பெரிய நடிகர்கள் இல்லை என்று கூறி தியேட்டர் தர மறுக்கிறார்கள்- மெய்யழகி இயக்குநர்

கிட்டத்தட்ட புதுமுகங்கள் எனும் அளவுக்கு சிறு நடிகர்களை வைத்து, சிறிய பட்ஜெட்டில் மெய்யழகி என்ற படத்தை இயக்கியுள்ளார் ஜெயவேல்.
சமீபத்தில் இதன் இசை வெளியாகி, பிரபலங்களின் பாராட்டுகளைப் பெற்றது.
இப்போது படத்தை வெளியிடத் தயாராகி வருகின்றனர்.
ஆனால் படத்துக்கு தியேட்டர் தர மறுக்கிறார்களாம் திரையரங்க உரிமையாளர்கள்.
இது குறித்து படத்தின் இயக்குநர் ஜெயவேல் இயக்குநர்கள் சங்கத்தில் புகார் அளித்துள்ளார். இது தொடர்பாக அவர் கூறுகையில், "மெய்யழகி' படத்தை குறைந்த பட்ஜெட்டில் கஷ்டப்பட்டு எடுத்துள்ளேன்.
தணிக்கை குழுவினர் எந்த 'கட்'டும் இல்லாமல் 'யு' சான்றிதழ் அளித்தனர். அரசின் வரிவிலக்கும் கிடைத்துள்ளது. வருகிற 22-ந்தேதி படத்தை ரிலீஸ் செய்ய திட்டமிட்டோம்.
ஆனால் சிறு பட்ஜெட் படம் அறிமுகம் இல்லாத நடிகர்கள் என்று சொல்லி இப்படத்துக்கு தியேட்டர்கள் தர மறுக்கிறார்கள்.
எல்லா தியேட்டர்களையும் இரண்டாம் உலகம் படத்துக்கு ஒதுக்கி விட்டதாகக் கூறுகின்றனர். தரமான சிறு பட்ஜெட் படங்களை திரையிட விடாமல் தடுப்பது என்ன நியாயம்? அப்படி என்றால் இந்த மாதிரி படங்களை நாங்கள் எங்கே போய் வெளியிடுவது?
எங்களுக்கு தியேட்டர் ஒதுக்கி தர வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்," என்றார்.
இந்த படத்தை வர்ஷினி பிலிம்ஸ் சார்பில் பிஆர்ஓவும் இயக்குநருமான பி.டி.செல்வகுமார் வரும் 22-ந்தேதி தமிழகம் முழுவதும் ரிலீஸ் செய்கிறார்!


Click it and Unblock the Notifications











