விதை போட்ட.. மின்சார கனவு, ஜீன்ஸ் படங்கள்.. சட்டுன்னு மாறிய தமிழ் சினிமா ரூட்!
சென்னை: தமிழ் சினிமா.. ஏன் இந்திய சினிமாவுக்கே அப்போதெல்லாம் ஒரு டெம்ப்ளேட் இருந்தது. பணக்காரர்கள் என்றால் கருணையற்றவர்கள், பாசம் இல்லாதவர்கள், ஏழைகளை கொடுமைப்படுத்துவதுதான் அவர்கள் வாழ்நாள் லட்சியம் என்பது போன்ற காட்சியமைப்பு எம்ஜியார் காலம் தொட்டு தொடர்ந்து வந்தது.
ஒரு கட்டத்தில் வெறுத்துப் போய்.. நடிகவேள் எம்.ஆர்.ராதா "நம்ம நாட்டில் இருக்கிறதே, நாலைந்து பணக்காரங்கதான்.. அவர்களையும் ஒழிக்கனும்னு திட்டம் போடுறானுங்க, திட்டம். பாலிடிக்ஸ் பேசுறாங்க, பாலிடிக்ஸ், பரதேசிப் பய பாலிடிக்ஸ்.. என்று ஆதங்கத்தை கொட்டி தீர்த்திருப்பார். ஆனால், அந்த படத்திலும் அவரை நாம் வில்லனாகத்தான் பார்த்தோம்.

எனவேதான் காலம் காலமாக தமிழ் சினிமாவின் கதாநாயகர்கள் ஏழ்மை பின்னணியில் இருந்து வந்தார்கள். வில்லன்கள் பணக்காரர்களாக மட்டுமே இருந்தார்கள். இந்த பாடாவதி டெம்ப்ளேட்டை மாற்றியது ராஜீவ் மேனன் இயக்கத்தில் 1997 ஆம் ஆண்டு 14-ஆம் தேதி வெளியான மின்சார கனவு (minsara kanavu) என்று சொன்னால் அது மிகை இல்லை. அதற்கும் முன்பு என்றால், நாட்டாமை மாதிரி அத்திப்பூத்தாற்போல வந்த படங்களை சுட்டிக் காட்டலாம். ஆனால் அதுவும் நகர்ப்புற சூழலை காட்டவில்லை. தொழில்மயமாதலை காட்டவில்லை.

மின்சார கனவு: மின்சார கனவு படத்தின் கதைக்கரு.. பணக்காரர்களை சுற்றித்தான் நகரும். அரவிந்த்சாமி தந்தை மற்றும் கதாநாயகியின் தந்தை தொழிலதிபர்கள்தான். நாயகி கஜோல் தங்கி படிக்கும் கான்வென்ட், ஊட்டி பின்னணியில் ரிச் லுக் உடன் அமைக்கப்பட்டு இருக்கும். படம் முழுக்கவே ஒரு பணக்கார தோரணை இருப்பது அப்போது புதிதாக பார்க்கப்பட்டது. கணிசமான ரசிகர்களால் இந்த படம் இதயத்துக்கு நெருக்கமானதாக ஏற்றுக் கொள்ளப்பட்டது. இயல்பாகவே பணக்காரர்கள் என்றால் வில்லன்கள் என்ற டெம்ப்ளேட் உடைபட்டது.
பணக்காரர் மீது பாசம்: இந்த படத்திலும் ஏழ்மை பின்னணியில் இருந்து வரும் பிரபுதேவா கதாநாயகியை தட்டிச் சென்றாலும், பணக்காரரான அரவிந்தசாமி மீதுதான் படம் பார்த்தவர்களுக்கு பரிதாபம் வந்தது. பழைய டெம்ப்ளேட் காலாவதியாகிவிட்டது என்பதற்கான அச்சாரம் இந்த படம்தான். எனவே தைரியமாக 2024 மார்ச் 1ம் தேதி மின்சார கனவு திரைப்படம் ரீரிலீஸ் ஆகிறது. அதேநேரம், முழுமையாக இதை மாற்றி, புரட்டி, துவைத்து போட்டது பிரம்மாண்ட இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் வெளியான ஜீன்ஸ்.

ஜீன்ஸ் திரைப்படம்: மின்சார கனவு திரைப்படம் வெளியாகி சரியாக ஓராண்டு கழித்து, 1998 ஆம் ஆண்டு ஏப்ரல் 24-ஆம் தேதி ஜீன்ஸ் வெளியானது. டாப் ஸ்டாராக வலம் வந்த, பிரசாந்த், உலக அழகி ஐஸ்வர்யா ராய் உள்ளிட்ட பலரும் நடித்திருந்த அந்த படம் மற்ற தமிழ் திரைப்படங்களை விட தனித்து தெரிய காரணம் அதில் காட்சிக்கு காட்சி பிரதிபலித்த ரிச்னஸ்தான்.
பாசப் போராட்டம்: கதை ஆரம்பிப்பது அமெரிக்காவில் இருந்துதான் என்பது புதிது என்றால், பணக்கார குடும்பத்துக்குள் நடக்கும் பாசப் போராட்டத்தைதான் படம் விவரித்தது என்பது அதுவரை இல்லாத புதுமையாக இருந்தது. பணக்காரர்களுக்கும், காதல், அன்பு, சகோதரப் பாசம் எல்லாம் இருக்கும் என்பதை பொதுஜனம் புரிந்து கொள்வதற்கு பொட்டில் அடித்தது போல வந்ததுதான் ஜீன்ஸ்.
பிக் பாஸ் மனப்பான்மை: இன்று விஜய் நடித்த "வாரிசு", பணக்காரர்களின் குடும்ப பஞ்சாயத்து பற்றிதானே பேசியது. எந்த தயக்கமும் இல்லாமல் இது போன்ற படங்களை இப்போது பார்ப்பதற்கு தூபம் போட்டது ஜீன்ஸ். பிக் பாஸ் வீட்டுக்குள் என்ன நடக்கிறது என்பதை கண்கொட்டாமல் பார்க்கும் இந்த ரசிக மனப்பான்மையுடன்தான் பிரசாந்த் நடித்த ஜீன்ஸ் திரைப்படத்தை அப்போது மக்கள் பார்த்தனர். பணக்காரர்களின் குடும்பங்களுக்குள் என்ன நடக்கும், அவர்களின் பழக்கவழக்கம் எப்படி இருக்கும் என்பதை அறிந்து கொள்ள ஆசைப்பட்ட மக்களுக்கு தீனி போட்டது ஜீன்ஸ்.
உலகமயமாக்கல்: 1991 ஆம் ஆண்டுக்குப் பிறகு உலகமயமாக்கலால் இந்திய பொருளாதாரம் வளர தொடங்கிய நேரத்தில்தான் திரை உலகத்திலும் இதுபோன்ற மாற்றங்கள் வர ஆரம்பித்தன என்பது பொருத்திப் பார்க்கப்பட வேண்டியதாக இருக்கிறது. பசி, பட்டினி போன்ற விஷயங்களை மையக்கருவாக எடுத்து வறுமையின் நிறம் சிகப்பு.. வரை வெளியிட்டு வந்த தமிழ் சினிமா.. உலகமயமாக்கலுக்கு பிறகு வேறு கோணத்தில் பயணிக்கத் தொடங்கியது நல்ல முன்னெடுப்பு என்றுதான் சொல்ல வேண்டும்.
மின்சார கனவு, ஜீன்ஸ்: சுதந்திரத்திற்கு முன்பு முதல், பின்பு, 1991 வரையிலும் கூட, வெகு நீண்ட காலம் சைக்கிளில் பயணிப்பதையும், ரேடியோவில் செய்திகள், நாடகங்களை கேட்பதையும் மட்டுமே ஒரு சொகுசு என நினைத்திருந்த மக்கள், உலகமயமாக்கலுக்குப் பிறகு தொலைக்காட்சி, மொபைல், இணையதளம், ஸ்மார்ட் போன், பைக், கார் என யோசித்துப் பார்க்க முடியாத அளவுக்கு வேகமாக வளர்ச்சி அடைந்ததால் வறுமை கோட்டுக்கு வெளியே உள்ள மக்களின் எண்ணிக்கையும் அதிகரித்தது. எனவே இப்போது இதெல்லாம் நார்மலைசாகி விட்டது. வறுமையை பற்றி படம் எடுத்தால் அவுட் ஆப் செலபஸ் ஆகிவிட்டது. ஆனால், இந்த மாற்றத்திற்கான விதை, மின்சார கனவும், ஜீன்சும் போட்டது என்பதை மறக்க முடியுமா என்ன?


Click it and Unblock the Notifications











