயிர் பிரிந்தது. மயில்சாமியின் மறைவு ஒட்டுமொத்த கோடம்பாக்கத்தையும் அதிர்ச்சியில் உறைய வைத்துள்ளது. பலரும் அவரது உடலுக்கு அஞ்சலி செலுத்திவருகின்றனர். ரஜினிகாந்த் இன்று மயில்சாமியின் உடலுக்கு அஞ்சலி செலுத்தினார்.

உதவிக்கு பெயர்போன மயில்சாமி
மயில்சாமி உயிரிழந்திருக்கும் சூழலில் அவர் உதவி செய்த விஷயங்களைப் பற்றி பலரும் பேசிவருகின்றனர். மேலும் அவரைப்போல் நல்ல மனிதர் எவருமே இல்லை எனவும் கூறுகின்றனர். நடிகர் விவேக் மயில்சாமி குறித்து பேசிய வீடியோ ஒன்றும் ட்ரெண்டானது. அந்த வீடியோவில், ஒரு புத்தாண்டுக்கு ஆதித்யா ஹோட்டலுக்கு வந்த மயில்சாமி அங்கு பாடிக்கொண்டிருந்தவர்களுக்கு தன்னிடம் இருந்த பணத்தை எல்லாம் கொடுத்துவிட்டார். அதன் பிறகு என்னிடம் வந்து சார் தப்பா எடுத்துக்காதீங்க ஆட்டோல போறதுக்கு 50 ரூபாய் கொடுங்களேன் என கேட்டார். அப்படிப்பட்ட மனிதர்தான் மயில்சாமி என கூறியிருந்தார்.

நகையை அடகு வைத்த மயில்சாமி
இந்த சூழலில் மயில்சாமி உதவி செய்வதற்காக செய்திருக்கும் ஒரு விஷயம் பலரையும் நெகிழ்ச்சியடைய வைத்துள்ளது. அதாவது, கொரோனா ஊரடங்கு சமயத்தில் வருமானமில்லாமல் பல ஏழை குடும்பங்கள் தத்தளித்தன. அப்போது அவர்கள் சமையலுக்கு தேவையான பொருள்களை தன்னுடைய சொந்த செலவில் வாங்கி கொடுத்துள்ளார். ஒருகட்டத்தில் கையில் பணம் தீர்ந்துபோக, தனது வீட்டில் இருக்கும் நகைகளை அடமானம் வைத்து மீண்டும் மக்களுக்கு உதவி செய்திருக்கிறார். மயில்சாமியின் இந்த செயல் ரசிகர்கள் பலரை நெகிழ்ச்சியடைய செய்துள்ளது.


Click it and Unblock the Notifications











