Michael Gambon: ஹாரிபாட்டர் பட புகழ் மைக்கேல் காம்பன் காலமானார்... ஹாலிவுட் ரசிகர்கள் சோகம்
வாஷிங்டன்: ஹாலிவுட்டின் பழம்பெரும் நடிகர் மைக்கேல் காம்பன் உடல்நலக்குறைவால் இன்று காலமானார்.
82 வயதான மைக்கேல் காம்பன் நிமோனியா பாதிப்பால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.
ஆனால், சிகிச்சை பலனில்லாமல் மைக்கேல் காம்பன் உயிரிழந்ததாக அவரது குடும்பத்தினர் அறிவித்துள்ளனர்.
ஹாரி பாட்டர் போன்ற படங்கள் மூலம் பிரபலமான மைக்கேல் காம்பன் மறைவு, ஹாலிவுட் ரசிகர்களிடம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

ஹாலிவுட் நடிகர் மைக்கேல் காம்பன் மறைவு: ஹாலிவுட் திரையுலகின் பழம்பெரும் நடிகரான மைக்கேல் காம்பன், இன்று உடல்நலக்குறைவால் காலமானார். அவருக்கு வயது 82. 1940ம் ஆண்டு பிறந்த இவர், தனது 22வது வயதில் சினிமாவில் அறிமுகமானார். நாடக நடிகராக இருந்து ஹாலிவுட்டில் அடியெடுத்து வைத்த மைக்கேல் காம்பன், பின்னாட்களில் மிகப் பெரிய ஆளுமையாக உருவெடுத்தார்.
ஹரி பாட்டர் பட சீரிஸில் ஆறு படங்களில் நடித்துள்ளார் மைக்கேல் காம்பன். இந்தப் படத்தில் புரொபசர் ஆல்பஸ் டம்பில்டோர் என்ற கேரக்டரில் நடித்து ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் மைக்கேல் காம்பன். ஹாரி பட்டர் தவிர Gosford Park, Open Range, பிரிட்டிஷ் கேங்ஸ்டர் படமான Layer Cake, Amazing Grace, The King's Speech உட்பட பல படங்களில் நடித்துள்ளார்.
நான்கு முறை பிரிட்டிஷ் அகாடமி விருதுகளை வென்றுள்ள மைக்கேல் காம்பன், ஹாலிவுட்டின் மிக முக்கியமான நடிகர்களில் ஒருவர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் கடந்த சில தினங்களாக நிமோனியா பாதிப்பால் அவதிப்பட்டு வந்துள்ளார். இதனையடுத்து வாஷிங்டனில் உள்ள பிரபல மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். ஆனால், வயது முதிர்வு காரணமாக சிகிச்சை பலனளிக்கவில்லை என சொல்லப்படுகிறது.
இதனால், இன்று மைக்கேல் காம்பன் உயிரிழந்தார். இதனை அவரது மனைவியும் மகனும் உறுதி செய்துள்ளனர். மேலும், மைக்கேல் காம்பன் குணமடைய வேண்டும் என பிரார்த்தனை செய்த ரசிகர்களுக்கு நன்றி எனவும் உருக்கமாக தெரிவித்துள்ளனர். மைக்கேல் காம்பன் மறைவை அறிந்த ரசிகர்கள் அவருக்கு இரங்கல் தெரிவித்து வருகின்றனர். அதேபோல் ஹாலிவுட் நட்சத்திரங்களும் மைக்கேல் காம்பன் மறைவுக்கு இரங்கல் தெரிவித்தும், நேரில் சென்று அஞ்சலி செலுத்தியும் வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











