பயந்துட்டேன்.. ரஜினிகாந்துக்கு பதிலடி.. நாளைக்கு இப்படித்தான் வைப்பாங்க.. உதயநிதி கலாய்!
சென்னை: தமிழ் சினிமாவில் தயாரிப்பாளராக, விநோகஸ்தராக மற்றும் நடிகராக இருந்த உதயநிதி ஸ்டாலின், கடந்த 2021ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்ற பொதுத் தேர்தலில் திமுக சார்பாக போட்டியிட்டு சட்டமன்ற உறுப்பினர் ஆனார். அதன் பின்னர் படங்களில் நடிப்பதை நிறுத்திக் கொண்டார். விளையாட்டுத்துறை அமைச்சரான பின்னர், மாமன்னன் என்ற படத்தில் நடித்தார். இந்நிலையில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், துணை முதலமைச்சராக அறிவிக்கப்படவுள்ளார் என்ற பேச்சு கடந்த 6 மாதங்களுக்கு மேலாக உலா வருகின்றது. இது தொடர்பாக சூப்பர் ஸ்டார் ரஜினியிடன் கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு அவரது ரியாக்ஷன் மற்றும் பதிலுக்கு அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நகைச்சுவையாக பதில் அளித்துள்ளார்.
ஏற்கனவே குறிப்பிட்டதைப்போல், அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், துணை முதலமைச்சராக அறிவிக்கப்படவுள்ளார் என்ற பேச்சு கடந்த 6 மாதங்களுக்கு மேலாக உலா வருகின்றது. இது தொடர்பாக பல அரசியல் தலைவர்களிடம் பத்திரிகையாளர்கள் கேள்வி எழுப்பினர். இது தொடர்பாக முதலமைச்சரிடமே கேள்வி எழுப்பப்பட்டது. ஆனால் அவர் அதற்கு மறுப்பு தெரிவிக்காமல், வேறுவிதமாக பதில் அளித்தார். அதேபோல் அமைச்சர் உதயநிதி ஸ்டாலினிடம் இது தொடர்பாக கேள்வி கேட்டபோது முதலமைச்சர்தான் அறிவிப்பார், அது முதலமைச்சர் எடுக்கும் முடிவு எனக் கூறினார்.

அண்மையில் நடைபெற்ற திமுக நிகழ்ச்சியில் கூட சில திமுக நிர்வாகிகள் சிலர் உதயநிதியை துணை முதலமைச்சராக அறிவியுங்கள் என பகிரங்கமாக கோரிக்கை வைத்தனர். இப்படியான நிலையில் வேட்டையன் படத்தின் இசை வெளியீட்டு விழாவில் கலந்து கொள்ள சென்னைக்கு வந்தார் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த். அவரிடம் செய்தியாளர்கள் வேட்டையன் படம் குறித்தும், கூலி படம் குறித்தும் பல்வேறு கேள்விகளை எழுப்பினர். அதற்கு பதில் அளித்துக் கொண்டு இருக்கும்போது, பத்திரிக்கையாளர் ஒருவர், அமைச்சர் உதயநிதியை துணை முதலமைச்சராக அறிவிக்கப் போகின்றார்களாமே? அது குறித்து உங்கள் கருத்து என்ன? என கேள்வி எழுப்பினார்.

உதயநிதி: உடனே அந்த பத்திரிகையாளரை முறைத்துப் பார்த்த ரஜினிகாந்த், என்னிடம் அரசியல் குறித்த கேள்விகளைக் கேட்கவேண்டாம் என ஏற்கனவே கூறியதாகக் கூறினார். இது தொடர்பான செய்திகள் இணையத்தில் வேகமாக பரவியது. இந்த செய்தியை இணையத்தில் பார்த்த அமைச்சர் உதயநிதி இது தொடர்பாக நிகழ்ச்சி ஒன்றில் பேசுகையில் குறிப்பிட்டார். அதில், " இன்றைக்கு ஒரு செய்தி பார்த்தேன். அதனைப் பார்த்தும் எனக்கு பயம்வந்துவிட்டது. செய்தியின் தலைப்பு, "உதயநிதி முதலமைச்சர் ஆகின்றாரா? சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் ஆவேசம்" என இருந்தது. துணை முதலமைச்சர் குறித்த அறிவிப்பு இன்னும் வரவில்லை. படப்பிடிப்புக்காக விமானத்தை பிடிக்கச் செல்பவரிடம் பத்திரிகையாளர்கள் இவ்வாறு கேள்வி கேட்கின்றனர். ஆனால் ' என்னிடம் அரசியல் கேள்வி கேட்காதீங்க' என சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தெளிவாக சொல்லிவிட்டார்.

பதிலடி: அந்த செய்தியைப் பார்த்தால் அனைவருக்கும் என்ன தோன்றும்? பத்திரிகையாளர்களுக்கு நான் ஒரு தலைப்பு தருகின்றேன், "சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துக்கு அமைச்சர் உதயநிதி பதிலடி" என நகைச்சுவையாக கூறினார். இந்த வீடியோ தற்போது இணையத்தில் வேகமாக பரவி வருகின்றது.


Click it and Unblock the Notifications











