மகிழ் திருமேனியின் ஆக்சன் திரில்லர் படம் - உதயநிதிக்கு ஜோடியாகும் மேகா ஆகாஷ்
சென்னை: தடம் இயக்குநர் மகிழ் திருமேனி இயக்கும் ஆக்சன் திரில்லர் படத்தில் உதயநிதி ஸ்டாலினுக்கு ஜோடியாக பேட்டை, எனைநோக்கி பாயும் தோட்டா படத்தின் நாயகி மேகா ஆகாஷ் நடிக்கப் போவாதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
தடையற தாக்க படத்தை இயக்கியவர் மகிழ் திருமேனி. அவரது இயக்கத்தில் அருண் விஜய், தன்யா ஹோப், வித்யா பிரதீப் நடித்து இந்த ஆண்டு வெளியான தடம், விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்றது.

மகிழ் திருமேனி இப்போது ஆக்சன் திரில்லர் கதையை இயக்கப்போகிறார். இந்த புதிய படத்தில் உதயநிதி ஸ்டாலின் நாயகனாக நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். தடம் படத்தின் ரிலீசுக்கு முன்பே உதயநிதியிடம் இப்படத்திற்கான கதையை சொல்லிவிட்டாராம்.
ஆக்சன் த்ரில்லர் கதைகளில் ஏற்கனவே உதயநிதி நடித்திருக்கிறார். இப்போது வித்தியாசமான திரில்லர் படமாக உருவாகவிருக்கும் இந்தப் படத்தின் முதற்கட்டப் பணிகள் தற்போது நடைபெற்று வருகிறது. உதயநிதி ஸ்டாலின் தற்போது மிஷ்கின் இயக்கத்தில் உருவாகும் சைக்கோ, கே.எஸ். அதியமானின் ஏஞ்சல், மு. மாறன் இயக்கத்தில் கண்ணை நம்பாதே போன்ற படங்களில் தீவிரமாக கவனம் செலுத்தி வருகிறார். இப்படங்கள் பல்வேறு கட்ட தயாரிப்பு நிலைகளில் இருக்கின்றன.

இந்த நிலையில் உதயநிதியின் ரெட்ஜெயண்ட் மூவீஸ் நிறுவனம் தயாரிக்கவிருக்கும் மகிழ் திருமேனி இயக்கும் படத்தில் உதயநிதிக்கு ஜோடியாக நடிக்க நடிகை மேகா ஆகாஷிடம் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருகிறது. இந்த படத்தின் படப்பிடிப்பு தேதி முடிவானதும், மேகா ஆகாஷ் ஒப்பந்தத்தில் கையெழுத்திடுவார் என கூறப்படுகிறது.
மேகா ஆகாஷ், கெளதம் மேனனின் 'எனை நோக்கி பாயும் தோட்டா' படத்தில் தனுஷ் ஜோடியாக நடித்திருக்கிறார். கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் ரஜினியின் பேட்ட படத்தில் நடித்திருக்கிறார். சிம்பு நடித்த வந்தா ராஜாவாதான் வருவேன் படத்தில் நடித்துள்ளார். தமிழ், தெலுங்கு என இரு மொழிகளிலும் கவனம் செலுத்தி வரும் மேகா ஆகாஷ், பாலிவுட்டில் 'சாட்டிலைட் சங்கர்' படத்தின் மூலம் கால் பதிக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











