பெண்களின் வலியை கூறிய மிக மிக அவசரம்... 2 ஆண்டு கொண்டாட்டத்தில் படக்குழு
சென்னை : பெண்களின் வலியை கூறிய படங்கள் கோலிவுட்டில் மிகவும் குறைவு.
அந்த வகையில் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு வெளியான மிக மிக அவசரம் படம் கவனத்தை பெற்றது.
இந்நிலையில் இந்தப் படம் வெளியாகி தற்போது இரண்டு ஆண்டுகளை கடந்துள்ளது.

பெண்களின் வலி
பெண்களின் வலிகளை அவர்களது உடல் தேவைகளை, இயற்கை உபாதைகளை குறித்து பேசிய படங்கள் தமிழில் மிகவும் குறைவு. அவர்களது வாழ்வியல் பிரச்சினைகளை அலசிய அளவிற்கு இத்தகைய பிரச்சினைகள் அதிகமாக பேசப்படவில்லை என்பதே உண்மை.

மிக மிக அவசரம் படம்
இந்நிலையில் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு ரிலீசான மிக மிக அவசரம் படம் பெண்களின் இயற்கை உபாதைகளை குறித்து பேசி கவனம் பெற்றது. சாலைகளில் காவலுக்கு நிற்கும் பெண் போலீசார் அவர்களது இயற்கை உபாதைகளை எவ்வாறு எதிர்கொள்வார்கள் என்பது குறித்து பேசியது இந்தப் படம்.

பெண் காவலர் பாத்திரம்
தன்னுடைய உயரதிகாரியின் பழிவாங்கலுக்கு உட்பட்டு மேம்பாலத்தில் காவலுக்கு நிறுத்தப்படுகிறார் பெண் காவலர் ஸ்ரீபிரியங்கா. விவிஐபியின் வருகைக்காக நிறுத்தப்படும் அவர் அந்த இடத்தில் இருந்து வேறு இடத்திற்கு செல்ல முடியாமல் தன்னுடைய இயற்கை உபாதையை கழிக்க முடியாமல் மிகுந்த அவதிக்குள்ளாகிறார்.

பரிதாபத்தை ஏற்படுத்திய பாத்திரம்
அவருக்கு உதவி செய்ய நினைக்கும் அவரது காதலருக்கும் அது சாத்தியப்படாமல் போக, ஸ்ரீபிரியங்கா என்ன செய்கிறார் என்பதே படத்தின் கதையோட்டமாக அமைந்தது. ஸ்ரீபிரியங்காவின் இந்த நிலை குறித்து படத்தை பார்த்தவர்கள் அனைவரும் பரிதாபம் கொள்ளும் வகையில் காட்சிகள் அமைந்திருந்தன.

கலவையான விமர்சனம்
படத்தின் ஆம்புலன்ஸ் டிரைவராக வரும் ஸ்ரீபிரியங்காவின் காதலர், சீமான், ராமதாஸ், வீகே சுந்தர் உள்ளிட்டவர்கள் அவர்களது கதாபாத்திரத்தை உணர்ந்து செய்திருந்தனர். ஆயினும் திரைக்கதையில் இன்னும் கூடுதல் பலத்தை சேர்த்திருக்கலாம் என்ற விமர்சனத்தையும் படம் எதிர்கொண்டது.

தமிழக அரசின் உத்தரவு
இந்தப் படம் ஏற்படுத்திய பாதிப்பையடுத்து சாலைகளில் பெண் காவலர்களை பணியமர்த்தாமல் அவர்களை வேறு வேலைகளுக்கு உபயோகப்படுத்த வேண்டும் என்று கடந்த சில மாதங்களுக்கு முன்பு தமிழக அரசு உத்தரவு பிறப்பித்தது. இந்த உத்தரவு மிகுந்த வரவேற்பையும் பெற்றது.

2 ஆண்டு கொண்டாட்டம்
இந்நிலையில் இந்தப் படம் ரிலீசாகி தற்போது இரண்டு ஆண்டுகளை கடந்துள்ளது. இதையொட்டி படக்குழுவினர் கொண்டாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். படத்தின் இயக்குநர் சுரேஷ் காமாட்சி, நாட்கள் வேகமாக நகர்ந்தாலும், இந்தப் படம் ஏற்படுத்திய பாதிப்பு தற்போதும் உள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.


Click it and Unblock the Notifications











