ராஜமெளலி இயக்கத்தில் அடுத்து நடிக்க தயாராகும் இரண்டு டாப் ஹீரோக்கள்.. யார், யார் தெரியுமா?
ஹைதராபாத்: இயக்குநர் ராஜமெளலி இயக்கத்தில் உருவாகி உள்ள RRR படத்தின் ஷூட்டிங் முடிந்து ஒரு ஆண்டுக்கு மேல் ஆகியும், தனது அடுத்த படத்தை அவர் இன்னமும் ஆரம்பிக்கவில்லை.
கையில் எடுத்த படத்தை கடைசி வரை புரமோஷன் செய்து பாக்ஸ் ஆபிஸ் வசூலை பார்க்காமல் அடுத்ததை ஆரம்பிக்க மாட்டேன் என்கிற முடிவில் இருக்கிறார்.
இந்நிலையில், ராஜமெளலி மற்றும் மகேஷ் பாபு இணையப் போகும் அடுத்த படத்தை தாண்டி அதற்கு அடுத்து ராஜமெளலியுடன் யார் இணையப் போகிறார் என்கிற ஹாட் அப்டேட்டும் தற்போது கசிந்துள்ளது.

காத்துக் கிடக்கும் டாப் ஹீரோக்கள்
இந்தியாவிலேயே இவர் அளவுக்கு தற்போது எந்தவொரு இயக்குநருக்காகவும் முன்னணி நடிகர்கள் காத்துக்கிடப்பதாக தெரியவில்லை. பாகுபலி படத்தின் வெற்றியைத் தொடர்ந்து ராம்சரண், ஜூனியர் என்.டி.ஆர், அஜய் தேவ்கன், ஆலியா பட் நடித்த ஆர்.ஆர்.ஆர் படம் வரும் மார்ச் 25ம் தேதி வெளியாகவுள்ள நிலையில், அடுத்ததாக ராஜமெளலி இயக்கத்தில் நடிக்க இரு பெரும் ஹீரோக்கள் காத்திருக்கின்றனர்.

ராஜமெளலி மகேஷ் பாபு படம்
பிரபாஸ், ராம்சரண், ஜூனியர் என்டிஆர், நானி உள்ளிட்ட டோலிவுட்டின் முன்னணி நடிகர்களை இயக்கிய இயக்குநர் ராஜமெளலி இயக்கத்தில் அடுத்ததாக டோலிவுட் சூப்பர்ஸ்டார் நடிகர் மகேஷ் பாபு நடிக்கப் போகிறார் என்கிற தகவல் ஏற்கனவே வெளியானது தான். முழுக்க முழுக்க ஜங்கிள் அட்வெஞ்சர் படமாக உருவாக உள்ள அந்த படத்தில் ஆலியா பட் மகேஷ் பாபுவுக்கு ஜோடியாக நடிக்கப் போகிறாராம். ஆப்பிரிக்க காட்டில் இந்த படத்தின் படப்பிடிப்பை ராஜமெளலி நடத்த திட்டமிட்டு இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

அல்லு அர்ஜுனுடன்
அலா வைகுந்தபுரமுலோ, புஷ்பா என டோலிவுட்டின் பாக்ஸ் ஆபிஸை உயர்த்தி உள்ள நடிகர் அல்லு அர்ஜுன் ராஜமெளலி இயக்கத்தில் அடுத்ததாக இணையப் போகிறார் என்கிற அதிரடியான மெகா தகவல் தான் தற்போது ஒட்டுமொத்த திரையுலகையும் வியப்பில் ஆழ்த்தி உள்ளது. இதுவரை இருவருமே இணைந்து படம் பண்ணாத நிலையில், மிகவும் பிரம்மாண்டமாக அந்த படம் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

பாகுபலி போல
மகேஷ் பாபுவை வைத்து ராஜமெளலி இயக்கும் படம் முற்றிலும் வித்தியாசமான புதையல் வேட்டை படமாக இருக்கும் நிலையில், அல்லு அர்ஜுன் உடன் ராஜமெளலி இணையும் அடுத்த படம் பாகுபலி படத்தை போல ராஜா காலத்து படமாக ஆக்ஷனில் மிரட்டும் என தகவல்கள் வெளியாகி உள்ளன.

ருத்ரமாதேவி
ஏற்கனவே அனுஷ்காவின் ருத்ரமாதேவி படத்தில் கோன கன்னா ரெட்டி கதாபாத்திரத்தில் அல்லு அர்ஜுன் நடித்து மிரட்டி இருப்பார். ஆனால், ராஜமெளலி இயக்கத்தில் அல்லு அர்ஜுன் நடிக்கப் போகும் அந்த புதிய படம் பாகுபலிக்கும் மேல் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. மகேஷ் பாபு படத்தை இந்த ஆண்டு ஆரம்பிக்கும் ராஜமெளலி, அல்லு அர்ஜுன் படத்தை அடுத்த ஆண்டு இறுதிக்குள் தொடங்குவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

சஞ்சய் லீலா பன்சாலி
சில நாட்களுக்கு முன்னதாக பாலிவுட் இயக்குநர் சஞ்சய் லீலா பன்சாலி தனது அலுவலகத்திற்கு அழைத்து நடிகர் அல்லு அர்ஜுன் உடன் பேச்சுவார்த்தை நடத்தி உள்ளார். இயக்குநர் ராஜமெளலி படத்தில் நடிப்பதற்கு முன்னதாக சஞ்சய் லீலா பன்சாலி படத்தில் அல்லு அர்ஜுன் நடிப்பார் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

புஷ்பா 2வுக்கு பிறகு
புஷ்பா திரைப்படம் இந்திய அளவில் வசூல் வேட்டை நடத்திய நிலையில், பாலிவுட் இயக்குநர்கள் பார்வை அல்லு அர்ஜுன் மீது விழுந்திருக்கிறது. அதே சமயம் நடிகர் பிரபாஸின் படங்கள் தொடர்ந்து சொதப்பி வரும் நிலையில், அடுத்த பான் இந்திய நடிகராக அல்லு அர்ஜுன் அசத்துவார் என எதிர்பார்க்கப்படுகிறது. புஷ்பா 2வுக்கு பிறகு சஞ்சய் லீலா பன்சாலி, ராஜமெளலி என பெரிய லைன் அப் வைக்க உள்ளார் அல்லு அர்ஜுன்.


Click it and Unblock the Notifications











