உசுரே நீதானே பாட்டுக்கு போட்டி வந்துடுச்சே.. மெய்யழகன் டிரெய்லர் கடைசியில் கண்ணீர் கன்ஃபார்ம்!
சென்னை: விஜய் சேதுபதி, த்ரிஷா நடிப்பில் வெளியான 96 படத்தை இயக்கிய பிரேம் குமார் பல ஆண்டுகள் கழித்து உருவாக்கியுள்ள படம் தான் மெய்யழகன். கார்த்தி, அரவிந்த் சாமி, ராஜ்கிரண், ஸ்ரீதிவ்யா, தேவதர்ஷினி உள்ளிட்ட பலர் நடித்துள்ள மெய்யழகன் திரைப்படம் இந்த வாரம் செப்டம்பர் 27ம் தேதி திரைக்கு வருகிறது.
சமீபத்தில் மலையாளத்தில் வெளியாகி ரசிகர்களை வெகுவாக கவர்ந்த அடியோஸ் அமிகோ படத்தை போலவே இந்த படமும் கார்த்தி மற்றும் அரவிந்த் சாமியை சுற்றித்தான் இருக்குமா? என்கிற கேள்விகள் படத்தின் காட்சிகளை பார்த்தால் எண்ணத் தோன்றுகிறது.

அந்த படத்தை போலவே இதுவும் கிராமத்து மண் வாசனை மாறாத ஒரு மச்சானுக்கும் அவனது அக்கா புருஷனான அத்தானுக்கும் இடையே நடக்கும் பாசப்போராட்டம் போலத்தான் கதையை பிரேம்குமார் வடிவமைத்து இருப்பார் என தெரிகிறது. அதன் டிரெய்லர் சற்றுமுன் வெளியாகி ரசிகர்களை கண்கலங்க செய்ய காரணமே கடைசியில் கமல்ஹாசனின் குரலில் கோவிந்த் வசந்தா இசையில் வரும் அந்த பாடல் தான்.
96 பட பாடல்கள்: விஜய் சேதுபதி, த்ரிஷா, தேவதர்ஷினி, கெளரி கிஷன், ஆதித்யா பாஸ்கர் நடிப்பில் வெளியான 96 படத்தில் கோவிந்த் வசந்தா இசையில் இடம்பெற்ற அனைத்து பாடல்களும் காதலர்களின் தேசிய கீதமாகவே மாறின. 96 படத்தின் வெற்றிக்கு மிகப்பெரிய பலமாகவும் அந்த பாடல்கள் அமைந்தன. அதே போல மெய்யழகன் படத்துக்கும் கோவிந்த் வசந்தாவின் மேஜிக் மிகப்பெரியளவில் கை கொடுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மெய்யழகன் டிரெய்லர்: மெய்யழகன் டீசர் சமீபத்தில் வெளியாகி கார்த்தி மற்றும் அரவிந்த் சாமியை மட்டுமே காட்டியிருந்தது. ஆனால், தற்போது வெளியாகி உள்ள டிரெய்லரில் தேவதர்ஷினி, ராஜ்கிரண், ஸ்ரீதிவ்யா உள்ளிட்ட கதாபாத்திரங்களையும் காட்டியுள்ளனர். அரவிந்த் சாமி அந்த ஊருக்கு பாசத்தை தேடி வரவில்லை என்றும் வேறு எதையோ தேடி வருகிறார் என்பதை டிரெய்லரில் பதிய வைத்திருக்கிறார் பிரேம் குமார்.
உசுரே நீதானேவுக்கு வந்தாச்சு போட்டி: இந்த வருடத்தில் இதுவரை வெளியான பாடல்களிலேயே ரசிகர்களை அதிகம் கொள்ளை கொண்டது ராயன் படத்தில் ஏ.அர். ரஹ்மான் போட்ட அந்த சின்ன பிட்டு பாடலான உசுரே நீதானே வரிகள் தான். ஆனால், அதையே ஓவர்டேக் செய்யும் அளவுக்கு கோவிந்த் வசந்தா இசையில் கமல்ஹாசன் பாடியிருக்கும் மெய்யழகன் படத்தின் ”பொய்யாகி தோற்றுப் போகின்றேன்.. மெய்யான உன் முன்னே” என்கிற பாடல் நிச்சயம் டிரெய்லர் கடைசியை காணும் ரசிகர்களை கண்கலங்க வைக்கும் அளவுக்கு உருவாக்கப்பட்டுள்ளது. அந்த ஜல்லிக்கட்டு போட்டி காட்சிக்கும் ரசிகர்கள் வெறித்தனமாக காத்துக் கொண்டிருக்கின்றனர்.
தேவரா vs மெய்யழகன்: இந்த வாரம் திரையரங்குகளில் மெய்யழகன், தேவரா, பேட்ட ராப், சட்டம் என் கையில், தில் ராஜா மற்றும் ஹிட்லர் உள்ளிட்ட படங்கள் வெளியாக காத்திருக்கின்றன. இதில், தேவரா மற்றும் மெய்யழகன் படங்களுக்கு மத்தியில் தான் கடுமையான போட்டி நிலவும் என்கின்றனர். கடந்த வாரம் வெளியான அரை டஜன் படங்களில் லப்பர் பந்து திரைப்படம் மக்களின் பாராட்டு மழையில் ஓடிக் கொண்டிருக்கும் நிலையில், அந்த படமும் இந்த வாரமும் கல்லா கட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது. 2டி நிறுவனம் தயாரிப்பில் சூர்யா, ஜோதிகா தயாரித்த சர்ஃபிரா இந்தி திரைப்படம் தோல்வியைத் தழுவிய நிலையில், மெய்யழகன் திரைப்படம் 2டி நிறுவனத்தை காப்பாற்றும் என எதிர்பார்க்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications











