“விக்ரம்“ பிளாக்பஸ்டர் ஹிட்.. கமல்-லோகேஷ் கனகராஜை நேரில் அழைத்து பாராட்டிய சிரஞ்சீவி !
சென்னை : கமல்ஹாசன் நடித்துள்ள விக்ரம் படத்தை பார்த்து தெலுங்கு மெகா ஸ்டார் சிரஞ்சீவி பாராட்டி உள்ளார்.
உலகநாயன் கமல்ஹாசன் நடிப்பில் ஜூன் 3ந் தேதி வெளியானத் திரைப்படம் விக்ரம். இப்படத்தில், கமல், சூர்யா, விஜய்சேதுபதி, பகத் பாசில், காயத்ரி, மைனா நந்தினி, ஷிவானி நாராயணன் ஆகியோர் நடித்துள்ளனர்.
இப்படம் வெளியாகி இரண்டு வாரங்கள் ஆகியுள்ள நிலையில், உலகம் முழுவதும் 250 கோடி ரூபாய்க்கும் மேல் வசூல் செய்து சாதனை செய்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

விக்ரம்
மாநகரம், கைதி, மாஸ்டர் திரைப்படத்தின் வெற்றியைத் தொடர்ந்து லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் வெளியாகி உள்ள திரைப்படம் விக்ரம். தமிழ் சினிமாவில் இந்த படம் புதிய மைல் கல்லை தொட்டுள்ளது என்று சொல்லும் அளவிற்கு படம் மகத்தான சாதனை படைத்துள்ளது. விக்ரம் படத்தை அனைத்து தரப்பு மக்களும் மிகப்பெரிய அளவில் கொண்டாடி வருகின்றனர்.

அதிரடி ஆக்ஷன் திரைப்படம்
பல அதிரடி ஆக்ஷன் காட்சிகள் நிறைந்த இந்த திரைப்படத்தில், கமல் கர்ணன் என்ற பாத்திரத்தில் நடித்துள்ளார். அவருடைய மகனை ஒரு மாஃபியா கும்பல் கொன்றுவிட, பழிவாங்க களமிறங்குகிறார் கமல். சாதாரண பழிவாங்கும் கதையைப் போல விக்ரம் படத்தின் கதையை ஆரம்பித்து, பின்னர் ஒரு லட்சிய கதையாக மாற்றி உள்ளார்.

லோகேஷ் கனகராஜுக்கு கார் பரிசு
விக்ரம் படம் கிட்டத்தட்ட 3 மணி நேரம் ஓடுவது மிக நீளமாகத் தோன்றினாலும் இந்தப் படத்தின் மூலம் இளம் தலைமுறை ரசிகர்கள் கமலின் பன்முகத்தன்மையை வியந்து பார்த்துள்ளனர். படம் பிரம்மாண்ட வெற்றி அடைந்ததால் லோகேஷ் கனகராஜுக்கு கார் ஒன்றை பரிசாக அளித்துள்ளார் கமல். மேலும், படத்தில் பணியாற்றிய உதவி இயக்குனர்கள் அனைவருக்கும் இருசக்கர வாகனத்தை பரிசாக அளித்துள்ளார் கமல்.

மெகா ஸ்டார் சிரஞ்சீவி
இந்நிலையில் கமல்ஹாசனை தெலுங்கு மெகா ஸ்டார் சிரஞ்சீவி தனது வீட்டிற்கு அழைத்து பாராட்டு தெரிவித்துள்ளார். இந்த நிகழ்வின்போது இந்தி சூப்பர் ஸ்டார் சல்மான் கான், விக்ரம் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் ஆகியோர் உடன் உள்ளனர். இந்த புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.
Recommended Video

மிகுந்த மகிழ்ச்சி
இதுகுறித்து சிரஞ்சீவி தனது ட்விட்டர் பக்கத்தில், விக்ரம் படம் வெற்றி பெற்றதற்கு மகிழ்ச்சி. எனது பழைய நண்பர் கமலஹாசனை கொண்டாடி கௌரவிக்கிறேன். கமலஹாசன் மற்றும் லோகேஷ் கனகராஜை நேற்றிரவு என் வீட்டிற்கு அழைத்து மனமார பாராட்டினேன். இந்த நிகழ்ச்சியில் சல்மான் கான் உடன் இருந்தது கூடுதல் மகிழ்ச்சி என்று தெரிவித்துள்ளார். உலகம் முழுவதும் 250 கோடி ரூபாய்க்கும் மேல் வசூல் செய்து சாதனை படைத்துள்ளது.


Click it and Unblock the Notifications











