twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    நெஞ்சம் மறப்பதில்லை-27: எம்ஜிஆர்... என் வாழ்வில் மறக்க முடியாத மாமனிதர்! - ஏவிஎம் சரவணன்

    |

    - பெரு துளசிபழனிவேல்

    புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர்.மீது மிகுந்த மரியாதை கொண்டவர் ஏவிஎம் நிறுவன அதிபர் ஏவி மெய்யப்பன். அதிலும் ஏவிஎம்மின் புதல்வர்களான எம் முருகன், எம் குமரன், எம் சரவணன், எம் பாலசுப்பிரமணியன் ஆகியோர் அவரது ரசிகர்கள். எம்ஜிஆர் படங்களை விரும்பிப் பார்ப்பவர்கள். எம்.ஜி.ஆர். அவர்களின் படம் ரிலீஸ் ஆகும் அன்றைக்கு முதல்நாள் முதல் காட்சிக்கே போய் படத்தை பார்த்துவிட வேண்டும் என்ற ஆசை கொண்டவர்கள்.

    அப்போதெல்லாம் எம்ஜிஆர் படங்கள் முதலில் தாம்பரத்தில் ரிலீசாகி, பிறகுதான் சென்னை நகரில் ரிலீசாகும். "இங்கே சிட்டியில் ரிலீசாகமாலா போகும்? அப்பபோய் பாருங்களேன்,' என்பார் ஏவிஎம் மெய்யப்பன். ஆனால், "முதல் நாளே அவர் படம் பார்த்தால்தான் எங்களுக்கு திருப்தியா இருக்கும்.

    MGR and AVM

    அதனால்தான் எம்.ஜி.ஆர் தயாரித்து, தானே இயக்கி நாயகனாக நடித்த 'நாடோடி மன்னன்' படம் வெளியானதும் நானும் என் சகோதரர்களும் (முருகன் & குமரன்) தாம்பரம் ஜி.ஆர்.தியேட்டரில் (இப்போது எம்.ஆர். தியேட்டர் என்ற பெயர் மாற்றப்பட்டிருக்கிறது) முதல் நாளே படத்தைப் பார்த்தோம். அந்த த்ரில் இன்றும் எங்கள் நினைவிலிருக்கிறது," என்றுஎம்.ஜி.ஆர் பற்றியான பசுமையான நினைவுகளைக் கூறுகிறார் ஏவிஎம் சரவணன்.

    "அவர் கத்தி சண்டை போடும் ஸ்டைல் எனக்கு ரொம்ப பிடிக்கும். 'சண்டை போடும்போது ஒரு பறவையை பிடிப்பது போல் லாவகமாக கத்தியைப் பிடிக்க வேண்டும் என்பார்கள். ரொம்ப அழுத்தினால் பறவை காலி. ரொம்பவும் லேசாகப் பிடித்தால் தப்பிப் போய்விடும்.

    அதுபோலத்தான் கத்தியும். ஒரு குறிப்பிட்ட அளவு அழுத்தம் தந்து பிடித்தால்தான் அதை அழகாகச் சுழற்றி சண்டை போட முடியும்,' என்பார் எம்.ஜி.ஆர்.

    MGR and AVM

    இப்படி சிறிய வயதிலிருந்தே எம்.ஜி.ஆரைஎனக்கு மிகவும் பிடித்துப் போனதாலோ என்னவோ எங்கள் ஏவிஎம் பேனரில் எம்.ஜி.ஆரை வைத்துப் படம் ஒன்று தயாரிக்க வேண்டும் என்ற எண்ணம் எங்களுக்குள் வளர்ந்து கொண்டே வந்தது.

    எனது நண்பர் நடிகர் எஸ்.ஏ.அசோகன் அவர்களும் அடிக்கடி என்னைச் சந்திக்கும்போதெல்லாம் 'எம்.ஜி.ஆரை வைத்து நீங்கள் ஒரு படம் எடுக்க வேண்டும்' என்று வலியுறுத்திக் கொண்டே இருப்பார். எங்கள் விநியோகஸ்தர்களும் இதே கருத்தை சொல்லிக் கொண்டிருந்தார்கள். நாங்களும் எம்.ஜி.ஆரை வைத்து படம் எடுக்கத் தயாரானோம். டைரக்டர் ஏ.சி. திருலோகச்சந்தரிடம் எம்.ஜி.ஆருக்கான ஒரு கதையை தயார் செய்யச் சொன்னோம். இதைஎங்கள் தந்தையிடம் சொல்வற்கு போனோம். எங்களுக்கு உள்ளுக்குள் கொஞ்சம் பயமாகவே இருந்தது. ஏனென்றால் எங்களது நிறுவனத்தில் கதைக்குதான் ஹீரோவைத் தேடுவோம்.

    ஹீரோவுக்காக கதை கிடையாது. முதலில் நல்லகதையை முடிவு செய்தபிறகுதான் ஹீரோ பற்றியே பேசுவோம். அதனால் தான் முதலில் டைரக்டர் ஏ.சி.திருலோகசந்தரை எம்.ஜி.ஆருக்கு ஒரு கதையை தயார் செய்ய சொன்னோம். எங்களது தந்தையும் எம்.ஜி.ஆரை வைத்து படம் எடுப்பதற்கு மகிழ்ச்சியுடன் ஒப்புக் கொண்டார். அடுத்து எம்.ஜி.ஆர்.ஒப்புக்கொள்ள வேண்டுமே.

    MGR and AVM

    நாங்கள் ராமாவரம் தோட்டத்திற்கு விரைந்தோம். அவருக்குள்ளும் எங்கள் நிறுவனத்தில் நடிக்க வேண்டும் என்ற ஆசை இருந்திருக்கிறது. கேட்டதும் 'ஓ.எஸ்....

    பண்ணிடுவோம்' என்றுமகிழ்ச்சியுடன் சம்மதித்தார்.

    ஏ.சி.திருலோகசந்தர் கதை சொன்னார். அப்போது பிரபலமாக ஓடிய 'கம்செப்டம்பர்' என்ற ஆங்கிலப் படத்தை அடிப்படையாகக் கொண்ட ஒரு கதை அது.

    கதையைச் சொன்னார். எம்.ஜி.ஆருக்கு மிகவும் பிடித்துவிட்டது.1965ஆம் ஆண்டு ஜனவரியில் 'எங்க வீட்டு பிள்ளை' ரிலீசாகியது.1966 ஜனவரி பொங்களுக்கு நாங்கள் 'அன்பே வா' என்ற பெயர் சூட்டியிருக்கும் இந்தப் படத்தை வெளியிட ஆசைப்பட்டு எம்.ஜி.ஆரைக் கேட்டோம்.

    அவர், "அது முடியாது வீரப்பாவுக்கு (ஆம்.எம்.வீரப்பன்) 'நான் ஆணையிட்டால்' படத்தை வெளியிட ஒப்புக்கொண்டேன். அதன்பிறகு உங்கள் படம் ரிலீசாகட்டும்.

    எதற்கும் வீரப்பாவிடம் பேசிவிட்டு பதில் சொல்கிறேன்," என்றார்.

    'அன்பே வா' படத்திற்கு மூன்று லட்சம் ரூபாய் சம்பளம் கேட்டார். ஒப்புக் கொண்டோம். ஆனால் ஜனவரி பொங்கலுக்கு (1966) 'அன்பேவா' ரிலீசாக 25 ஆயிரம் ரூபாய் கூடுதலாகக் கேட்டார். இந்தப் படத்திற்காக அவருக்கு சம்பளமாக கொடுக்கப்பட்டது மூன்றே கால் லட்சம் ரூபாய்.

    'அன்பே வா' படத்தை நாங்கள் சொன்னப்படி 1966 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் பொங்கலன்று ரிலீஸ் செய்தோம்.

    'அன்பே வா' படத்தின் முக்கிய காட்சிகள் சிம்லாவில் படமாக்கப்பட்டன. சிம்லாவில் பயங்கர குளிர். அங்கே போர்முனையில் காயம் அடைந்த இந்திய படையினருக்கான நிதி திரட்டும் நிகழச்சி அங்கே நடந்துக் கொண்டிருந்தது. எம்.ஜி.ஆரும் சரோஜாதேவியும் படப்பிடிப்பு முடிந்த மாலை நேரத்தில் போய் கலந்துக் கொண்டார்கள். நீங்கள் இந்த நிகழ்ச்சியின் மூலம் எவ்வளவு பணம் திரட்டுகிறீர்களோ அதற்கு சமமான தொகையை நான் எனது தனிப்பட்ட அன்பளிப்பாக இந்த நிதிக்கு வழங்குகிறேன் என்ற ஒரு அறிவிப்பை யாரும் எதிர்பார்க்காமல் வெளியிட, அனைவரின் கைதட்டல்களை பெற்றார் எம்.ஜி.ஆர்.

    MGR and AVM

    அந்தத் தொகை எவ்வளவு என்று தெரிந்ததும் தன் சம்பளத்தில் கணக்கு வைத்துக் கொள்ளச் சொல்லிவிட்டு எங்களிடமிருந்து அந்தப் பணத்தை வாங்கி நிதிக்கு வழங்கினார் எம்.ஜி.ஆர். அதற்காகத்தான் கூடுதலாக பணம் கேட்டிருந்தார் எம்ஜிஆர்.

    அவ்வளவுதான்... ஒரே இரவில் சிம்லா மக்களின் ஹீரோவாகிப் போனார் எம்.ஜி.ஆர். சிம்லாவில் சோலன் என்ற ஒரு இடம். அங்கே எல்லா வண்டிகளும் நிற்கும். எங்கள் வண்டியும் நின்றது. அங்கிருந்து சற்று மேடான பகுதியில் நல்ல ஹோட்டல் இருந்தது. சுமார் ஐம்பது, அறுபது படிகள் மேலே ஏறிப்போக வேண்டும். எம்.ஜி.ஆர்.உட்பட அனைவரும் மேலே ஏறிப் போனார்கள். நான் மட்டும் கீழே காரிலேயே இருந்து விட்டேன். கடுமையான குளிர் காரணமாக கோட்டைக் கழற்றி போர்த்திக் கொண்டேன். எனக்கு தொண்டை கட்டிக் கொண்டு பயங்கரமான வலி. காரின் கதவை ஏற்றிவிட்டுக் கொண்டு படுத்துவிட்டேன்.

    களைப்பு மிகுதியில் சிறிது நேரத்தல் தூங்கிவிட்டேன். யாரோ காரின் கதவைத் தட்டுவது போலிருந்தது திடுக்கிட்டு எழுந்து திறந்து பார்த்தேன். எம்.ஜி.ஆர் நின்றிருந்தார். கையில் சூடான பால் கோப்பையை ஒரு மஃப்ளரால் சுற்றி வைத்துக் கொண்டிருந்தார். எனக்கு திக்கென்றது. என்ன இது எம்.ஜி.ஆரே, பால் கொண்டு வந்திருக்காரே என்று சங்கடமாகிவிட்டது.

    "இந்தாங்க சரவணன்... சூடா பால் குடிங்க தொண்டைவலிக்கு இதமாக இருக்கும்," என்றார்.

    பதற்றத்துடன், "என்ன சார் நீங்களே கொண்டு வந்திருக்கீங்க' என்றேன். 'என் உதவியாளர் மலையப்பனிடமோ, எஸ்.பி.முத்துராமன், திருலோகசந்தரிடமோ கொடுத்தனுப்பியிருக்கலாமே சார்' என்றேன். அவர்கிட்ட கொடுத்தனுப்பியிருந்தா 'நீங்க குடிச்சிருக்க மாட்டீங்க. ஏதாவது சாக்குபோக்கு சொல்லி வேண்டாம்னு சொல்லியிருப்பீங்க. இந்தப்பாலை இப்பநீங்க குடிக்கிறீங்க காலிகப்பை எடுத்துக் கொண்டுதான் நான் போவேன்," என்று அடம்பிடித்தார். அதேபோல் செய்தார்.

    என் மேல் அவர் கொண்டிருந்த தனிப்பட்ட பாசத்தை உணர்ந்த நான் நெகிழ்ந்து போய்விட்டேன்.

    MGR and AVM

    தமிழ்த் திரையுலகம் எம்.ஜி.ஆர் என்ற பெயரை எப்படி எந்த நாளும் மறக்க முடியாதோ அப்படியே என் தனிப்பட்ட வாழ்க்கையிலும் என்னால் அவரை மறக்க முடியாது. என்னிடம் தனிப்பாசம் கொண்டிருந்தவர் அவர். 1985ஆம் ஆண்டு எனக்கு சென்னை மாநகர ஷெரீப் பதவியைத் தந்து கௌரவித்தார். நான் சற்றும் எதிர்பார்க்காத வாய்ப்பாக அது அமைந்தது.

    'சம்சாரம் அது மின்சாரம்' வெற்றி விழாவுக்கு முதலமைச்சர் எம்.ஜி.ஆரை சிறப்புவிருந்தினராக அழைத்திருந்தேன். வருகிறேன் என்று ஒப்புதல் தந்தார்.

    கலைஞர்கள் ஒவ்வொருக்கும் அவர் கையால் கேடயம் தரவேண்டும் என்று நான் கேட்டேன். அதற்கும் சரி என்றார்.

    இதற்கிடையில் பிற்பகலில் தமிழ்நாட்டில் ஒரு இடத்தில் ரயில் விபத்து ஒன்று ஏற்பட்டு பரபரப்பானது. முதல்வருக்கு அதை உடனடியாகக் கவனித்து உத்தரவுகள் பிறப்பிக்க வேண்டிய கட்டாயம்.

    இதுவிஷயமாக என் மதிப்பிற்குரிய பெரியவர் நாகி ரெட்டியார் என்னை அழைத்து நிலைமையைப் பார்த்தால் எம்.ஜி.ஆர் அநேகமாக இன்று நிகழ்ச்சிக்கு வரமாட்டார் என்றுதான் எனக்குத் தோன்றுகிறது என்றார்.

    எனக்கு அப்போதும் நம்பிக்கை தளரவில்லை. இல்லை சார் நிச்சயம் வருவார் பாருங்கள் டெக்னிஷீயன்ஸ் லிஸ்ட் கூட கேட்டார். அனுப்பியிருக்கிறேன் என்றேன்.

    அனைவரும் வியக்க சரியான நேரத்தில் எம்.ஜி.ஆர் வந்திறங்கினார். ஒவ்வொரு கேடயமும் கிட்டதட்ட எட்டரை கிலோ அளவில் இருந்தன. அத்தனைக் கேடயங்களையும் அவர் ஒருவரே எல்லோருக்கும் வழங்கினார். ஒரு கேடயத்தின் அடிப்பாகத்தில் இருந்த கூரானபகுதி அவர் கையைக் கிழித்து ரத்தகூடவந்தது.

    நான் 'போதும் சார்' என்று அதிர்ச்சியோடு சொன்னதும் மற்ற டெக்னிஷியன்களுக்கும் ஆசை இருக்காதா என்னிடமிருந்து கேடயம் பெற வேண்டும் என்று சொல்லி அத்தனை பேருக்கும் கேடயம் வழங்கி மகிழ்ச்சியில் ஆழ்த்தினார்.

    கே.பாக்யராஜ் இயக்கத்தில் நாங்கள் தயாரித்த 'முந்தானை முடிச்சு' படத்தின் வெள்ளி விழாவிலும் கலந்துக் கொணடு கேடயங்களை வழங்கினார்.

    எங்கள் நிறுவனத்தின் தயாரிப்பில் டைக்ரடர் பாரதிராஜா 'புதுமைப் பெண்' என்றபடத்தை இயக்கினார். அந்தப் படம் நல்ல கதையமைப்புக் கொண்டப்படமாக

    இருந்தாலும் பெரிய வெற்றியை எட்டமுடியாத நிலை. அதனால் முதல்வர் எம்.ஜி.ஆரை ராமாவரம் தோட்டத்தில் சந்தித்துப் பேசினோம். 'புதுமைப் பெண்'

    படத்திற்கு வரிவிலக்கு அளித்தார். படம் பார்க்க மக்கள்கூட்டம் தியேட்டருக்கு வந்தது. 'புதுமைப் பெண்' எம்.ஜி.ஆர் செய்த உதவியால் பெரிய வெற்றிப் படமானது.

    எங்கள் நிறுவனத்துக்கு 'அன்பே வா' என்ற ஒரே ஒரு படம்தான் எம்.ஜி.ஆர் செய்து கொடுத்தார். என்றாலும் என் தந்தையார் காலத்திலிருந்து ஏவிஎம் நிறுவனம் மீது அவர் கொண்டிருந்த அபிமானமும் என் தந்தையார் மீதும் அவரைத் தொடர்ந்து எங்கள் குடும்பத்தின் மீதும் அவர் காட்டி வந்த உண்மையான பாசமும்,

    அன்பும் எந்தக் காலத்திலும் என்னால் மறக்க முடியாதவை. எம்.ஜி.ஆர் என்றும் எனக்குள் இருப்பார்," என்றார் நெகிழ்ச்சியுடன். & தொடரும்

    - தொடரும்

    English summary
    Peru Thulasi Palanivel's Nenjam Marappathillai cinema series part 27
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X