திரைத்துறையில் அடுத்த சோகம்.. பிரபல திரைப்பட வசன கர்த்தா காலமானார்.. திரையுலகினர் இரங்கல்!
சென்னை: பிரபல வசன கர்த்த ராசீ தங்கதுரை உடல்நலக்குறைவு இன்று காலமானார். அவருக்கு வயது 53.
2018ம் ஆண்டு லெனின் பாரதி இயக்கத்தில் விஜய் சேதுபதி தயாரிப்பில் உருவானத் திரைப்படம் மேற்கு தொடர்ச்சி மலை. இப்படத்தில் மலை வாழ் மக்களின் வாழ்வியலையும், அவர்களின் வலிகளையும் இயக்குநர் அழகாக எடுத்துக்காட்டி இருந்தார். இந்த படத்தில் கதாநாயகனாக ஆண்டனியும், கதாநாயகியாக காயத்ரியும் நடித்திருந்தனர்.

ராசீ தங்கதுரை: இளையராஜாவின் இசையில்,தேனி ஈஸ்வரின் ஒளிப்பதிவில் உருவான இத்திரைப்படத்திற்கு ராசீ தங்கதுரை வசனம் எழுதி இருந்தார். இந்த படத்திற்கு வசனம் எழுதியது மட்டுமல்லாது அந்தப் படத்தில் சிறு வேடத்திலும் ராசீ தங்கதுரை நடித்திருந்தார். அந்த படத்தைத் தொடர்ந்து, தேன், கெவி, தாக்கல், ஆதாரம் உள்ளிட்ட படங்களில் வசனகர்த்தாவாக பணிபுரிந்துள்ளார். மேலும் பெயரிடப்படாத 4 திரைப்படங்களுக்கு ஒப்பந்தமாகியுள்ளார்.
உயிரிழந்தார்: இந்நிலையில், உடல் நலக்குறைவால் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த ராசீ தங்கதுரை இன்று காலை உயிரிழந்தார். 53வயதே ஆன அவருக்கு முருகேஸ்வரி என்ற மனைவியும் ராசீ.பிரியன், சுகதேவ் திலீபன் என்ற இரு மகன்கள் உள்ளனர். அவரது இறுதிச்சடங்கு ஆண்டிபட்டியில் அவரது சொந்த ஊரான கதிர்நரசிங்காபுரம் கிராமத்தில் நடைபெற உள்ளது.
பிரபலங்கள் இரங்கல்: தமிழ் திரைப்பட வசன எழுத்தாளர் ராசீ தங்கதுரையின் மறைவு திரைத்துறையினரை சோகத்தில் ஆழ்த்தி உள்ளது. பல பிரபலங்கள் அவரது மறைவுக்கு எக்ஸ் தள பக்கத்தில் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
பல சிறுகதைகள்: ராமையா - சீனியம்மாள் தம்பதியரின் மகனான தங்கதுரை, தாய், தந்தை மீது இருந்த பாசத்தால் தன்னுடைய பெயரில் பெற்றோரின் பெயரை சேர்த்துக்கொண்டார். இலக்கியத்தின் மீது ஈடுபாடு கொண்ட இவர் இதுவரை 200க்கும் மேற்பட்ட சிறுகதைகளை எழுதி உள்ளார்.


Click it and Unblock the Notifications











