Vijay: எம்ஜிஆர் முதல் விஜய் வரை.. நடிகராக இருந்து அரசியல் தலைவராக மாறிய பிரபலங்கள்.. இதோ லிஸ்ட்!
சென்னை: தென்னிந்தியாவில் பல சினிமா பிரபலங்கள் அரசியலுக்குள் அடியெடுத்து வைத்து முதலமைச்சராகவே ஆட்சி செய்த பல வரலாறுகள் இங்கே உள்ளன. தமிழ் மற்றும் சினிமா பிரபலங்கள் பலர் அரசியலில் தீவிரம் காட்டி கட்சிகளை தொடங்கியுள்ளனர். தமிழ்நாட்டில் கருணாநிதி, எம்ஜிஆர், ஜெயலலிதா, மு.க. ஸ்டாலின் உள்ளிட்ட பலரும் சினிமாவில் இருந்து அரசியலுக்கு வந்தவர்கள் தான்.
சினிமாவில் புரட்சித் தலைவராக இருந்த எம்ஜிஆர் திமுகவில் இணைந்து அதன் பின்னர் அதிமுக எனும் கட்சியை உருவாக்கி முதலமைச்சராக மாறி மாபெரும் சாதனையை நிகழ்த்தி காட்டினார். சினிமா நடிகர்கள் மீது மக்களுக்கு இருந்த வரவேற்பை ஒட்டுமொத்தமாக ஓட்டுக்களாக மாற்றி அரசியலில் சாதித்து முடி சூடியவர் எம்ஜிஆர். அவரை தொடர்ந்து பலர் சினிமாவில் இருந்து அரசியலுக்கு சென்று புதிதாக கட்சியை தொடங்கி உள்ளனர்.

எம்ஜிஆர்: 1972ம் ஆண்டு திமுகவில் இருந்து விலகிய எம்ஜிஆர் அதே ஆண்டு அண்ணா திராவிட முன்னேற்ற கழகத்தை ஆரம்பித்தார் எம்ஜிஆர். 1977ம் ஆண்டு 5 ஆண்டுகளில் தமிழ்நாட்டின் முதலமைச்சராக மாறி மாஸ் காட்டினார். திமுகவுக்கு எதிராக அதிமுக எனும் பலம் பொருந்திய கட்சியை உருவாக்கிய எம்ஜிஆர் 3 முறை தமிழ்நாட்டின் முதல்வராக தேர்ந்தெடுக்கப்பட்டு ஆட்சி செய்துள்ளார். அவரது மறைவுக்கு பிறகு ஜெயலலிதா அதிமுகவை மீண்டும் மாபெரும் கட்சியாக மாற்றி முதலமைச்சராக 6 முறை தேர்வானார்.

சிவாஜி முதல் கமல்ஹாசன் வரை: ஹீரோவாக இருந்து அரசியலில் கட்சி ஆரம்பித்து எம்ஜிஆர் சாதித்த அளவுக்கு அரசியலில் மற்ற எந்தவொரு நடிகராலும் பெரிதாக சாதிக்க முடியவில்லை. சினிமாவில் எம்ஜிஆருக்கு பலத்த போட்டியாக இருந்த சிவாஜி 1988ம் ஆண்டு தமிழக முன்னேற்ற முன்னணி கட்சியை ஆரம்பித்தார். ஆனால், சிவாஜி அரசியலில் படுதோல்வியை சந்தித்தார். 1989ம் ஆண்டு பாக்கியராஜ் எம்ஜிஆர் மக்கள் முன்னேற்ற கழகம் ஆரம்பித்தார்.
1991ல் டி. ராஜேந்தர் தாயக மறுமலர்ச்சி கழகம் ஆரம்பித்தார். அதன் பின்னர் லட்சிய திமுக என பெயர் மாற்றம் செய்தார். 2005ம் ஆண்டு விஜயகாந்த் தேமுதிகவை ஆரம்பித்து மற்ற நடிகர்களை விட தனது பலத்தை அரசியலில் காட்டி எதிர்கட்சி தலைவராகவே மாறினார். நிச்சயம் முதல்வராக மாறுவார் என எதிர்பார்த்த நிலையில், அவர் உடல்நலக்குறைவு காரணமாக முடங்கி விட்டார். சமீபத்தில் அவர் உயிரிழந்தது மக்களை பெரும் சோகத்தில் ஆழ்த்தியது.
2007ம் ஆண்டு சரத்குமார் அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சியை ஆரம்பித்தார். 2015ல் கருணாஸ் முக்குலத்தோர் புலிப்படை கட்சியை ஆரம்பித்தார். 2018ல் கார்த்தி மனித உரிமை காக்கும் கட்சியை தொடங்கினார். 2018ம் ஆண்டு கமல்ஹாசன் மக்கள் நீதி மய்யம் கட்சியை ஆரம்பித்தார். ரஜினிகாந்த் அரசியலுக்கு வராத நிலையில், கமல்ஹாசன் அரசியலில் களம் கண்ட போது பெரும் எதிர்பார்ப்பு நிலவியது. ஆனால், தேர்தலில் கமல்ஹாசன் கூட கோவை தொகுதியில் பாஜக வானதி சீனிவாசனிடம் தோற்றது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. மக்கள் இனிமேல் சினிமா நடிகர்களை நம்பவில்லை என்றும் கருத்துக்கள் கிளம்பின.
விஜய்யின் அரசியல் எப்படி இருக்கும்?: இந்நிலையில், 2024ம் ஆண்டு நடிகர் விஜய் தமிழக வெற்றி கழகம் எனும் அரசியல் கட்சியை ஆரம்பித்து இருக்கிறார். 2026ம் ஆண்டு நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெறுவாரா? அல்லது சரிவை சந்திப்பாரா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும். விஜய் படத்துக்கு முந்தியடித்து செல்லும் மக்கள் அதே அளவுக்கு ஓட்டுக்களை போடுவார்களா? விஜயகாந்தை போல விஜய்யை சோஷியல் மீடியாவில் ட்ரோல் பண்ண ஆரம்பிப்பார்களா? என ஏகப்பட்ட கேள்விகள் கிளம்பி உள்ளன.


Click it and Unblock the Notifications











