Michelle Yeoh: 60 வயதில் திருமணம் செய்துக் கொண்ட ஆஸ்கர் வென்ற நடிகை.. அந்த F1 ரேஸர் வயசு தெரியுமா?
மலேசியா: பாயும் புலி பதுங்கும் நாகம், மம்மி 3 உள்ளிட்ட பல படங்களில் நடித்து பிரபலமான ஆசிய நடிகை மிச்செல் யோ தனது நீண்ட நாள் காதலரான F1 ரேஸர் ஜீன் டோட்டை மணந்துள்ளார்.
கிட்டத்தட்ட 19 வருடங்களுக்கு முன்பாக இருவருக்கும் நிச்சயதார்த்தம் நடைபெற்ற நிலையில், இருவரும் தங்கள் திருமணத்தை தள்ளிப் போட்டுள்ளனர்.
இந்நிலையில், சமீபத்தில் நண்பர்கள் மற்றும் குடும்ப உறுப்பினர்கள் சூழ நடந்த திருமண புகைப்படங்களை 77 வயது மாப்பிள்ளை தனது இன்ஸ்டாகிராமில் பதிவிட்டு ரசிகர்களை ஆச்சர்யத்தில் ஆழ்த்தி உள்ளார்.

ஆஸ்கர் வென்ற மிச்செல் யோ: இந்த ஆண்டு நடைபெற்ற ஆஸ்கர் விருது விழாவில் சிறந்த நடிகைக்கான விருதை ஆசிய நடிகை மிச்செல் யோ வென்றார். Everything, Everywhere All at Once படத்தில் மிரட்டலான நடிப்பை மிச்செல் யோ வெளிப்படுத்திய நிலையில், ஆஸ்கர் விருதை வென்ற முதல் ஆசிய நடிகை என்கிற பெயரையும் தட்டிச் சென்றார்.
மலேசியாவை சேர்ந்த மிச்செல் யோ ஜாக்கி சான், ஜெட்லி படங்களில் நடித்து பல ஆண்டுகளாகவே உலக ரசிகர்களை கவர்ந்துள்ளார். பாயும் புலி பதுங்கும் நாகம், மம்மி 3 உள்ளிட்ட படங்கள் இந்திய ரசிகர்களையும் குறிப்பாக தமிழ் சினிமா ரசிகர்களையும் வெகுவாக கவர்ந்தது குறிப்பிடத்தக்கது.

77 வயது நபருடன் திருமணம்: 60 வயதாகும் நடிகை மிச்செல் யோ 77 வயதான முன்னாள் F1 ரேசர் ஜீன் டோட்டை திருமணம் செய்துக் கொண்டார். வெள்ளை நிற திருமண ஆடை மற்றும் சாம்பைன் கலர் திருமண ஆடை என தனது திருமண நிகழ்வுகளுக்கு இரு அழகான உடைகளை அணிந்துக் கொண்டு அழகு பதுமையாக மிச்செல் யோ காட்சியளித்த புகைப்படங்களை அவரது கணவர் ஜீன் டோட் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

19 ஆண்டுகள் கழித்து: டிக்ஸன் பூன் என்பவரை 1988ம் ஆண்டு திருமணம் செய்துக் கொண்ட மிச்செல் யோ 3 ஆண்டுகளில் அவரை விவாகரத்து செய்து பிரிந்தார். 1991ம் ஆண்டு விவாகரத்து பெற்ற நிலையில், அதன் பின்னர் ஜீன் டோட் உடன் நிச்சயதார்த்தம் செய்துக் கொண்டார். ஆனால், இருவரும் திருமணம் செய்துக் கொள்ள சுமார் 6992 நாட்களை எடுத்துக் கொண்டது தான் இதில் மிகப்பெரிய வேடிக்கையான விஷயமாக பார்க்கப்படுகிறது.
பல வருடங்கள் கழித்து திருமணம் நடந்துள்ள நிலையில், மிச்செல் யோவையும் ஜீன் டோட்டையும் ஹாலிவுட் பிரபலங்கள் முதல் ஆசிய பிரபலங்கள், ரசிகர்கள் என பலரும் வாழ்த்தி வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











