செந்தில் பாலாஜி ரிலீஸ்! பாஜகவின் வாஷிங் மெஷின் மாடலை பின்பற்றும் முதலமைச்சர் - இயக்குநர் லெனின் பாரதி
சென்னை: தமிழ்நாடு அரசியல் களத்தில் தற்போது மிகவும் பரபரப்பான விஷயமாக மாறி இருப்பது, முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி கிட்டத்தட்ட 15 மாதங்கள் அதாவது 417 நாட்கள் சிறைவாசத்திற்குப் பின்னர் ஜாமீனில் விடுவிக்கப்பட்டிருப்பதுதான். கடந்த 2011-2016 அதிமுக ஆட்சிக் காலத்தில் போக்குவரத்துத்துறை அமைச்சராக செந்தில் பாலாஜி இருந்த போது, போக்குவரத்து துறையில் வேலை வாங்கித் தருவதாக கூறி சட்ட விரோதமாக பணம் பரிமாற்றம் செய்யப்பட்டதாக, திமுக ஆட்சியில் மின்சாரத்துறை அமைச்சராக இருந்த செந்தில் பாலாஜி கைது செய்யப்பட்டார். இவரை அமலாக்கத்துறையின் கடந்த 2023 ஆம் ஆண்டு ஜூன் 14ஆம் தேதி அவரது வீட்டில் சோதனை நடத்தி முடித்த பின்னர் நள்ளிரவில் கைது செய்தனர்.
கைது செய்யப்பட்டபோது அவருக்கு நெஞ்சு வலி ஏற்படவே, சென்னை ஓமந்தூரார் அரசு பல்நோக்கு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அதன் பின்னர், தனியார் மருத்துவமனைக்கு மாற்றம் செய்யப்பட்டு, அங்கு அவருக்கு இதய அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. இதற்கிடையில் செந்தில் பாலாஜி தரப்பில் பலமுறை ஜாமீனுக்கு விண்ணப்பிக்கப்பட்டும், ஜாமீன் கிடைக்கவில்லை. சிகிச்சை முடிந்து ஓய்வில் இருந்த செந்தில் பாலாஜி நீதிமன்றக் காவலில், செனனியில் உள்ள புழல் சிறையில் அடைக்கப்பட்டார்.

இப்போதுவரை புழல் சிறையிலேயே உள்ளார். இவரது தரப்பில் சென்னை முதன்மை நீதிமன்றத்திலும் சென்னை உயர்நீதிமன்றத்திலும் ஜாமீன் கோரி விண்ணப்பிக்கப்பட்டது. ஆனால், அவருக்கு சாதகமாக ஒருமுறைகூட நீதிமன்றம் ஜாமீன் வழங்கவில்லை. இதுமட்டும் இல்லாமல், சுமார் 50 முறை ஜாமீனுக்காக மட்டும் நீதிமன்றத்தின் கதவுகளைத் தட்டினார் செந்தில் பாலாஜி. ஆனால் உடனடியாக அவரது எண்ணம் நிறைவேறவில்லை.
ஜாமீன்: சிறையில் அடைக்கப்பட்ட பின்னர் இலாகா இல்லாத அமைச்சராக செந்தில் பாலாஜி தொடர்ந்து வந்தார். செந்தில் பாலாஜி கைது செய்யப்பட்டபோது, தமிழ்நாடு முதலமைச்சர் தொடங்கி, அமைச்சர்கள் எம்.எல்.ஏக்கள் திமுக மாவட்ட செயலாளர்கள் என அனைவரும் செந்தில் பாலாஜியைப் பார்க்க ஓமந்தூரார் மருத்துவமனைக்குச் சென்றனர். செந்தில் பாலாஜியின் சகோதரர் தொடர்ந்து தலைமறைவாக இருந்ததாலும், செந்தில் பாலாஜியின் ஜாமீன் மனுக்கள் ரத்து செய்யப்பட்டது. இலாகா இல்லாத அமைச்சராக தொடர்வதால்தான் நீதிமன்றம் தனக்கான ஜாமீனை வழங்க மறுக்கின்றது எனக் கருதி, தனது அமைச்சர் பதவியையும் ராஜினாமா செய்தார்.

முதலமைச்சர் ஸ்டாலின்: இந்நிலையில் இன்று அதாவது, செப்டம்பர் 26ஆம் தேதி உச்சநீதிமன்றம், செந்தில் பாலாஜிக்கு ஜாமீன் வழங்கியது. இதனால் முதலமைச்சர் ஸ்டாலின் தனது எக்ஸ் பக்கத்தில், " ஆருயிர் சகோதரர் செந்தில் பாலாஜி, 471 நாட்களுக்குப் பிறகு, உச்ச நீதிமன்றத்தால் பிணை கிடைத்திருக்கிறது. அமலாக்கத் துறையானது, அரசியல் எதிரிகளை ஒடுக்கும் துறையாக மாற்றப்பட்ட தற்போதைய சூழலில், அதற்கு உச்சநீதிமன்றம் ஒன்றே விடியலாக இருக்கிறது.

லெனின் பாரதி: எமர்ஜென்சி காலத்தில் கூட இவ்வளவு நாட்கள் சிறை வாழ்க்கை கிடையாது. அரசியல் சதிச் செயல்கள் 15 மாதங்கள் தொடர்ந்தன. கைது செய்து சிறையிலேயே வைத்துவிடுவதால் சகோதரர் செந்தில் பாலாஜியின் உறுதியைக் குலைக்க நினைத்தார்கள். முன்னிலும் உரம் பெற்றவராய்ச் சிறையில் இருந்து வெளியில் வரும் சகோதரர் செந்தில் பாலாஜியை வருக வருக என வரவேற்கிறேன். உன் தியாகம் பெரிது! உறுதி அதனினும் பெரிது!" எனக் குறிப்பிட்டார். முதலமைச்சரின் இந்த பதிவுக்கு திரைப்பட இயக்குநர் லெனின் பாரதி தனது எக்ஸ் பக்கத்தில், "அங்கே பிஜேபி வச்சிருக்கும் அதே மாடல் "ஊழல் கறை நீக்கிற மந்திர வாசிங் மிஷின்" இங்க தமிழ்நாட்டில நாங்களும் வைச்சிரும்லோ... உன் தியாகம் பெரிது! உறுதி அதனினும் பெரிது!" என பதிவிட்டுள்ளார். இது பலரது கவனத்தையும் ஈர்த்துள்ளது. மேலும் இந்தப் பதிவோடு, அமைச்சர் செந்தில் பாலாஜி மீது உள்ள குற்றச்சாட்டுகளை முதலமைச்சர் ஸ்டாலின் எதிர்க்கட்சியாக இருந்தபோது, பிரச்சாரத்தின்போது வாசித்த வீடியோவையும் பதிவிட்டுள்ளார்.



Click it and Unblock the Notifications











