பப்ஜி மதன் பேச்சுரிமை கோர முடியாது...சிகிச்சை குறித்து உயர் நீதிமன்றம் புதிய உத்தரவு
சென்னை : ஆன்லைன் விளையாட்டுகளை ஆபாசமாக பேசிக் கொண்டே விளையாடியதாக அளிக்கப்பட்ட புகார்களின் அடிப்படையில் பப்ஜி மதன் என்பவருக்கு எதிராக வழக்குப்பதிவு செய்யப்பட்டு குண்டர் சட்டத்தின்கீழ் அவர் கைது செய்யப்பட்டு கடந்த 9 மாதங்களாக சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

பப்ஜி மதனுக்கு எதிரான வழக்கு
ஆன்லைன் விளையாட்டுகளை ஆபாசமாக பேசிக் கொண்டே விளையாடியதாக பிரபல யூடியூபர் பப்ஜி மதன் என்பவருக்கு எதிராக குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டது. இதன் அடிப்படையில் அவர் மீது பெண்களை ஆபாசமாக சித்தரித்து பேசுதல், ஆபாசமாக பேசுதல், தகவல் தொழில்நுட்பத்தை தவறாக பயன்படுத்துதல், தடை செய்யப்பட்ட செயலியை பயன்படுத்துதல் உள்ளிட்ட பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

குண்டர் சட்டத்தில் கைது
மத்திய குற்றப்பிரிவு சைபர் கிரைம் போலீசார் இந்த வழக்குப்பதிவை செய்த நிலையில், குண்டர் சட்டத்தின்கீழ் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். இதுதொடர்பாக கடந்த 2021 ஜூன் 18ம் தேதி பப்ஜி மதன் தர்மபுரியில் கைது செய்யப்பட்டார். ஏராளமான புகார்கள் அடிப்படையில் அவர் சைபர் சட்ட குற்றவாளியாக கருதப்பட்டு, குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டிருந்தார்.

மதன் வழக்கு
அவரை குண்டர் தடுப்பு சட்டத்தின்கீழ் கைது செய்ய சென்னை மாநகர காவல் ஆணையர் கடந்த ஆண்டு ஜூலை மாதத்தில் உத்தரவிட்டிருந்தார். இதையடுத்து இந்த உத்தரவை ரத்து செய்யக்கோரி, மதன்குமார், தாக்கல் செய்த மனுவை நீதிபதிகள் பிஎன் பிரகாஷ், நக்கீரனை கொண்ட அமர்வு விசாரித்தது.

தேவைப்படும் மருத்துவ உதவி
இந்த வழக்கில் மதன் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர்கள், சாதாரண இந்த வழக்கிற்காக மதன் 9 மாதங்களாக சிறையில் உள்ளதாக தெரிவித்தார். மேலும் அவருக்கு மருத்துவமனையில் வைத்து தரப்பட வேண்டிய மருத்துவ சிகிச்சையை போலீசார் வழங்கவில்லை என்றும் குற்றம் சாட்டினார்.

மதனுக்கு எதிராக பேசிய நீதிபதிகள்
இதையடுத்து பேசிய நீதிபதிகள், அரசால் பப்ஜி தடை செய்யப்பட்ட நிலையில், விபிஎன் தொழில்நுட்பம் மூலம் அதை அவர் பயன்படுத்தியதாக தெரிவித்தனர். மதன் பேசியவை பேச்சுரிமையில் வராது என்றும் அவரது இந்த பேச்சால் மற்றவர்கள் தவறான பாதைக்கு செல்ல வாய்ப்புள்ளதாகவும் தெரிவித்தனர்.

மருத்துவ உதவி அளிக்க உத்தரவு
இதையடுத்து மதனுக்கு மருத்துவமனையில் வைத்து சிகிச்சை அளிப்பது தேவைப்படும் நிலையில், அந்த சிகிச்சையை அளிக்க உத்தரவிட்ட நீதிபதிகள் வழக்கு விசாரணையை வரும் 25ம் தேதிக்கு தள்ளி வைத்து உத்தரவிட்டுள்ளனர்.


Click it and Unblock the Notifications











