என்னை போல் அவரால் முடியாது; ரோஹித் ஷர்மாவோடு ஒப்பிடாதீர்கள் - அகில உலக சூப்பர் ஸ்டார் சிவா கோரிக்கை
சென்னை: ரோஹித் ஷர்மாவுடன் என்னை யாரும் ஒப்பிட வேண்டாம் என நடிகர் மிர்ச்சி சிவா கோரிக்கை வைத்திருக்கிறார்.
நடிகர் மிர்ச்சி சிவாவுக்கு என்று பலர் ரசிகர்களாக இருக்கின்றனர். அவரது நகைச்சுவை பேச்சும், டைமிங் காமெடிகளும் பலரை கவர்ந்திருப்பவை. இதுவரை வந்த தமிழ் படங்களை இமிடேட் செய்து இவர் நடித்த தமிழ் படம் மற்றும் தமிழ் படம் 2 ஆகியவை ரசிகர்களின் ஃபேவரைட். இவரை அகில உலக சூப்பர் ஸ்டார் என்றும் ரசிகர்கள் அழைப்பார்கள்.

சிங்கிள் ஷங்கரும் ஸ்மார்ட்ஃபோன் சிம்ரனும்
மிர்ச்சி சிவா இப்போது சிங்கிள் ஷங்கரும் ஸ்மார்ட்ஃபோன் சிம்ரனும் என்ற படத்தில் நடித்திருக்கிறார். இதில் மேகா ஆகாஷ் மற்றும் அஞ்சு சூரினும் நடித்திருக்கிறார்கள். அறிமுக இயக்குநர் விக்னேஷ் ஷா படத்தை இயக்கியிருக்கிறார். இந்தப் படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு நேற்று நடந்தது. இதில் மிர்ச்சி சிவா, நீண்ட நாள்களுக்கு பிறகு திரையில் நடித்திருக்கும் பாடகர் மனோ, தயாரிப்பாளர் பிரபு திலக், இசையமைப்பாளர் லியோன் ஜேம்ஸ், இயக்குநர் விக்னேஷ் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

பத்திரிகையாளர் சந்திப்பில் சிவாவின் பேச்சு
பத்திரிகையாளர் சந்திப்பில் பேசிய மிர்ச்சி சிவா, "கொரோனா ஊரடங்கு முடிந்த பிறகு முதலில் தொடங்கிய படம்தான் சிங்கிள் ஷங்கரும் ஸ்மார்ட்ஃபோன் சிம்ரனும். இந்தக் கதையை விக்னேஷ் ஷா தொலைபேசியில்தான் என்னிடம் சொன்னார். கதை மிகவும் நன்றாக இருந்தது. மேகா ஆகாஷ் கதாநாயகி என்றார்கள். ஆனால் மேகா ஆகாஷை என் கண்ணிலேயே காண்பிக்கவில்லை.

பாடகர் மனோவை டார்ச்சர் செய்தோம்
படப்பிடிப்பு தளத்தில் பாடகர் மனோவை ஏதாவது பாடல் பாட சொல்லி தொடர்ந்து டார்ச்சர் செய்துகொண்டே இருந்தோம். அவரும் எங்களுக்காக பல பாடல்களை பாடினார். இப்படத்தில் என்னுடைய டெலிவரி பாய் டிசர்ட்டை பிளாட்பாரத்தில்தான் வாங்கினோம். தற்போது இயக்குநர் ராம் இயக்கத்தில் ஒரு படத்தில் நடித்துவருகிறேன். அது ஃபீல்குட் படமாக இருக்கும். நான் பொருத்தமாக இருப்பேன் என அவர் நினைத்ததால் என்னை நடிப்பதற்கு அழைத்தார்.

ரோஹித் ஷர்மாவுடன் என்னை ஒப்பிடாதீர்கள்
நான் கிரிக்கெட் வீரர் ரோஹித் ஷர்மா மாதிரி இருப்பதாக மீம்ஸ் வருகிறது என்று என்னிடம் நிறைய பேர் சொல்கிறார்கள். நான் சமூக வலைதளங்களில் ஆக்டிவ்வாக இல்லாததால் அதுகுறித்து எனக்கு தெரிவதில்லை. ரோஹித் ஷர்மா போல் என்னால் கிரிக்கெட் விளையாட முடியாது. அவரால் என்னைப் போல் நடனம் ஆட முடியாது. எனவே என்னை அவருடன் ஒப்பிடாதீர்கள்" என்றார்.
முன்னதாக, சிசிஎல்லில் சிவா விளையாடியபோது அந்தப் புகைப்படத்தை பகிர்ந்த ரசிகர்கள், 'ரோஹித் ஷர்மா ஆஸ்திரேலியாவுடன் டெஸ்ட்டையும் முடித்துவிட்டு இப்போது சிசிஎல்லும் விளையாடுகிறார்' என மீம்ஸ்களை பதிவிட்டது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











