Meena - குழந்தை இருக்கிறாள்.. இந்த நேரத்தில் எல்லாம் இதையெல்லாம் செய்ய முடியாது.. தயாரிப்பாளரிடம் மீனா கறார்
சென்னை: Meena (மீனா) குழந்தை இருக்கிறாள் அதனால் இதையெல்லாம் செய்ய முடியாது என்று தயாரிப்பாளரிடம் மீனா கறார் காட்டிய சம்பவம் தெரியவந்திருக்கிறது.
குழந்தை நட்சத்திரமாக திரையுலகில் அறிமுகமானவர் மீனா. குழந்தை நட்சத்திரமாக இருக்கும்போதே ஏறத்தாழ 30க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துவிட்டார். இதன் காரணமாக மீனா எல்லோருக்கும் பரிச்சயமானவராக மாறிவிட்டார். அதன் பிறகு தமிழில் ராஜ் கிரண் நடித்த என் ராசாவின் மனசிலே படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானார் மீனா. அந்தப் படம் மெகா ஹிட்டானது. குறிப்பாக மீனா சோலையம்மா என்ற கதாபாத்திரத்தில் கலக்கியிருந்தார்.

கனவுக்கன்னி மீனா: என் ராசாவின் மனசிலே படத்துக்கு பிறகு மீனாவுக்கு தமிழில் ஏகப்பட்ட வாய்ப்புகள் கிடைத்தன. அதனை சரியாக பயன்படுத்திக்கொண்ட அவர் ரஜினி, கமல், சரத்குமார்,சத்யராஜ் உள்ளிட்ட பல ஹீரோக்களுடன் நடித்தார். தமிழ் மட்டுமின்றி தெலுங்கு, கன்னடம், மலையாளம் உள்ளிட்ட மொழிகளிலும் ரவுண்டு கட்டி நடித்தார் மீனா. இதன் காரணமாக பல வருடங்கள் தென் மாநிலங்களின் கனவுக்கன்னியாக ஜொலித்தார்.
திருமணம்: தொடர்ந்து முன்னணி நடிகையாக வலம் வந்த மீனா வித்யாசாகர் என்பவரை திருமணம் செய்துகொண்டார். இந்தத் தம்பதிக்கு நைனிகா என்ற பெண் குழந்தை இருக்கிறார். அவர் விஜய்யுடன் தெறி படத்தில் நடித்தார்.மகிழ்ச்சியாக சென்று கொண்டிருந்த திருமண வாழ்க்கையில் வித்யாசாகர் மரணத்தை மீனா எதிர்பார்க்கவில்லை. இதன் காரணமாக மீனா சோகத்தின் உச்சத்துக்கே சென்றார்.
த்ரிஷ்யம்: மீனா நீண்ட காலத்துக்கு பிறகு த்ரிஷ்யம் படத்தில் நடித்திருந்தார். அந்தப் படம் மெகா ஹிட்டானது. அது தமிழில் பாபநாசம் என்ற பெயரில் ரீமேக்கும் ஆனது. இந்நிலையில் த்ரிஷ்யம் படத்தில் கமிட்டான அனுபவம் குறித்து ஒரு பேட்டியில் பகிர்ந்திருக்கிறார் மீனா. அந்த பேட்டியில் பேசிய அவர், "எனக்கு கம்பேக் கொடுத்த படம் என்றால் அது த்ரிஷ்யம்தான். அந்தக் கதையை கேட்ட பிறகு அது எனக்கு ரொம்பவே பிடித்திருந்தது. ஆனால் படத்தின் படப்பிடிப்பு கேரளாவில் என்பதால் அந்தப் படத்தின் தயாரிப்பாளரிடம் நான் இந்தப் படத்தில் நடிக்க முடியாது என்று சொல்லிவிட்டேன்.
குழந்தை இருக்கிறாள்: எனது குழந்தைக்கு இப்போது 2 வயதுதான் ஆகிறது. சிறிய குழந்தையை விட்டுவிட்டு வரமுடியாது. எனவே இந்த நேரத்தில் இதை என்னால் பண்ண முடியாது என்று கூறிவிட்டேன். சரி என்று முதலில் சென்றுவிட்டார்கள். பிறகு சில நாட்கள் கழித்து மீண்டும் வந்த படக்குழுவினர் நீங்கள் இல்லாமல் அந்தக் கேரக்டருக்கு வேறு யாரையும் யோசிக்க முடியவில்லை. நீங்கள் செய்தால்தான் நன்றாக இருக்கும். உங்களுக்கு என்ன வசதி வேண்டுமானாலும் செய்துதருகிறோம் வாருங்கள் என சொன்னார்கள். அதன் பிறகுதான் அந்தப் படத்தில் நடிக்க ஒத்துக்கொண்டேன்" என்றார்.


Click it and Unblock the Notifications











