பாரதிராஜா உடைஞ்சுட்டார்.. உடல்நிலையை பற்றி மனோஜ் கவலைப்படல.. பிரபல நடிகர் ஓபன் டாக்
சென்னை: இயக்குநர் இமயம் பாரதிராஜாவின் மகன் மனோஜ் சில மாதங்களுக்கு முன்பு உடல்நல குறைவால் உயிரிழந்தார். ஏற்கனவே அவருக்கு இதய அறுவை சிகிச்சை செய்யப்பட்டிருந்த சூழலில்; திடீரென மீண்டும் அவருக்கு பிரச்னை ஏற்பட்டதால் அவரது உயிர் பிரிந்தது. அவரது உயிரிழப்பு ஒட்டுமொத்த குடும்பத்தை சோகத்தில் தள்ளியிருக்கிறது. இந்நிலையில் நடன கலைஞரும், நடிகருமான மின்னலே டேனி மனோஜ் குறித்து பேசியிருக்கிறார்.
இயக்குநர்களில் சிறந்தவர் என்று பாரதிராஜா பெயர் எடுத்திருந்தாலும் அவருக்கு முதல் ஆசையே நடிகராக வேண்டுமென்பதுதான். ஆனால் கால சூழ்நிலைகளால் அவர் இயக்குநர் அவதாரம் எடுத்துவிட்டார். இருப்பினும் தன்னால் நடிகராக முடியாத ஆசையை தனது மகனை வைத்து நிறைவேற்ற நினைத்தார். அதன்படி தாஜ்மஹால் படத்தில் ஹீரோவாக அறிமுகமானார் மனோஜ். அதேசமயம் மனோஜுக்கோ இயக்குநராக வேண்டுமென்ற ஆசைதான் இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
தாஜ்மஹால் தோல்வி: தந்தையின் ஆசைக்காக நடிகராக மாறிய மனோஜ் தன்னுடைய முதல் படத்திலேயே தோல்வியை சந்தித்தார். பாரதிராஜாவின் இயக்கம், ஏ.ஆர்.ரஹ்மானின் இசை என நல்ல கூட்டணி இருந்தாலும் படத்தின் கதை, லொகேஷன் தேர்வு உள்ளிட்டவைகளில் இயக்குநர் சொதப்பியதால் இந்தத் தோல்வி வந்துவிட்டதாக இன்றளவும் ரசிகர்கள் ஓபனாகவே சொல்வதுண்டு. முதல் படமே தோல்வியடைந்தது கொஞ்சம் அப்செட்டைத்தான் அவருக்கும் அவரது தந்தைக்கும் கொடுத்தது.

வருஷமெல்லாம் வசந்தம்: தாஜ்மஹால் படத்துக்கு பிறகு அவர் வருஷமெல்லாம் வசந்தாம், சமுத்திரம் உள்ளிட்ட படங்களில் நடித்தார். அவற்றில் வருஷமெல்லாம் வசந்தம் படம் மட்டும்தான் ஓரளவுக்கு வரவேற்பை கொடுத்தது. தாஜ்மஹால் படத்துக்கு பதிலாக அந்தப் படம் முதல் படமாக வந்திருந்தால் ஒருவேளை மனோஜின் திரைப்பயணம் வேறு மாதிரியாக இருந்திருக்குமோ என்ற பேச்சு இன்றளவும் இருக்கிறது. தொடர்ந்து அவர் நடித்த அல்லி அர்ஜுனா, சாதூரியன் உள்ளிட்ட படங்கள் தோல்வியடைந்தன. சாதூரியன் படத்தில் நடித்தபோதுதான் அவர் காதலித்து திருமணம் செய்துகொண்டார்.
இயக்குநர் அவதாரம்: நடிகராக வெல்ல முடியாத மனோஜ் இயக்குநராக முடிவு செய்தார். ஏற்கனவே மணிரத்னம், பாரதிராஜாவிடம் உதவி இயக்குநராக இருந்தார். மேலும் எந்திரன் திரைப்படத்தில் ஷங்கரிடமும் பணியாற்றினார். எனவே அந்த அனுபவங்களை வைத்துக்கொண்டு மார்கழி திங்கள் படத்தை இயக்கினார். இதில் புதுமுகம் ஹீரோவாக நடித்தார். மேலும் பாரதிராஜாவும் முக்கியமான ரோலை ஏற்றிருந்தார். ஆனால் அந்தப் படமும் தோல்வியைத்தான் சந்தித்தது.
உயிரிழந்த மனோஜ்: நிலைமை இப்படி இருக்க அவருக்கு சில மாதங்களுக்கு முன்பு இதய அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. அதனையடுத்து நீலாங்கரையில் இருக்கும் தனது வீட்டில் ஓய்வெடுத்தார் அவர். எல்லாம் நல்லபடியாக போய்க்கொண்டிருந்த சூழலில் திடீரென அவருக்கு நெஞ்சுவலி ஏற்பட்டது. அதன் காரணமாக உயிரிழந்தார். அவரது உயிரிழப்பு பாரதிராஜா உள்ளிட்ட குடும்பத்தினரை பெரிய சோகத்தில் தள்ளியிருக்கிறது.
மின்னலே டேனி பேட்டி: இந்நிலையில் மனோஜுடன் வருஷமெல்லாம் வசந்தம் படத்தில் நடித்த நடிகரும், நடன கலைஞருமான மின்னலே டேனி மனோஜ் குறித்து பேசுகையில், "வருஷமெல்லாம் வசந்தம் படத்தில் நடித்தபோது மனோஜுடன் நெருங்கி பழகும் வாய்ப்பு கிடைத்தது. அப்போது ஷூட்டிங் ஸ்பாட்டுக்கு அடிக்கடி பாரதிராஜா வந்து திருத்தங்கள் சொல்வார். அப்போதெல்லாம் இப்படி ஒரு அப்பா நமக்கு இல்லையே என்ற ஏக்கம் இருக்கும். அதேபோல் மனோஜ் வெளிநாட்டில் படித்தவர். ஆங்கிலம் சரளமாக பேசுவார். நானும் நன்றாக பேசுவேன். இதனாலும் நாங்கள் க்ளோஸ் ஆக ஆரம்பித்தோம். அதேபோல் ஷூட்டிங்கெல்லாம் முடிந்தால் அவர் எங்கள் ரூமுக்கு வந்துவிடுவார்.
ரொம்பவே சிம்ப்பிள்: மனோஜை பொறுத்தவரை ரொம்பவே சிம்ப்பிளாக இருந்தவர். அவருக்கு டயாபெடிக் இருந்தது. ஆனாலும் அவர் அதைப் பற்றியெல்லாம் கவலைப்படவில்லை. மனோஜ் உயிரிழந்த பிறகு நேராக சென்று கிட்டத்தட்ட நான்கு மணி நேரம் நான் அங்குதான் இருந்தேன். பாரதிராஜா ரொம்பவே உடைந்துவிட்டார்" என்றார்.


Click it and Unblock the Notifications











