Meiyazhagan Blue Sattai Maran Review: போச்சா.. மெய்யழகனை லியோவுடன் கம்பேர் செய்த ப்ளூ சட்டை மாறன்!
சென்னை: ஜோதிகா மற்றும் சூர்யாவின் 2டி நிறுவனம் தயாரிப்பில் 96 படத்தை இயக்கிய பிரேம் குமார் இயக்கத்தில் கார்த்தி, அரவிந்த் சாமி, ராஜ்கிரண், ஸ்ரீதிவ்யா நடிப்பில் வெளியான மெய்யழகன் திரைப்படத்துக்கு ப்ளூ சட்டை மாறன் கலவையான விமர்சனத்தை கொடுத்துள்ளார்.
மெய்யழகன் திரைப்படம் குடும்பத்துடன் சென்று பார்க்க வேண்டும் என்றும் சொந்த பந்தங்களை நமக்கு மீண்டும் நினைவுக்குக் கொண்டு வரும் பொக்கிஷமாக இந்த படம் இருக்கும் என பத்திரிகையாளர் காட்சியை பார்த்து விட்டு பலரும் பாசிட்டிவ் விமர்சனங்களை கொடுத்தனர்.

ஆனால், பொதுமக்கள் நேற்று இந்த படத்தை பார்த்து விட்டு பேசியே கொல்றாங்க ரொம்ப போர் அடிக்குது என உண்மையை போட்டு உடைத்த நிலையில், ப்ளூ சட்டை மாறன் படத்தின் 2ம் பாதி லியோ படம் மாதிரி இருக்கு என சோலியை முடித்துள்ளார்.
முதல் பாதி சூப்பர்: விஜய் சேதுபதி, த்ரிஷா நடிப்பில் பிரேம் குமார் இயக்கிய 96 திரைப்படம் காதலை அழகாக திரையில் காட்டியிருந்தது. காமம் இல்லாத காதல் படமாக வெளியான 96 படத்தின் ராம் மற்றும் ஜானுவை ரசிகர்கள் காலங்கடந்தும் நினைவில் கொள்வார்கள். அதே அளவுக்கு கார்த்தி மற்றும் அரவிந்த் சாமி இடையே ஒரு கெமிஸ்ட்ரியை உருவாக்கி மெய்யழகன் படத்தை பிரேம் குமார் கையாண்ட விதம் சூப்பர் என ப்ளூ சட்டை மாறன் வெகுவாக பாராட்டியுள்ளார். மெய்யழகன் படத்தின் வித்தியாசமான கதை காரணமாக முதல் பாதி முழுவதும் சூப்பராக உள்ளதாக விமர்சித்துள்ளார்.
2ம் பாதி சொதப்பல்: சமீப காலமாகவே வெளியாகும் பல படங்களுக்கு இந்த 2ம் பாதி சாபக்கேடு இருக்கத்தான் செய்கிறது. முதல் பாதி சூப்பராக இருக்கும் நிலையில், 2ம் பாதியில் ஏகப்பட்ட லேக் வந்து படத்தைக் கெடுத்து விடுவதாக ப்ளூ சட்டை மாறன் மெய்யழகன் படத்திலும் அதே பிரச்சனை பூதாகரமாக உள்ளதை சுட்டிக் காட்டியுள்ளார். 2ம் பாதியில் கார்த்தி மற்றும் அரவிந்த் சாமி இருவருக்குமிடையேயான உரையாடல்களே படமாக நீண்டுக் கொண்டே செல்வது ரசிகர்களின் பொறுமையை ஒரு கட்டத்துக்கு மேலே சோதித்து விடுகின்றனர் என்றார்.
லியோ படத்தை போல: லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடித்த லியோ படத்தில் படத்தின் டைட்டிலிலேயே லியோ என வைத்து விட்டு அனிருத் மூச்சுக்கு முந்நூறு தடவை லியோ பேடாஸ்னு பாட்டு போட்டு விட்டு நீ தான் லியோவா? லியோ தான் நீயான்னு கிளைமேக்ஸ் வரை அர்ஜுன் கேட்டுத் தொல்லை செய்வது போல இந்த படத்தில் மெய்யழகன் என கார்த்திக்கு பெயர் வைத்து விட்டு கடைசி வரை அரவிந்த் சாமி கார்த்தியின் பெயரை தெரிந்துக் கொள்ள போராடுவது எல்லாம் பெரிய அக்கப்போராக இருக்கு பாஸ் என ப்ளூ சட்டை மாறன் வெளுத்து வாங்கியுள்ளார்.
ரொம்ப கிரிஞ்ச்: முதல் பாதி அழகாக இருந்த நிலையில், 2ம் பாதியை அதை விட அழகாக வடிவமைத்திருக்க வேண்டும். ஆனால், இயக்குநர் அந்த விஷயத்தில் கவனம் செலுத்தாத நிலையில், ஏகப்பட்ட கிரிஞ்ச் காட்சிகளும் வசனங்களும் இரண்டாம் பாதி படத்தைக் கெடுத்து விட்டதாக ப்ளூ சட்டை மாறன் தனது விமர்சனத்தில் கூறியுள்ளார்.


Click it and Unblock the Notifications











