நெஞ்சம் மறப்பதில்லை-26: நம்பியவர்களை பல்லாண்டு வாழ வைத்த எம்ஜிஆர்!

By Shankar

- பெரு துளசிபழனிவேல்

மக்கள் திலகம் எம்.ஜி.ஆர் அவர்களைப் பொருத்தவரை அவரைக் நம்பி கெட்டவர்கள் யாருமில்லை. நம்பாமல் கெட்டவர்கள் பலருண்டு. இது அன்றைய

சினிமாவைப் பார்த்தவர்களுக்கு, அதனுடன் பயணித்தவர்களுக்கு நன்கு தெரியும். எம்ஜிஆரை நம்பி வந்தவர்கள் நிறைய பேர் நம்ப முடியாத அளவிற்கு உயர்ந்திருக்கிறார்கள்.

MGR, the savior of true loyalties

உதாரணம் இந்த இருவர். பத்திரிகையாளர்கள் மணியன், ஜோதிடர் வித்வான் வே.லட்சுமணன்.

இவர்கள் புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆருக்கு விசுவாசமாக இருந்தவர்கள். குறிப்பாக மணியன், உலகம் சுற்றும் வாலிபன் படத்தை ஜப்பானில் படமாக்க உதவி புரிந்தவர். அந்த விசுவாசம், நன்றிக்கு எம்ஜிஆர் தந்த பரிசுதான் உதயம் புரொடக்ஷன்ஸ். இது எம்ஜிஆரே தொடங்கி வைத்த நிறுவனம். எப்படித் தெரியுமா?

ஒரு நாள் மணியன் வீட்டுக்கே போன எம்ஜிஆர், அவரது அதிர்ச்சி விலகும் முன்பே தந்த இன்ப அதிர்ச்சி, "நீங்களும் வித்வான் லட்சுமணனும் சேர்ந்து ஒரு படம் தயாரிங்க.. நான் நடிச்சுத் தரேன்," என்று ஒரு நாள் எம்ஜிஆர் திடீரென்று சொல்ல, உடனே "நாங்க எப்படி தயாரிக்க முடியும்?" என்று அதிர்ச்சியுடன் கேட்டுள்ளனர்.

உடனே எம்ஜிஆர், ஒரு பேப்பர் பேனா கொண்டு வரச்சொல்லி, 'உதயம் புரொடக்ஷன் நிறுவனத்துக்காக நான் ஒரு படம் நடிக்கிறேன்' என்று எழுதி, கீழே தன் கையொப்பத்தையும் இட்டு, "இதை பத்திரிகைகளுக்கு கொடுங்கள்," என்று மட்டும் சொன்னாராம். அடுத்த நாளே அவர்கள் நட்சத்திரத் தயாரிப்பாளர்களாகிவிட்டார்கள்.

MGR, the savior of true loyalties

எம்ஜிஆர் அப்படி கால்ஷீட் கொடுத்து உருவான படம்தான் 'இதயவீணை'.

அடுத்து அவர் இரட்டை வேடம் ஏற்று நடித்த படம் 'சிரித்து வாழ வேண்டும்'. இந்தப் படத்தை விகடன் ஆசிரியர் எஸ் பாலசுப்பிரமணியம் எஸ்எஸ் பாலன் என்ற பெயரில் இயக்கினார். இரண்டு படங்களும் வெற்றிப் பெற்று மணியன், வித்வான் வே.லட்சுமணனுக்கு வசூலை அள்ளித் தந்தன. அன்றைய தமிழ் திரையுலகில் உதயம் புரொடக்ஷன்ஸ் திடீரென்று உருவாகி பிரபலமான நிறுவனமாக மாறிவிட்டது.

இந்த இரண்டு வெற்றிப் படங்களுக்கு பிறகு மறுபடியும் எம்.ஜி.ஆரை மீண்டும் நடிக்க வைத்து படம் எடுக்க வேண்டும் என்ற எண்ணம் உதயம் புரொடக்ஷன்ஸ நிறுவனத்தினருக்குத் தோன்றியது.

'எம்.ஜி.ஆருக்கு பொருத்தமாக கதை சொல்ற அளவிற்கு ஒரு கதாசிரியர் வேணும்... அப்படிக் கிடைத்தாலும் அவரோடு ஒத்துப்போகிற அளவிற்கு அந்த கதாசிரியர் இருக்க வேண்டும். எம்.ஜி.ஆர் சொல்கின்ற நியாயமான மாற்றங்களை ஏற்றுக் கொள்ளக் கூடியவராக இருக்க வேண்டும்'. தேடி அலைந்ததில் அப்படி யாரும் கிடைக்கவில்லை.

MGR, the savior of true loyalties

இறுதியில் இந்தியில் வெளிவந்த ஒரு படத்தைப் போய் பார்த்தார்கள். அந்தப் படம் எம்.ஜி.ஆருக்குப் பொருத்தமாக இருக்கும் என்று நம்பினார்கள். அந்தப் படத்தின் தமிழ் ரீமேக் வாங்குவதற்கு முயற்சி செய்தார்கள். இந்தச் செய்தி எம்.ஜி.ஆர் காதுகளுக்கு எட்டியது. உதயம் புரொடக்ஷன்ஸ் தயாரிப்பாளர்களை நேரில் அழைத்துப் பேசினார். என்னப் படம் அது? யாருடைய படம் என்று கேட்டவருக்கு பதில் சொன்னார்கள். அது சாந்தாராமின் 'தோ ஹாங்கி பாராத்'. சாந்தாராமை எம்.ஜி.ஆர் தனது குருவாக வைத்து மதித்தவர்.

"சாந்தாராமின் படம்னா போட்டுக் காட்டுங்க பார்க்கலாம்," என்றார் எம்.ஜி.ஆர். உதயம் புரொடக்ஷன்ஸ் மணியனும், வித்வான் வே.லட்சுமணனும் பார்க்க ஏற்பாடு செய்தார்கள்.

எம்.ஜி.ஆர். படத்தைப் பார்த்தார். ஒரு ஜெயிலர் கொடூரமான கைதிகளை தனது பொறுப்பில் வெளியே கொண்டு வந்து தனி இடத்தில் வைத்து அவர்களைத் திருத்துவதற்கு முயற்சி செய்கிறார். இறுதியில் ஜெயிலரை கொலை செய்துவிட்டு கைதிகள் தப்பி ஓடி விடுகிறார்கள். இதுதான் இந்திப் படத்தின் கதை.

படத்தைப் பார்த்த எம்.ஜி.ஆர். எந்த கருத்தும் சொல்லாமல் எழுந்து வெளியே போனார்.

அவரைத் தொடர்ந்து போன மணியனும் வித்வான் லட்சுமணனும், "இந்தப் படத்தின் தமிழ் ரீமேக் ரைட்ஸை வாங்கி விடலாமா," என்று கேட்டார்கள்.

"இந்தப் படத்தை அப்படியே எடுக்க வேண்டும் என்றால் எனக்குப் பொருத்தமாக இருக்காது. கிளைமாக்ஸை மாற்ற வேண்டும். ஜெயிலரால் வெளியே அழைத்து வரப்பட்ட கைதிகள் இறுதியில் திருந்தினார்கள் என முடிய வேண்டும். எனது படம் பார்க்க வருகிறவர்களுக்கு நம்பிக்கையைக் கொடுக்க வேண்டும்.

இந்தப் படத்தை உண்மையான கைதிகளே பார்த்தாலும் அவர்கள்மனம் திருந்த வேண்டும். அப்படிப்பட்ட கருத்தைதான் நாம் சொல்ல வேண்டும் இதற்கு நீங்கள் சம்மதித்தால் ரைட்ஸ் வாங்குங்கள் இல்லையென்றால் என்னை விட்டுவிடுங்கள். வேறு யாரையாவது வைத்து படத்தை எடுத்து கொள்ளுங்கள்," என்றார் எம்.ஜி.ஆர்.

எம்.ஜி.ஆரின் பேச்சைக் கேட்டதும் உதயம் புரொடக்ஷன்ஸ் அதிபர்கள் அலறினார்கள்.

"அய்யய்யோ... உங்களை வைத்துதான் நாங்கள் படம் எடுப்போம். நீங்கள் சொன்னபடியே இந்தப்படத்தின் கிளைமாக்ஸ் காட்சியை மாற்றி எடுப்போம்,"

என்றார்கள்.

MGR, the savior of true loyalties

அதற்கு எம்.ஜி.ஆர், "க்ளைமாக்ஸ் காட்சியை மாற்றி எடுப்பதாக இருந்தால் சாந்தாராமிடம் எடுத்துச் சொல்லி அதற்கும் அனுமதி பெற்று வாருங்கள்," என்று கூறி அனுப்பிவிட்டார்.

எம்.ஜி.ஆரின் கருத்தை சாந்தாராமிடம் தெரிவித்து, அனுமதி பெற்று சில மாற்றங்களுடன், கிளைமாக்ஸ் காட்சியையும் மாற்றி படத்தை எடுத்தார்கள். படமும் வெளியே வந்து பெரும் வெற்றிப் பெற்றது. அந்தப்படம்தான் 'பல்லாண்டு வாழ்க'!

எம்.ஜி.ஆரைப் பொருத்தவரை தன்னைத்தேடி வரும் வாய்ப்புகளை அப்படியே ஏற்றுக் கொள்வதில்லை. தன்னுடைய படத்தைப் பார்க்க வரும் ரசிகர்களுக்கு அதன்மூலம் நம்பிக்கையூட்டும் வகையில் என்ன கருத்தை சொல்லப் போகிறோம் என்பதற்குத்தான் முக்கியத்துவம் கொடுப்பார்.

அதற்கு ஒரு உதாரணம்தான் இந்த பல்லாண்டு வாழ்க!

- தொடரும்

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X