மின்மினி! மணி சார் படம் போல இருக்கு.. வெற்றி பெற வாய்ப்பு இருந்தும் நழுவ விட்டுட்டாங்க - ப்ளூ சட்டை
சென்னை: நேற்றைய தினம் அதாவது ஆகஸ்ட் 9ஆம் தேதி நடிகர் பிரசாந்த்தின் 50வது படமான அந்தகன் படம் ரிலீஸ் ஆனது. இந்தப் படத்துடன் மொத்தம் 8 படங்கள் ரிலீஸ் ஆனது. இதில் அந்தகன் படத்திற்குப் பின்னர் பலரது கவனத்தை ஈர்த்த படம் என்றால் அது மின்மினி படத்தைக் கூறலாம். இந்த படம் குறித்து சினிமா விமர்சகர் ப்ளூ சட்டை மாறன் விமர்சனம் செய்துள்ளார். அது குறித்து இந்த தொகுப்பில் காணலாம்.
சில்லுகருப்பட்டி என்ற படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானவர் ஹலிதா ஷமீம். இவர் இயக்கத்தில் இன்று வெளியாகியுள்ள மின்மினி படத்தினைஆங்கர் பே ஸ்டுடியோஸ் தயாரித்துள்ள இப்படத்தில், எஸ்தர் அனில், பிரவின் கிஷோர் மற்றும் கௌரவ் காளை ஆகியோர் முக்கிய கேரக்டரில் நடித்துள்ளனர்.

இப்படம் குழந்தைகளாக இருந்து இளம் வயதினராக மாறுபவர்களின் கதை என்பதால் நடிப்பவர்கள் குழந்தை பருவத்தில் இருக்கும் போது 2015 ஆம் ஆண்டு முதற்கட்ட படப்பிடிப்பு தொடங்கி உண்மையிலே அவர்கள் இளம் வயதினராக வளர்ந்த பின்னர் அடுத்தகட்ட படப்பிடிப்பு கிட்டத்தட்ட 8 வருடங்கள் கழித்து கடந்த 2022ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. பின்பு அந்த ஆண்டே மொத்தப் படப்பிடிப்பும் முடிக்கப்பட்டது. இது திரையுலகில் இதுவரை யாரும் செய்திராத புதுமுயற்சியாகும் இது. இந்த படத்திற்கு ஏ.ஆர். ரஹ்மானின் மகள் கதீஜா இசை அமைத்துள்ளார்.
8 வருட காத்திருப்பு: பலரது கவனத்தை ஈர்த்த இந்தப் படம் குறித்து பிரபல விமர்சகர் ப்ளூ சட்டை மாறன் பேசுகையில், " வழக்கமாக சினிமாவில் சிறு வயதில் சிறுவர்களை காண்பித்துவிட்டு, வளர்ந்ததும் வேறு ஒருவரைக் காட்டுவார்கள். ஆனால் இந்த படத்தில் அப்படி இல்லாமல் சிறுவயது போர்ஷனில் நடித்த அதே குழந்தைகள் வளர்ந்த பின்னர் நடித்துள்ளனர். இதற்கான படத்தின் இயக்குநர் கிட்டத்தட்ட 8 ஆண்டுகள் காத்திருந்துள்ளார். இந்த விஷயம் இந்தப் படத்தில் மிகவும் சிறப்பான விஷயமாக உள்ளது. இதேபோல் இதற்கு முன்னர் ஹாலிவுட்டில் பாய் குட் என்ற படத்தை எடுத்திருந்தார்கள். அந்தப் படத்தில் 12 ஆண்டுகள் காத்திருந்து கதாநாயகனை மூன்று விதமாக காட்டியிருப்பார்கள். இந்த படம் ஆஸ்கார் வரை சென்றது.

தாக்கம்: எவ்வளவு பொருள் செலவு செய்து ஒரு படத்தை எடுத்தாலும், ஒரு படத்திற்காக எவ்வளவு உழைத்தாலும் படம் பார்ப்பவர்கள் மனதில் தாக்கத்தை ஏற்படுத்த வேண்டும். அதுதான் படம் பார்க்கும் ரசிகர் எதிர்பார்ப்பார். அந்த வகையில் இந்தபடம் என்ன மாதிரியான தாக்கத்தை ஏற்படுத்தியது என்றால், பெரும் பாதிப்பை ஏற்படுத்தவில்லை. படத்தின் முதல் பாதியில் காட்டப்பட்ட பள்ளிப் பருவக் காட்சிகளில் குழந்தைகளின் சேட்டைகளைக் காட்டுகின்றேன் என ரொம்ப அதிகமாகக் காட்டி சலிப்பை ஏற்படுத்திவிட்டனர். திரைக்கதையைப் பொறுத்தவரை எதாவது தடைகள் இருந்து அதனை கடந்து செல்வது போல் இருந்தால் படம் பார்க்கும் ரசிகர்களுக்கு சுவாரஸ்யமாக இருக்கும். ஆனால் படத்தில் அதுபோல எதுவும் இல்லை.
மணி சார் படம்: இந்த படம் ஐடியாவாக மிகவும் சிறப்பான படம். ஹாலிவுட் படமான பாய் குட் படத்தின் ஐடியா மற்றும் உடல் உறுப்பு தானம் என இந்த இரண்டு விஷயங்களைக் கொண்டு மிகவும் சுவாரஸ்யமான படத்தை கொடுத்திருக்கலாம். மிகவும் ஆர்டிஃபிஷியலாக மணி சார் படம்போல எடுத்து வைத்திருகின்றார்கள். வெற்றி பெற வாய்ப்பு இருந்தும் நழுவவிட்டுவிட்டார்கள்" இவ்வாறு ப்ளூ சட்டை மாறன் தனது விமர்சனத்தில் குறிப்பிட்டுள்ளார்.


Click it and Unblock the Notifications











