மிஸ் யூ அப்பா.. பாக்யராஜின் இன்ஸ்டாகிராம் பக்கத்தையே டேக் செய்த கிகி.. கண்கலங்க வைத்த பதிவு
சென்னை: திரைக்கதை மன்னன் பாக்யராஜ் மறைந்து சில வாரங்களே ஆன நிலையில், அவரது குடும்பத்தினர் இன்னும் அந்த இழப்பில் இருந்து மீள முடியாமல் தவித்து வருகின்றனர். குறிப்பாக, அவரது மருமகளும், பிரபல தொகுப்பாளருமான கிகி என்கிற கீர்த்தி பகிர்ந்துள்ள இன்ஸ்டாகிராம் பதிவு தற்போது ரசிகர்களை நெகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
கடந்த சில வாரங்களுக்கு முன்பு உடல்நலக்குறைவால் காலமான பாக்யராஜின் மறைவு, தமிழ் சினிமா ரசிகர்களுக்கும், திரையுலகினருக்கும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அவருடன் பணியாற்றியவர்களும், அவரை நெருக்கமாக அறிந்தவர்களும் தொடர்ந்து தங்களது நினைவுகளை பகிர்ந்து வரும் நிலையில், தற்போது குடும்பத்தில் இருந்தே வந்துள்ள ஒரு பதிவு பலரது கவனத்தை ஈர்த்துள்ளது.
கிகி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இரண்டு புகைப்படங்களை பகிர்ந்துள்ளார். முதல் புகைப்படத்தில் மாமனார் பாக்யராஜ், மாமியார் பூர்ணிமா பாக்யராஜ், கணவர் சாந்தனு மற்றும் கிகி ஆகியோர் ஒன்றாக சிரித்த முகத்துடன் நிற்கும் குடும்ப புகைப்படம் இடம்பெற்றுள்ளது. மற்றொரு புகைப்படத்தில், மாலை அணிவிக்கப்பட்ட பாக்யராஜின் உருவப்படம் முன்பு ஊதுபத்தி ஏற்றி, மலர் தூவி, மரியாதை செலுத்தும் காட்சியை கிகி பகிர்ந்துள்ளார்.

உருக்கமான போஸ்ட்: இந்த புகைப்படங்களுடன் "Miss You Appa" என்று உருக்கமாக பதிவிட்டுள்ள கிகி, அதோடு மட்டும் நிற்காமல் பாக்யராஜின் அதிகாரப்பூர்வ இன்ஸ்டாகிராம் பக்கத்தையும் டேக் செய்துள்ளார். அவர் இனி இந்த உலகில் இல்லை என்றாலும், அவரது சமூக வலைதள பக்கத்தையே டேக் செய்து பகிரப்பட்ட இந்த பதிவு ரசிகர்களை கண்கலங்க வைத்துள்ளது. இதற்கு கீழ் ஏராளமான ரசிகர்கள், "அவர் என்றும் நம்முடன் இருப்பார்", "மறக்க முடியாத கலைஞர்", "மிஸ் யூ சார்" என்று ஆறுதல் கருத்துகளை பதிவிட்டு வருகின்றனர்.
மகளாகவே பார்த்த பாக்யராஜ்: பாக்யராஜுக்கும் கிகிக்கும் இருந்த பாசப் பிணைப்பு பல நிகழ்ச்சிகளிலும் வெளிப்பட்டிருக்கிறது. மருமகளாக மட்டுமல்லாமல், மகளைப் போலவே கிகியை பாக்யராஜ் பார்த்து வந்ததாக குடும்பத்தினரே பலமுறை கூறியுள்ளனர். அதனால் தான், அவரது மறைவுக்குப் பிறகும் கிகி தொடர்ந்து அவரை நினைத்து பதிவுகளை பகிர்ந்து வருகிறார் என்றும் ரசிகர்கள் கூறி வருகின்றனர்.

திருமண அறிவிப்பு: சாந்தனு - கிகி காதலித்து வந்த தகவல் பாக்யராஜுக்கு தெரியவந்த பிறகும், அதை எந்தவிதமான சர்ச்சைக்கும் இடமளிக்காமல் மிகவும் கண்ணியமாக கையாண்டவர் பாக்யராஜ்தான். தனது மகனின் திருமணம் குறித்து யாரும் தேவையற்ற யூகங்களையும், வதந்திகளையும் பரப்பக் கூடாது என்பதற்காக, ஊடகங்களுக்கு அவர் தனது கைப்படவே ஒரு கடிதம் எழுதியிருந்தார்.
அந்த கடிதத்தில், "எனது மகன் சாந்தனுவுக்கும், பிரபல தொகுப்பாளரான கீர்த்திக்கும் திருமணம் செய்து வைக்க நாங்கள் முடிவு செய்துள்ளோம். திருமணம் தொடர்பான முறையான அழைப்பிதழை பின்னர் உங்களுக்கு வழங்குகிறேன். இதை அதிகாரப்பூர்வமாகவும், மிகுந்த மகிழ்ச்சியுடனும் தெரிவித்துக் கொள்கிறேன்" என்று பாக்யராஜ் குறிப்பிட்டிருந்தார். அந்த எளிமையும், வெளிப்படைத்தன்மையும் அப்போது பலரது பாராட்டைப் பெற்றது.


Click it and Unblock the Notifications