வசூல் குவிக்கும் விஜய் ஆண்டனி, யோகி பாபு.. செல்ஃப் எடுக்க திணறும் மற்ற படங்கள்.. விவரம் இதோ
சென்னை: இந்த வாரம் பெரிய கதாநாயகர்களின் படங்கள் எதுவும் ரிலீஸ் ஆகாத காரணத்தால் காலியாக இருக்கும் தியேட்டர்களையும், ஆடி 18 என்ற விழா காலத்தையும் பயன்படுத்தி தமிழ் சினிமாவில் சிறிய பட்ஜெட் படங்கள் 6 படங்கள் ரிலீஸ் ஆனது. அதாவது, போட், மழை பிடிக்காத மனிதன், வாஸ்கோடகாமா, பேச்சி, நண்பன் ஒருவன் வந்த பிறகு மற்றும் ஜமா என ஆறு படங்கள் ஆகஸ்ட் 2ஆம் தேதி ரிலீஸ் ஆனது. இந்த ஆறு படங்கள் ரிலீஸ் ஆகி நேற்றுடன் அதாவது ஆகஸ்ட் 7ஆம் தேதி வரை படங்களின் வசூல் விவரம் குறித்து இந்த தொகுப்பில் காணலாம்.
மழை பிடிக்காத மனிதன்: விஜய் மில்டன் இயக்கத்தில், விஜய் ஆண்டனி, சத்யராஜ், சரத்குமார் உள்ளிட்டோர் நடிப்பில் வெளியான அதிரடி ஆக்ஷன் படம்தான் மழை பிடிக்காத மனிதன். இந்த படத்தின் முதல் ஒரு நிமிடக் காட்சி இயக்குநர் விஜய் மில்டனுக்கு தெரியாமல் சேர்க்கப்பட்டதாக வீடியோ வெளியிட்டிருந்தார். அதன் பின்னர் முதல் ஒரு நிமிட காட்சி நீக்கப்படவே அது குறித்தும் வீடியோ வெளியிட்டிருந்தார். மேலும், படத்தின் நடிகர் விஜய் ஆண்டனி முதல் ஒரு நிமிட வீடியோ இணைக்கப்பட்டதற்கும் தனக்கும் தொடர்பு இல்லை என அறிக்கை வெளியிட்டிருந்தார். படம் முதல் ஐந்து நாளில், ரூபாய் 2.19 கோடி வசூல் செய்துள்ளது என செய்திகள் வெளியானது.

போட்: சிம்பு தேவன் இயக்கத்தில் யோகி பாபு நடிப்பில் இரண்டாம் உலகப்போர் காலகட்டத்தில் நடக்கும் கதைதான் போட். முழுக்க முழுக்க நகைச்சுவை கலந்த அரசியல் நையாண்டி படமாக இந்த படம் எடுக்கப்பட்டுள்ளது. இந்த படம் முதல் இரண்டு நாட்களில் ரூபாய் 50 லட்சங்கள் வசூல் செய்துள்ளதாக கூறப்படுகின்றது. அதாவது முதல் ஐந்து நாட்களில் படம் ரூபாய் 1.16 கோடி வசூல் செய்துள்ளதாக கூறப்படுகின்றது.

ஜமா: கூத்துக் கலைஞர்களை மையப்படுத்தி எடுக்கப்பட்ட இந்த படத்திற்கு இசைஞானி இளையராஜா இசை அமைத்துள்ளார். இந்த இதுவரை ரூபா 8 லட்சம் வசூல் செய்துள்ளதாக கூறப்படுகின்றது. இந்தப் படம் விமர்சன ரீதியாக பாராட்டைப் பெற்றுள்ளது.
நண்பன் ஒருவன் வந்த பிறகு: இந்த படம் நண்பர்களை மையப்படுத்தி எடுக்கப்பட்ட படம் என்பதால் அனைத்து ரசிகர்களுக்கும் இந்த படம் மிகவும் பிடித்த படமாக அமையும் என படக்குழு நம்புகின்றது. நகைச்சுவை, எமோஷன் என நண்பர்கள் வட்டத்தில் இருக்கும் அனைத்து விதமான உணர்வுகளும் இந்த படத்தில் வெளிக்காட்டப்பட்டுள்ளது. படம் இதுவரை 38 லட்சம் வசூல் செய்துள்ளதாக கூறப்படுகின்றது.

பேச்சி: சுற்றுலா செல்லும் நண்பர்கள் குழு அடர் வனப்பகுதிக்குள் சென்று பேச்சி என்ற பேய்யிடம் மாட்டிக் கொள்கின்றார்கள். இறுதியில் இவர்களில் எத்தனைப் பேர் வெளியே வந்தார்கள் என்பதுதான் கதை. முழுக்க முழுக்க வனப்பகுதிக்குள் நடப்பதால் படத்தின் ஒளிப்பதிவு மூலம் காட்டையே நமக்கு சுற்றிக்காட்டுகின்றது பேச்சி படக்குழு. படம் இதுவரை ரூபாய் 59 லட்சம் வசூல் செய்துள்ளது என தகவல் வெளியாகியுள்ளது.

வாஸ்கோடகாமா: நகுல் நடிப்பில் வெளியாகியுள்ள இந்த படம் முழுக்க முழுக்க நகைச்சுவைப் படமாகவே உருவாக்கப்பட்டுள்ளது. படத்தின் ட்ரைலர் ரிலீஸ் ஆனதில் இருந்தே படத்தின் மீது ரசிகர்களுக்கு எதிர்பார்ப்பு ஏற்பட்டது. இந்நிலையில், படம் இதுவரை ரூபாய் 18 லட்சம் வசூல் செய்துள்ளதாக கூறப்படுகின்றது.


Click it and Unblock the Notifications











