49 ஆண்டுகளுக்குப் பின் எம்ஜிஆரின் ஆயிரத்தில் ஒருவன்... 100 அரங்குகளில் மறுவெளியீடு!
சென்னை: மக்கள் திலகம் அமரர் எம்ஜிஆர் நடித்து வசூலில் சரித்திரம் படைத்த ஆயிரத்தில் ஒருவன் படம் 49 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் வெளியாகிறது.
டிஜிட்டலில் புதுப்பிக்கப்பட்டுள்ள இந்தப் படம் சென்னை உள்பட தமிழகம் - கேரளா முழுவதும் 100 க்கும் மேற்பட்ட அரங்குகளில் வெளியாகிறது.

எம்ஜிஆர் - ஜெயலலிதா
எம்.ஜி.ஆர். நடித்து 1965-ல் ரிலீசாகி வெற்றிகரமாக ஓடிய படம் ஆயிரத்தில் ஒருவன். தற்போதைய முதல்வர் ஜெயலலிதா எம்ஜிஆரின் நாயகியாக நடித்திருந்தார். இருவரும் இணைந்த முதல் படம் இந்த ஆயிரத்தில் ஒருவன்தான்.

பிஆர் பந்துலு
நாகேஷ், நம்பியார், ஆர்.எஸ். மனோகர் போன்றோரும் முக்கிய கேரக்டரில் நடித்தனர். கர்ணன், கப்பலோட்டிய தமிழன் என பிரமாண்ட படங்களை இயக்கி, மிகுந்த பொருளாதார நெருக்கடியில் இருந்த இயக்குநர் பி.ஆர்.பந்துலுவுக்காக எம்ஜிஆர் நடித்த முதல் படம் இது.

வசூல் சாதனை
1965, ஜூலை 9-ல் வெளியான ஆயிரத்தில் ஒருவன் படம் வசூலில் பெரிய சாதனைப் படைத்தது. கறுப்பு வெள்ளை காலமான அன்றைக்கு, இந்தப் படத்தின் கண்கவர் வண்ணமும், எம்ஜிஆரின் கம்பீர நடிப்பும், ஜெயலலிதாவின் அழகும் ரசிகர்களை திரும்பத் திரும்ப அரங்குகளுக்குப் போக வைத்தன.

பாடல்கள்
படத்தின் இன்னொரு ப்ளஸ் இசை மற்றும் பாடல்கள். விஸ்வநாதன் - ராமமூர்த்தி இசையில் கவியரசு கண்ணதாசனும், கவிஞர் வாலியும் காலத்தால் அழியாத இனிய பாடல்களை உருவாக்கியிருந்தனர்.

டிஜிட்டலில்
இப்படம் நவீன தொழில் நுட்பத்தில் புதுப்பிக்கப்பட்டு மீண்டும் தமிழகம் மற்றும் கேரளாவில் வருகிற 14-ந்தேதி ரிலீஸ் செய்யப்படுகிறது. கலர் மெருகேற்றப்பட்டு உள்ளது. மொத்தம் 100 தியேட்டர்களில் ஆயிரத்தில் ஒருவன் திரையிடப்படும் என்று திவ்யா பிலிம்ஸ் சொக்கலிங்கம் தெரிவித்து உள்ளார்.

நாடோடி மன்னன்
ஏற்கனவே எம்.ஜி.ஆரின் நாடோடி மன்னன், உலகம் சுற்றும் வாலிபன், அடிமைப்பெண் உள்ளிட்ட பல படங்கள் மீண்டும் ரிலீஸ் செய்யப்பட்டு வசூலைக் குவித்தது நினைவிருக்கலாம்.


Click it and Unblock the Notifications











